Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM

பங்குச் சந்தையில் சாதிக்க உதவும் படிப்புகள்

பங்குச் சந்தை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பங்குச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய வர்த்தகம் நடக்கிறது. பங்குச் சந்தை தொடர்பான படிப்புகளை படிப்பவர்களுக்கு பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களில் மட்டுமல்லாமல், பிற பெரிய தொழில் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. மேலும், இப்படிப்புகளை முடித்துவிட்டு, பங்குச் சந்தையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்டலாம்.

பங்குச் சந்தை குறித்து படிக்க விரும்புவோர் இளநிலை பட்டப் படிப்பு படிக்க இயலாது. இதில் பட்ட மேற்படிப்பு மட்டுமே உள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்குச் சந்தை தொடர்பான பி.ஜி. டிப்ளமோ இன் செக்யூரிட்டி அனலைசஸ் அண்டு டிரேடிங், பி.ஜி. டிப்ளமோ இன் கேப்பிட்டல் மார்க்கெட்டிங், எம்.பி.ஏ. இன் கேப்பிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட மேற்படிப்புகளை வழங்குகின்றன. எந்த பட்டப் படிப்பு படித்தவர்களும் நுழைவுத் தேர்வு மூலம் இவற்றில் சேரலாம். பொறியியல் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பு உண்டு. எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்பவர்களும் பங்குச் சந்தை நுழைவுத் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும்.

மேற்கண்ட படிப்புகளை படிப்பவர்கள் ஸ்டாக் அனலைசஸ், கமாடிட்டி அனலைசஸ், ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட், ஃபண்ட் மேனேஜ்மென்ட், டிரஷரி மேனேஜ்மென்ட், பிசினஸ் ஆபரேஷன் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செல்ல முடியும். பங்குச் சந்தை நிலவரத்தை கவனித்து, ஆய்வு செய்து எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று கருத்து தெரிவிப்பது இவர்கள் பணி.

மும்பை பங்குச் சந்தை இதற்காகவே பிரத்தியேக கல்வி நிறுவனத்தை நடத்துகிறது. டெல்லியில் உள்ள இன்டர்நேஷனல் காலேஜ் ஆஃப் ஃபைனான்சியல் பிளானிங் கல்வி நிறுவனம் மற்றும் மும்பையில் உள்ள நார்சிமோர்ஜி கல்லூரியில் எம்.பி.ஏ. இன் கேப்பிட்டல் மார்க்கெட் படிப்பு உள்ளது. மேற்கண்ட படிப்புகளை முடித்தவர்களை பல்வேறு பங்குச் சந்தை நிறுவனங்கள் 3 மாதம் பயிற்சி அளித்து பணிக்கு சேர்த்துக் கொள்கின்றன. பங்குச் சந்தை தொடர்பான படிப்புகளை படிப்பதாலேயே கூடுதல் வருவாய் கிடைத்துவிடாது. பங்குச் சந்தையை நுணுக்கமாக கவனித்து, ஆய்வு செய்து படிப்படியாக தொழில் ரகசியங்களை கற்பதன் மூலமே இதில் நிபுணத்துவம் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x