Last Updated : 23 May, 2017 10:22 AM

 

Published : 23 May 2017 10:22 AM
Last Updated : 23 May 2017 10:22 AM

மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!

இது பால்பாயிண்ட் பேனா யுகம். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்துவதையே சவுகரியமாகக் கருதுகிறோம். ஃபவுண்டன் பேனாக்களில் இங்க் நிரப்பிப் பயன்படுத்துவது நேர விரயம் என நினைக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கினால் ஆன பால்பாய்ண்ட் பேனாக்கள் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என யோசித்திருக்கிறோமா?

கவனிக்கப்படாத பாதிப்பு

பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் குறித்து மக்கள் மத்தியில் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின் ஒரு பகுதியாவது மறுசுழற்சிக்குப் போகிறது. ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களைப் பொறுத்தவரை, உலோகத்தாலான பேனா முனை, மீதமுள்ள மை, பிளாஸ்டிக் பேனா பகுதி இவற்றையெல்லாம் பிரித்தெடுப்பது சிரமம் எனச் சொல்லி, மறுசுழற்சி பற்றி யோசிப்பதே இல்லை.

இதனால் மை தீர்ந்த பிறகு அவற்றை அப்படியே தூக்கி எறிந்துவிடுகிறோம். “ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகமானது. கேரளாவில் மட்டும் மாதந்தோறும் மூன்று கோடி பால்பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுகின்றன” எனச் சுட்டிக்காட்டுகிறார் ‘பியூர் லிவிங்’ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் சமூக ஆர்வலரும் ஓவியருமான லட்சுமி மேனன்

மாணவர்கள் மத்தியிலிருந்து, பால்பாயிண்ட் பேனாவை முற்றிலுமாக அகற்றிவிட்டு, முந்தைய தலைமுறையினரைப் போல இங்க் பேனாவைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இவர் முன்னெடுத்துவருகிறார். இத்தகைய சமூக அக்கறை கொண்ட நடவடிக்கையை முன்மொழிந்தது கேரள மாநில அரசாங்கம்.

தூர எறிந்துவிடும் கலாச்சாரம்!

மக்கள் வாழ்க்கை இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரள அரசு அறிவித்த திட்டம்தான் ‘ஹரித கேரளம்’. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையானது கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக்கினாலான பால்பாயிண்ட் பேனாக்களுக்குப் பதிலாக இங்க் பேனாவைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியது. அரசின் இந்த உத்தரவைக் கேரளப் பொதுமக்களும், பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்துடன் முன்வந்தன. சில தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகளுடன் கை கோத்து, இதனைச் செயல்படுத்துவதற்குக் களமிறங்கின.

கொச்சி பினாலே அமைப்புடன் இணைந்து இந்தப் பணியைப் பெரிய அளவில் மக்கள் மத்தியிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியிலும் கொண்டு சென்றார் லட்சுமி மேனன். “இந்த முயற்சி, பால்பாயிண்ட் பேனாக்களுக்கு எதிரானதல்ல. அண்மைக் காலமாகச் சமூகத்தில் பெருகிவரும் பயன்படுத்திவிட்டு, தூர எறிந்துவிடும் நவீன கலாச்சாரத்துக்கு எதிரானது” என்கிறார் லட்சுமி.

மறுசுழற்சி நினைவுச் சின்னம்

இதற்கான விழிப்புணர்வு யாத்திரையை நடத்திய லட்சுமி இதுவரை பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று, மாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறார். யாத்திரை தொடங்கியபோது, பயன்படுத்திய பால்பாயிண்ட் பேனாக்கள் பத்தாயிரம் சேகரிக்க வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால், யாத்திரை முடிந்தபோது, அவர் திரட்டிய பால்பாயிண்ட் பேனாக்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிட்டது.

இந்தப் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை என்ன செய்வதாக உத்தேசம்? என்று கேட்டால், “பால்பாயிண்ட் பேனாக்களுக்கு விடை கொடுப்போம். இங்க் பேனாக்களைப் பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழல் பாதுகாப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகக் கொச்சியில் நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் சேகரித்த ஏழு லட்சம் பழைய பால்பாயிண்ட் பேனாக்களை மறுசுழற்சி செய்து அது உருவாக்கப்படும்” என்கிறார்.

இவருடைய கேரள விழிப்புணர்வு யாத்திரை பற்றி அறிந்து, லண்டனிலும் இதேபோல ஒரு இங்க் பேனா விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு வந்துள்ளதாம். கேரளாவின் பல ஊர்களிலும், ஊர் பஞ்சாயத்துகளே பள்ளிக்கூட மாணவர்களுக்கு இங்க் பேனாக்களை வழங்கி, மாணவர்களை ஊக்குவித்துள்ளன.

பரஸ்பரம் சொல்லித்தரும் பேனா

இந்த விழிப்புணர்வில் ஈடுபட்ட அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் கேரளா பல்கலைக்கழகத்தின் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் துறை பேராசிரியர் முனைவர் அச்சுத்சங்கர் நாயர். “பால்பாயின்ட் பேனா சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு பக்கம் என்றால், இங்க் பேனாவுக்கென்று ஒரு பாரம்பரியம், கலாச்சாரம் உண்டு. இங்க் பேனா பயன்படுத்துவது வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். தினமும் பேனாவில் இங்க் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குறைவாக இருந்தால், மை நிரப்ப மறக்கக் கூடாது.

வகுப்பில் ஒரு மாணவனின் பேனாவில் மை தீர்ந்து போனால், பக்கத்து மாணவர் கொஞ்சம் போலத் தன் பேனாவிலிருந்து மையைப் பகிர்ந்து கொடுப்பார். இது பரஸ்பரமாக உதவும் பழக்கத்தை இளமையிலேயே ஏற்படுத்தும். பால்பாயிண்ட் பேனா இதற்கு நேரெதிர். பயன்படுத்திவிட்டு, இனிமேல் அதனால் பயனில்லை என்று தெரிந்ததும் தூக்கி எறிவது என்ற மனப்பான்மையை வளர்த்துவிடும். இது வாழ்க்கைக்கு வளம் சேர்க்காது” என்கிற சிந்தனையை முன்வைக்கிறார்.

கேரளாவின் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டமானது விரைவில் தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப் படும் என்று நம்பிக்கை அளித் திருக்கிறார் கேரளக் கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத். இவரும் பால்பாயிண்ட் பேனாவுக்கு விடைகொடுத்துவிட்டு, இப்போது இங்க் பேனாவைத்தான் பயன்படுத்திவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x