Published : 25 Nov 2014 03:39 PM
Last Updated : 25 Nov 2014 03:39 PM

காணாமல் போன பனையோலைப் பெட்டிகள்

சில்லுக் கருப்பட்டி, பலகாரம் முதல் அரிசி, தானியம் ஆகியவற்றைச் சேமித்து வைக்கப் பயன்பட்டவை பனையோலைப் பெட்டிகள். இவற்றுக்கு அளவைப் பொறுத்து பெட்டகம், கடகம், கொட்டான்கள் என்ற பெயர்களும் உண்டு. சில்லுக் கருப்பட்டிக்குச் சாதாரணப் பனையோலைப் பெட்டிகள் என்றால், பலகாரம், தானியங்களை வைக்கத் தரமான வண்ணப் பனையோலைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. பனையோலைக்கே உள்ள தனி மணத்துடன் அழகும் வசதியும் நிறைந்தவையாக இருந்த இந்தப் பெட்டிகள், கைவினைத் திறனால் அழகுபடுத்தப்பட்டவை.

திருமண சீர்வரிசை

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பனையோலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டுவந்தன.

பனையோலைக் கைவினைப் பொருட்களில் வைத்துப் புழங்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன், மணப்பெண்ணுக்கான திருமண சீர்வரிசையில் சீதனமாகக் கொடுக்கப்படும் பலகாரங்களை ஓலைப் பெட்டிகளில் வைத்துக் கொடுப்பது முன்பு சமூக அந்தஸ்தாகக் கருதப்பட்டது.

பயணிகள் விருப்பம்

ராமேசுவரம், மதுரை, பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்கு வரும் யாத்ரீகர்களும், கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கிச் சென்றனர்.

இதெல்லாம் இருந்தாலும், நாகரிக மோகம் காரணமாகப் பனையோலைக் கைவினைப் பொருட்கள் தற்போது மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. பாரம்பரியமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் குடிசைத் தொழிலாக விளங்கிய பனையோலைத் தொழிலில், பின்தங்கிய பொருளாதார நிலை கொண்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்துவந்தனர். நாகரிக மோகம் என்ற பெயரில் இந்தப் பொருட்களின் இடத்தைப் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றிவிட்டன. இதனால் பனையோலைத் தொழில் வேகமாக அழிந்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

வெளிநாடுகளில் வரவேற்பு

“பனையோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. பனையோலைக் கைவினைப் பொருட்களைச் செய்வதற்குச் சுய உதவிக் குழு பெண்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயல வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துக் கையால் செய்யப்படும் ஓலைப் பெட்டிகளை அதிகம் பயன்படுத்தினால், நலிவடைந்துவரும் பனைப் பொருள் தொழிலுக்குப் புத்துயிர் கிடைக்கும், சுற்றுச்சூழலும் சீர்கெடாமல் பாதுகாக்கப்படும்” என்கிறார் ராமேசுவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவதேவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x