Last Updated : 16 Aug, 2016 11:17 AM

 

Published : 16 Aug 2016 11:17 AM
Last Updated : 16 Aug 2016 11:17 AM

தோழமையான கல்வி வேண்டும்!- கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு நேர்காணல்

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறைக்கு எதிராக 35 வருடங்களாகத் தொடரந்து போராடி வருபவர் கைலாஷ் சத்யார்த்தி. தான் தொடங்கிய ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ அமைப்பின் வாயிலாக ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளித்ததற்காக 2014-ம் ஆண்டு இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் ஒட்டுமொத்த உலகின் கவனமும் இந்தியக் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்துத் திரும்பியது என்றே சொல்ல முடியும். ஐந்திலிருந்து 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 57 லட்சம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக நலிவடைந்த நிலையில் இருப்பது அதன் பின்னர்க் கணக்கிடப்பட்டு மிகப்பெரிய விவாதப் பொருள் ஆனது.

சத்யார்த்தியின் தொடர்ந்த பணிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தைத் தொழிலாளர் முறையைக் கொடூரமானது என்று அறிவித்து, உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் குழந்தைத் தொழிலாளர் முறையைச் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த அவருடன் குழந்தைத் தொழிலாளர் முறை, அடிப்படைக் கல்வியின் அவசியம், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியதிலிருந்து...

எந்த அனுபவம் உங்களைக் குழந்தைத் தொழிலாளர்களை நோக்கித் திருப்பியது?

போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்த என்னுடைய அப்பா நான் சிறுவனாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அம்மாதான் என்னையும் அண்ணன்களையும் வளர்த்து, படிக்கவைத்தார். மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில் ஒரு நகராட்சிப் பள்ளியில்தான் படித்தோம். ஐந்தரை வயதில் அந்தப் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

பள்ளி வளாகத்துக்குள் காலடி எடுத்துவைக்கும்போது நுழைவாயிலுக்குப் பக்கவாட்டில் ஒரு சிறுவன் தெருவில் அமர்ந்து செருப்பு, ஷூக்களுக்குப் பாலிஷ்போட்டுக் கொண்டிருந்தான். நாங்களெல்லாம் துள்ளித் திரிந்து பள்ளிக்குச் செல்லும்போது என் வயதிலிருக்கும் ஒருவன் பள்ளிக்கு வெளியே இருப்பது அதிர்ச்சியாக இருந்தது. பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர், பெற்றோர், உறவினர் என எல்லோரிடமும் “ஏன் அந்தப் பையன் தெருவில் உட்கார்ந்திருக்கிறான்?” எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன். “ஏழைப் பிள்ளை! வேறுவழியில்லை.

அவனும் வேலை செய்தால்தான் அவர்கள் பிழைக்க முடியும். இது சாதாரணமான ஒன்றுதான்” என ஆசிரியர் சொன்னதைக் கேட்டு என் மனம் சமாதானம் அடையவில்லை. “சில குழந்தைகள் தொழிலாளிகளாகத்தான் பிறக்கிறார்கள்” என்கிற அர்த்தத்தில் அவர் சொன்னதை நான் ஏற்க மறுத்தேன். இன்றும் மறுக்கிறேன்!

குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றிய முதல் அனுபவம்?

நான் பொறியாளராக வேலைபார்த்த போதே சமூகரீதியாக எனது கருத்துகளைப் பத்திரிகைகளில் எழுதும் வழக்கம் இருந்தது. அப்போது, அரசியல், பொருளாதார, பொழுதுபோக்கு அம்சங்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் மனித உரிமைகளுக்கு இல்லை. பெண்கள், குழந்தைகள் மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக 1981-ல் டெல்லியில் ‘சங்கர்ஷ் ஜாரி ரஹேகா’ என்கிற சொந்தப் பத்திரிகையை நண்பர்களின் உதவியோடு தொடங்கினேன். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாபின் ஒரு கிராமத்தில், கொத்தடிமையாக குடும்பத்தினரோடு வாழும் பாசல்கான், தன்னுடைய 15 வயதான மகள் பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் கொடுமையைத் தடுக்க அதைச் செய்தியாக எழுதும்படி ஒரு நாள் என்னிடம் முறையிட்டார்.

எந்தப் பிரச்சினைக்கும் அதற்குள்ளேயே தீர்வு இருக்கிறது என்பதை உறுதியாக நம்புபவன் நான். அந்த நம்பிக்கையில் மீண்டும் எழுந்தேன். நீதிமன்றத்தை அணுகினேன். ஆட்கொணர்வு மனு மூலமாகச் சில தினங்களில் பாசல்கானின் மகள் உட்படக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 36 பேரைக் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்டோம்.

குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பாக பல போராட்டங்களை நடத்தி உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நீங்கள். இப்போது ஏழை இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கை நிலையில் முன்பைக் காட்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

குழந்தை தொழிலாளர் முறை குறித்து நிச்சயமாக முன்பைக் காட்டிலும் இப்போது பொதுமக்களுக்குக் கூடுதல் விழிப்புணர்வு வந்திருக்கிறது. சொல்லப்போனால், இது மிகப் பெரிய பிரச்சினை என்ற புரிதல் மட்டுமல்லாமல் இதற்குத் தீர்வும் உண்டு என்பதையும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்தியாவுக்கும் திராணி இருக்கிறது என்கிற பெருமிதமும் வந்திருக்கிறது.

சமீபகாலமாகப் பொதுமக்களிடமும் காவல்துறையினரிடமும் நல்ல மாற்றம் வந்திருப்பதைப் பார்க்கிறேன். சமீபத்தில் ஐதராபாத்தில், ஒரு போலீஸ் அதிகாரி குற்றவாளியைத் தேடிச் செல்லும் வழியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு தொழிற்பட்டறை போன்ற பகுதியில் துவண்டு போய் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். பீகாரிலிருந்து கடத்தி விற்கப்பட்ட குழந்தைகள் அவர்கள் என்பதைக் கண்டறிந்து உடனடியாக அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார். “குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் முயற்சிக்குத்தான் இந்தியாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அப்படியிருக்க இனி எதற்காக, யாருடைய கட்டளைக்காக இதைச் செய்ய நான் காத்திருக்க வேண்டும்?” என்றும் என்னிடம் சொன்னார். சமீபகாலமாகப் பல உயர்நீதி மன்றத் தீர்ப்புகளிலும் சில உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில்கூட இந்த அக்கறையும் பரிவுணர்வும் பிரதிபலிக்கிறது.

80-களின் தொடக்கத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒரு குற்றம் என்கிற உணர்வோ, முறையான சட்டமோகூட இல்லாத காலகட்டத்தில் உங்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார்?

மாதச் சம்பளம் வாங்கும் எலக்ட்ரிகல் இன்ஜினியராக, 1978-ம் ஆண்டில் சுமேதாவைத் திருமணம் செய்தேன். விரைவில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரம் சமூகப் பணியில் இறங்க முடிவெடுத்தேன். போகும் பாதையே தெரியாத பயணத்தில் எனக்கு முழு நம்பிக்கை தந்தார் சுமேதா.

மீட்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதுதான் மிகப் பெரிய பணி. அதைச் சுமேதா ஏற்றுக்கொண்டார். விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மையங்கள். பெண் குழந்தைகளுக்காக இயங்கும் மையம் ஒன்று. ஆண்குழந்தைகளுக்கு இரண்டு மையங்கள். படிப்பும், தொழிற்கல்வியும் சொல்லித்தரப்படும் அந்த மையங்களை அவர்தான் பராமரிக்கிறார்.

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்காமல் இந்தத் திட்டம் வெற்றி காணமுடியாதென்றும், குழந்தைகள் தொழிலாளர் முறை வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்று கருத்துச் சொன்னீர்கள். அதன் அடிப்படை என்ன?

‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை. அதற்குப் படித்த இளைஞர்கள் வேண்டும். ஆனால் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவில் குடும்பப் பாரம்பரியத் தொழில்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஈடுபடலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல அபாயகரமான வேலைகள் எனப் பட்டியலிடப்பட்டிருந்த 83 தொழில்கள், வெறும் 3 எனக் குறைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சிக்கல். இது மறைமுகமாகக் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கிறது.

இதனால் குழந்தைகளின் கல்விப் பாதிக்கும் அபாயம் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தையே கேள்விக் குறியதாகவும் மாற்றிவிடும். மறுபுறம் படித்த வயதுக்கு வந்த இளைஞர்கள் செய்ய வேண்டிய பணிகளில், குழந்தைகள் பணியமர்த்தப்படும்போது நிச்சயமாகத் தகுதி படைத்தவர்களுக்கு வேலை மறுக்கப்படும்.

புதிய கல்விக்கொள்கை திட்டம் சரியா?

புதிய கல்விக் கொள்கை விவாதத்துக்குரியது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி பெறும் உரிமை இருக்கிறது என்பதைச் சொல்லும்போதே கல்வியின் மூலமாக ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய உரிமையை, சுதந்திரத்தை உணரக்கூடிய நிலை வரவேண்டும்.

ஜனநாயகத்தின் வெற்றி, கல்வி மூலமாக விடுதலை பெறுவதாகத்தான் இருக்க முடியும். சமூக நல்லிணக்கம், சமூக அக்கறை, நீதியை நிலைநாட்டும் நல்லுணர்வு, சமத்துவப் பார்வை, சாதி, மத, இன ரீதியான பன்மைதன்மைகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆகியவற்றை வழங்குவதுதான் கல்வியின் அடிப்படை நோக்கம். எல்லாவற்றுக்கும் மேலாகக் கல்விபெறும் அனுபவமானது ஒரு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் பாதுகாப்பு உணர்வும் அளிக்க வேண்டும். தோழமையோடுகூடிய கல்வி வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x