Published : 12 Jun 2017 10:33 AM
Last Updated : 12 Jun 2017 10:33 AM

இரட்டைச் சுமையில் இந்தியா

உலக அளவில் அதிக மனித வளத்தைக் கொண்டுள்ள நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்ளலாம். ஆனால் ஏழைகளின் விகிதாச்சாரம் அதிகரித்து வருவதால் மிகப் பெரிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கை தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தெரிய வருவது என்னவென்றால், அதிக வருமான பிரிவினரில் சுமார் 20 சதவீதம் பேருக்கு உடல்பருமன் சிக்கல்கள் உருவாகியுள்ளன. குறைந்த வருமான பிரிவினரிடத்தில் பெரும்பான்மை மக்கள் ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர். குறிப்பாக தனிநபர் வருமானம் குறைவாக உள்ள அடித்தட்டு பிரிவினர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல நோய்களுக்கு ஆளாகும் பிரிவினராகவும் உள்ளனர் என்கிறது ஆய்வுகள்.

ஆசிய நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு சிக்கல் மிகப் பெரிய சவால் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். ஏனென்றால் இதனால் இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கம் ஏற்படும் என அச்சம் கொள்கின்றனர்.

அதாவது இந்தியாவில் இப்போது உருவாகியுள்ள இந்த ஊட்டச்சத்து குறைபாடு சிக்கல் மனித வளத்தை பயன்படுத்துவதில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 45 சதவீதபேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும், ஏழைகளில் சுமார் 70 சதவீதத்தினரும் ஊட்டச்சத்து குறைபாடு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

கருவுற்ற தாய்க்கு சமச்சீரான ஊட்டச்சத்து கிடைக்காததால் கருவிலுள்ள குழந்தைக்கு சீரான வளர்ச்சி கிடைப்பதில்லை. இதனால் எடை குறைவான குழந்தைகள் அதிக அளவில் பிறப்பதாக இந்த ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை ஆய்வு செய்கிறபோது போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது. இப்படியான ஊட்டச்சத்து குறைபாடுகளின் பாதிப்பு தனிநபர்களுக்கானது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கும் இளைஞர்களின் சக்தி குறைவதுடன், அவர்களின் செயல் திறனும் பாதிக்கப்படுகிறது. மூளையின் செயலாற்றலை மேம்படுத்துவதிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதன் காரணமாக இளைஞர்களில் குறிப்பிட்ட பிரிவினர் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபடுவதில்லை.

பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகள் பெரும்பாலும் எடைக் குறைந்தே உள்ளனர். கற்றலில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இவர்கள் விரைவிலேயே மூளைச் சோர்வுக்கு ஆளாகின்றனர். இதனால்தான் பள்ளிகளுக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளின் கற்றல் திறன் குறைவாக இருக்கிறது என்றும் கருத்துகள் உள்ளன.

இந்த சிக்கல் உள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தங்களைப் பற்றிய சுய மதிப்பும், தன்னம்பிக்கையும் குறையும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால்தான் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களின் சமூக பங்களிப்பும் குறைவாக உள்ளது. அல்லது தேசிய அளவிலான வளர்ச்சியில் இவர்களால் சிறப்பான இடத்தை அடைய முடிவதில்லை.

இந்த இயல்பு காரணமாக நோய் எதிர்ப்பு ஆற்றல் இவர்களுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் உடலின் முழுமையான ஆற்றலை இவர்களால் பயன்படுத்த முடிவதில்லை. குறிப்பாக விவசாயம் மற்றும் சேவைத் துறையில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பிலும் எதிரொலிக்கிறது. இப்படியாக மனித திறனில் ஏற்படும் இந்த விரயம் இந்திய பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய சுமையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகள் மற்றும் துறைவாரியாக கணக்கிடுகிறபோது ஜிடிபியில் சுமார் 2 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இதன் தாக்கம் உள்ளது.

ஆனால் இப்படியான சமூக பொருளாதாரச் சிக்கலைத் தீர்ப்பதற்கு இந்திய அரசு முனைப்புடன் இல்லை என்பதையே பட்ஜெட் ஒதுக்கீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஊட்டச்சத்து உணவுக்கான சமூக திட்டங்களின் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரம் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் சுகாதார துறைக்கான ஒதுக்கீடு ஜிடிபி மதிப்பில் 1.8 சதவீதம்தான் என்கிறது ஆய்வுகள். இங்கு சுகாதாரம் என்பதற்கான பொருள் தனிநபர் சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியது.

இப்போது இந்தியாவுக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால், அது பரவலான அளவில் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு கவனம் அளிக்க வேண்டும் என்பதுதான். அதிலும் முக்கியமாக ஏழைகளுக்கான உணவு தேவை என்பது இதில் முக்கியமானது.

ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உடனடியாக இவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான மிக வலுவான போராட்டத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறிக்கையின்படி தெரிய வந்துள்ள இன்னொரு முக்கியமான விஷயம், அதிக வருமானம் கொண்ட பிரிவினரிடையே உடல்பருமன் கோளறுகள் உருவாகி வருகிறது. இதனால் நகர்புற வசதி கொண்டவர்களிடையே மருத்துவ செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆரோக்கியத்துக்கு செலவிடும் தொகையும் அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

உலகின் முக்கிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான கோபன்ஹெகன் கான்சென்செஸ், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடுகிறது. அப்போதுதான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும் என கூறுகிறது. முக்கியமாக, செலவுகளை திறம்பட கையாளுவது என்பதற்கான மிகச் சிறந்த பொருள் மனித வாழ்க்கையை முன்னோக்கி மிக சிறப்பாக கொண்டு செல்வதுதான் என்று நாடுகளுக்கு வலியுறுத்துகிறது.

இதைப் புரிந்து கொண்டு இந்தியா தனது சமூக கொள்கை திட்டங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அனைத்து மேம்பாட்டு திட்டங்களையும் வருமான எதிர்பார்ப்பை மையமாகக் கொண்டு உருவாக்காமல் ஊட்டச்சத்தால் ஊக்கம் பெற்ற தலைமுறையை உருவாக்குவதற்காக வாய்ப்புகளை ஏற்படுத்துவது உடனடி அவசியமாக உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விகிதம் அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மாற்றியமைக்கப்பட வேண்டுமானால், மனித சக்தியை பயன்படுத்துவதில் மிகப் பெரிய மாற்றம் உருவாக வேண்டும். மக்களின் மூளையும் உடம்பும் பலப்படுத்தப்பட வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமைபட வேண்டுமென்றால் உடனடியாக இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே உண்மை.

- maheswaran. p@thehindutamil. co. in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x