Published : 21 Mar 2014 00:00 am

Updated : 07 Jun 2017 11:34 am

 

Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2017 11:34 AM

மொழி பிரிக்காத உணர்வு 4: கழிந்துபோன இரவு, கடந்துபோன காலம்

4

‘இந்தஜார்’ என்ற உருதுச் சொல் காத்திருத்தல் என்ற பொதுவான பொருளைத் தந்தாலும் ஹிந்தித் திரைப் பாடல்களில் அதன் பிரயோகம் எல்லா காதல் பாடல்களிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும். கதாநாயகன் அல்லது நாயகி மற்றவரின் வருகையை எதிர்பார்த்து ஏங்கும் எண்ணற்ற இந்திப் பாடல்கள் கவித்துவத்துடனும் இனிய இசையுடனும் அமைந்திருக்கின்றன.

இந்தக் காதல் உணர்வை எளிய ஆனால் மிகக் கவித்துவமான வரிகளில் வெளிப்படுத்தியவர்களில் ஷக்கீல் பதாயுனி மிக முக்கியமானவர்.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதாயூன் என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஷக்கீலுக்கு இளமையிலேயே பாரசீகம், உருது, இந்தி ஆகிய மொழிகளை கற்கும் வாய்ப்பு அவர் கவிதைக்கு வளம் சேர்த்தது. பின்னாளில் நௌஷாத் அலியின் மிகப் பிடித்தமான கவிஞராகத் திகழ்ந்தார் ஷக்கீல்.

இந்தப் பகுதியில் நாம் காணவிருக்கும் இந்திப் பாடல் 1949இல் வெளிவந்த துலாரி என்ற சமூகப் படத்தில் இடம் பெற்றது.

சுரேஷ், மதுபாலா உள்படப் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நௌஷாத் அலி.

‘சுஹானா ராத் டல்சுக்கே’ என்று தொடங்கும் இந்த பாடல் அமரத்துவம் பெற்ற இந்திப் பாடல்களில் ஒன்று. மிக வித்தியாசமான, நளினத்துடன் கூடிய குரல் உடைய முகமது ரஃபி இந்தப் பாடலில் விரக தாபம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு ஆகிய பல உணர்வுகளைத் தன் குரலில் வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் பல புதிய கோணங்களில் இசை ஆய்வாளர்கள் குறிப்பிடும் இந்தப் பாடல் இந்தி ஆல் டைம்

ஹிட் வரிசையில் இடம் பெற்ற பாடல் .

சுஹானி ராத் டல் சுக்கே ந ஜானே தும் கப் ஆவோகி
ஜஹான் கி ருத் பதல் கயீ ந ஜானே தும் கப் ஆவோகி

என்று தொடங்கும் இந்தப் பாடலின் பொருள்:

இதமான இந்த இரவு கழிந்துவிட்டது.
நீ எப்பொழுது வருவாயோ தெரியவில்லையே
பருவங்கள் மாறிவிட்டன இங்கு
நீ எப்பொழுது வருவாயோ
காட்சிகள் தமது அழகைக் காட்டிக் காட்டி உறங்கிவிட்டன.
நட்சத்திரங்கள் மின்னி மின்னி அவற்றின் ஒளி உறங்கிவிட்டது.
நறுமணங்கள் எல்லாம் வீசி மறைந்துவிட்டன.
உன் வருகையை எதிர்பார்த்து
இங்கு நான் உள்ளம் தடுமாறுகிறேன்.
வசந்தத்தின் வண்ணம் பொங்கி எழுந்து போய்விட்டது
தென்றலும் தன் திசையை மாற்றிக்கொண்டுவிட்டது
நீ எப்பொழுது வருவாயோ தெரியவில்லையே
இதமான இந்த இரவு கழிந்துவிட்டது.
நீ எப்பொழுது வருவாயோ தெரியவில்லையே.

தமிழில் கதாநாயகனை எதிர்பார்த்து நாயகி பாடும் பல பாடல்கள் இருந்தாலும் கதாநாயகன் ஏங்கும் இந்த இந்திப் பாடலுடன் ஒப்பிடும் அளவிலமைந்த பாடல்கள் ஒரு சில மட்டுமே. மன்னாதி மன்னன் படத்தில் நீயோ நானோ யார் நிலவே என்னும் பாடலில் இந்த உணர்வு வெளிப்படும். ஆனால் அது இரண்டு பெண்களும் ஒரு ஆணும் தத்தமது பிரிவுத் துயரைச் சொல்வது போல அமைந்த பாடல். ஒரு ஆண் தன் காதல் துயரைச் சொல்லும் பாடல்கள் அதிகமில்லை.

துலாரி என்ற இந்தித் திரைப்படம் வெளிவந்து 35 வருடங்களுக்கு பிறகு, 1984இல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தின் இந்தப் பாடல் கிட்டத்தட்ட அந்தக் காத்திருப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.

காத்திருப்பின் வலி

வைரமுத்துவின் பாடல் வரிகளை, இளையராஜாவின் இசை அமைப்பில், ஜேசுதாஸின் மென்மையான குரல் வளமும் அவரைவிடச் சிறந்த தமிழ் உச்சரிப்புத் திறனும் கொண்ட பி. ஜெயசந்திரன் மிக நேர்த்தியாகப் பாடியுள்ளார். அந்தப் பாடல்:

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்சது இப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு
(காத்திருந்து காத்திருந்து)
நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற
என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

(காத்திருந்து காத்திருந்து)


திரையும் இசையும்மொழி பிரிக்காத உணர்வுதுலாரிமதுபாலா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x