Last Updated : 29 Nov, 2014 11:23 AM

 

Published : 29 Nov 2014 11:23 AM
Last Updated : 29 Nov 2014 11:23 AM

வழிகாட்டி மதிப்பு உயர்வு: சரிவடையுமா ரியல் எஸ்டேட்

சம்பாத்தியத்தை மண்ணில் போடு அல்லது பொன்னில் போடு என்பார்கள். அதாவது சாமானியர்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகக் கருதுவது நிலத்தையும் தங்கத்தையும்தான் என்பதைத் தெரிவிக்கும் சொற்றொடர் இது. ஆனால் தங்கத்தைவிட நிலத்தின் மதிப்புதான் சமீப காலங்களில் கடுமையாக உயர்ந்துகொண்டே வந்தது. அதனால் நிலத்தை வாங்குவதில் அனைவரும் பெருமளவில் ஆர்வம் காட்டினர்.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பும் நிலத்தின் உண்மையான மதிப்பும் சிறிதும் தொடர்பில்லாமல் இருந்துவந்தன. இதனால் வழிகாட்டி மதிப்பைச் சீர்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து மாநில அரசு மேற்கொண்ட சீர்திருத்தம் காரணமாக நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கடந்த 2012-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

வழிகாட்டி மதிப்பை உயர்த்தும்போது அதற்கேற்ற வகையில் பத்திரப் பதிவு முத்திரைத் தாள் கட்டணம் போன்றவற்றையும் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் சொத்து மதிப்பில் 8 சதவீதத்தை கட்டணமாக அரசு வசூலித்துக்கொள்கிறது. இதில் ஐந்து சதவீதம் முத்திரைக் கட்டணமாகவும், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணமாகவும் இரண்டு சதவீதம் பரிமாற்றக் கட்டணமாகவும் உள்ளது. கடந்த 2013-14-ம் ஆண்டில் மட்டும் வழிகாட்டு மதிப்பின் மூலம் அரசுக்கு 8,055 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால் நில விற்பனையின்போது அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் உயர்ந்தது. ஆகவே வழிகாட்டி மதிப்பின் உயர்வைக் காரணம் காட்டி நில பரிவர்த்தனைகள் மந்த கதி அடைந்தன. இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையும் சுணக்கம் கண்டது. இந்நிலையில் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படலாம் என்னும் நம்பிக்கை பொதுமக்களிடையே குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினரிடையே நிலவிவந்தது என்கிறார்கள். அப்படிக் குறையும்போது நிலத்தை வாங்கிக்கொள்ளலாம் பணம் மிச்சமாகுமே என அவர்கள் நிலம் வாங்குவதைத் தள்ளிவைத்தனர். ஆனால் இந்த நம்பிக்கைக்கு மாறாக நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மீண்டும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டம், மாவட்டம், மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் பரிந்துரையின் மூலம், ஒவ்வொரு பகுதிக்கான வழிகாட்டி மதிப்புகளும் திருத்தி அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும், இறுதியாக, எந்தப் பத்திரப்பதிவு உயர் மதிப்பில் பதிவானதோ அந்தப் பத்திரத்தின் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை உயர்த்திக்கொள்ள, மாவட்ட அளவிலான குழுக்களுக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு பதிவு மாவட்டங்களில், வழிகாட்டி மதிப்புகள், கடந்த சில மாதங்களாக உயர்த்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் தற்போது, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் உள்ளிட்ட, பல்வேறு பதிவு மாவட்டங்களில், வழிகாட்டி மதிப்பு, 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மீண்டும் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதால் அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் வழிகாட்டி மதிப்பு உயர உயர நிலப் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தவருவதாகவும் அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் நில விற்பனையும் வீட்டு விற்பனையும் தொடர்ந்து சரிவடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால் ரியல் எஸ்டேட் துறை மேலும் தளர்ச்சியடையும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர். வழிகாட்டி மதிப்பு உயரும்போது நிலத்தை வாங்கும் மனப்போக்கில் மாற்றம் வரும் என்றும் நிலம் வாங்குவதையும் வீடு வாங்குவதையும் முடிந்தவரை ஒத்திப்போடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் துறை மேலும் மந்தகதியடையும் என்றும் இதிலிருந்து மீள்வது குறித்து அவசரமாக யோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x