Published : 06 Jan 2017 10:37 AM
Last Updated : 06 Jan 2017 10:37 AM

கோலிவுட் கிச்சடி: ஆன்ட்ரியா ஆஜர்!

அவ்வளவுதான் ஆன்ட்ரியா என்று பலர் ஆரூடம் சொல்ல, ஆன்ட்ரியாவோ அலட்டிக்கொள்ளாமல் தன் வேலையைக் கவனித்துவருகிறார். வரும் ஆண்டு அவருக்குத் திருப்புமுனையாக அமையலாம். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு முதலில் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமானார். ஆனால் அவர் ஏ.ஆர். முருகதாஸ் - மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் தமிழ், தெலுங்குப் படத்துக்காக கால்ஷீட் விஷயத்தில் கெத்து காட்ட, ஆன்ட்ரியாவுக்கு அடித்து அதிர்ஷ்டம். அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்பதுடன் இரண்டு பாடல்களையும் பாடுகிறார். ராமின் இயக்கத்தில் வரவிருக்கும் தரமணியின் ட்ரெய்லர், படம் ஆண்ட்ரியாவை மையமாகக் கொண்டே நகரும் என்பதைக் காட்டுகிறது. அடுத்தடுத்து இப்படிப்பட்ட படங்கள் வருவதால் உற்சாகமாகியிருக்கிறார் ஆன்ட்ரியா.



த்ரிஷா திடுக்!

தனிக் கதாநாயகியாக நடித்த எந்தப் படமும் எடுபடாத நிலையில் ‘கொடி’யில் நடிக்க நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம் அமைந்தும் கோட்டை விட்டார் த்ரிஷா. திரையுலக நண்பர்களின் அறிவுரையைக் கேட்டு இனி நடிப்பில் முழு கவனம் செலுத்த இருக்கிறாராம். அவர் இப்படி முடிவெடுத்ததும் விஜய் சேதுபதியிடமிருந்து அழைப்பு பறக்க அவருடன் ‘96’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரமாம் த்ரிஷாவுக்கு.



சங்கமித்த கதாநாயகர்கள்

‘அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுந்தர்.சி. இந்தப் படத்துக்கு 250 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பல நட்சத்திர நடிகர்கள் தயங்கிவந்த நிலையில் தற்போது, ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ‘சங்கமித்ரா' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்கத்துக்கு சாபுசிரில், கிராபிக்ஸுக்குக் கமலக்கண்ணன் என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தமாகிவருகிறார்கள். இந்நிலையில், படத்தின் கதையை பலப்படுத்த எழுத்தாளர் பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் பத்ரி ஆகியோர் பணியாற்றிவருகிறார்களாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட், பாகுபலி, ‘2.0’ ஆகிய படங்களை மிஞ்ச இருக்கிறது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.



ஓயாத மிரட்டல்

பேய்ப் படங்களின் சீசன் மெல்ல ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களை இப்போதைக்குத் தூங்கவிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள் பல புதிய இயக்குநர்கள். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய ரகுமான், கதையைக் கேட்டு வியந்து ஒப்புக்கொண்டிருக்கும் பேய்ப் படம் ‘சதுரஅடி 3500’. ஸ்டீபன் என்ற புதியவரின் இயக்கத்தில் பாசிலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆனந்தக் குட்டனின் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படம் சென்னையில் உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டதாம். கதையில் ரகுமானும் இனியாவும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள். பிரதாப்போத்தன், சரவணன் சுப்பையா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா, தலைவாசல் விஜய் போன்ற சீனியர் நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.



புதிய கணக்கு

சீனு ராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானர் இப்போது நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி. “ஆனால் விஜய் சேதுபதிக்கு முன் அந்தப் படத்துக்கு நான் கதாநாயகனாக இனிகோ பிரபாகரனையே தேர்ந்தெடுத்திருந்தேன். அவர் அப்போது ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் தவறிப்போனது. எனது இயக்கத்தில் இனிகோவை நிச்சயம் இயக்குவேன். அவ்வளவு சிறந்த நடிகன் அவன்” என்று ‘வீரையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் அந்தப் படத்தின் நாயகனைப் பாராட்டினார் இயக்குநர் சீனு ராமசாமி. விஜயின் ‘கில்லி’யில் தொடங்கி சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் நடித்து ‘சென்னை 28’, ‘பூ’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களின் மூலம் பிரபமானவர்தான் இந்த இனிகோ பிரபாகரன். தற்போது பரீத் எழுதி இயக்கித் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனிக் கதாநாயகனாகத் தனது கணக்கைத் தொடங்குகிறார் இனிகோ. அவரது திரைப் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துவோம்.



மீண்டும் இணைந்த ஸ்ருதி

‘பிரேமம்’ தெலுங்கு மறுஆக்கத்தில் மலர் டீச்சராக நடித்த ஸ்ருதி ஹாசன் தற்போது அப்பாவின் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து முடிப்பதற்காகக் காத்திருந்தார். ஆனால் அந்தப் படம் கால தாமதம் ஆவதைத் தொடர்ந்து ‘கட்டமா ராயுடு’ படம் (அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு மறு ஆக்கம்) மூலம் பவன் கல்யாணுடன் மீண்டும் இணைகிறார். இந்த ஜோடி ஏற்கெனவே ‘கப்பார் சிங்’ படத்தில் நடித்து ஆந்திர பாக்ஸ் ஆபீஸில் கலங்கடித் திருந்தது. இதற்கிடையில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த ‘சிங்கம்-3’ படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x