Published : 01 Oct 2013 15:36 pm

Updated : 06 Jun 2017 12:21 pm

 

Published : 01 Oct 2013 03:36 PM
Last Updated : 06 Jun 2017 12:21 PM

சோலைமந்தியும் வரையாடும்

தமிழகத்தில் குமரி முனைக்கு அருகிலிருக்கும் ஆரல்வாய்மொழிக் கணவாயிலிருந்து, முதுமலை வரை நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில்தான் இன்று எஞ்சியுள்ள காடுகள் இருக்கின்றன. மாநிலத்திலுள்ள பத்து காட்டுயிர் சரணாலயங்களில் முக்கியமான ஆறு சரணாலயங்கள், இந்தக் காடுகளில்தான் அமைந்துள்ளன. இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில் புதர்க் காடுகளும், மற்ற இடங்களில் இலையுதிர்க் காடுகளும், உயர் பகுதியில் மழைக்காடுகளும், அவற்றையொட்டி ஆங்காங்கே புல்வெளிப் பகுதிகளும் உள்ளன. நூறாண்டுகளுக்கு முன் காவிரிக் கரையிலிருந்த காடுகள் இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. ஒரு பகுதியில் சுற்றுச்சூழல் சமன்நிலையைப் பராமரிக்க 33% காடு இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 17.5 %தான் காடு. தென்னிந்திய நதிகள் எல்லாமே மழைக்காடுகளிலிருந்துதான் உற்பத்தியாகின்றன என்பதை இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். நம் இலக்கியம் போற்றும் குறிஞ்சி மலர்ச்செடிகளின் உறைவிடமும் இதுதான்.

இப்புவியில் உள்ள எல்லா வாழிடங்களிலும்– தாவரங்கள், பறவைகள் பாலூட்டிகள், பூச்சிகள், புழுக்கள், நீர்-நில வாழ்விகள் – எனப் பெரும்பாலான உயிரினங்கள் மிக அடர்த்தியாக உள்ள வாழிடம் பல்லுயிரிய சொர்க்கமான இம்மழைக்காடுகள் தாம். உலகிலேயே பல்லுயிரியம் அடர்த்தியாக உள்ள பதினெட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் ஒன்று

மழைக்காடு என்பது என்ன? வெப்ப நாடுகளில், மழை நன்கு பெய்யும் இடங்களில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து, அதன் உச்சத்தை அடைந்து செழித்திருக்கும் முதுபெரும் கானகங்கள். இங்குள்ள நெடிந்துயர்ந்திருக்கும் மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. அடர்த்தியான விதானத்தால் கதிரவன் ஒளி உள்ளே படாததால் இருள் கவிந்திருக்கும் இக்காடு, ஒரு மூன்றடுக்கு மாடி வீடு போல அமைந்துள்ளது. உச்சாணிக்கிளைகளிலும் மத்தியிலுள்ள கொடிகளிலும் கிளைகளிலும், கீழே உள்ள புதர்களிலும் தரையிலும் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.

தமிழ்நாட்டில் 1000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்த மலைப்பிரதேசம், மூன்று வெகு அரிய காட்டுயிர்களின் உறைவிடம். சோலைமந்தி (சிங்கவால் குரங்கு - Lion-tailed macaque) மழைக்காட்டில் மரத்தின் உச்சியிலேயே இருக்கும். மழைக்காடுகளுக்கு அருகில் உள்ள இலையுதிர்க் காடுகளில் சோலைமந்தியைவிட உருவில் சற்றுப் பெரிய கருமந்திகளைக் (Nilgiri Langur) காணலாம். மழைக்காட்டை ஒட்டியுள்ள புல்வெளிப் பகுதிகள் வரையாடு போன்ற உயிரினங்களுக்கு வாழிடம்.

ஊழிக் காலப் பரிணாம வளர்ச்சியில் மழைக்காட்டில் வாழும்படியான தகவமைப்புடன் உருவாகியுள்ள உயிரி சோலைமந்தி. நெடிதுயர்ந்த மரங்களின் விதானத்தில் இது இரை தேடிடும். வெகு அரிதாகவே தரைக்கு வரும். தோட்டப் பயிர்களுக்காகவும், வெட்டுமரத் தொழிலுக்காகவும், அணைகள் கட்டியதாலும் இவற்றின் வாழிடமான மழைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. உறைவிடம் போனதல்லாமல், நாட்டு வைத்தியத்துக்காகவும் தோலுக்காகவும் சோலைமந்திகள் சகட்டுமேனிக்குக் கொல்லப்பட்டன. இன்று ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் சிறுசிறு தீவுகள் போல் எஞ்சியுள்ள வாழிடங்களில், சோலைமந்திகள் அழிவின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்துகொண்டு பிழைத்திருக்கின்றன.

நீண்ட வால் கொண்ட கருமந்தி, மரத்துக்கு மரம் தாவிக் குதிக்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையோரம் உள்ள காடுகளிலேயே, இவற்றின் சிறு கூட்டங்களைக் காண முடிந்தது. அந்தக் காலத்தில் முரசு கொட்டுவதைப் போன்று இவை எழுப்பும் ஒலியை அடிக்கடி கேட்கலாம். நாட்டு மருந்துக்காகப் பெருமளவில் கொல்லபட்டதால் இன்று இவையும் அரிதாகிவிட்டன . நான் பள்ளி மாணவனாக இருந்தபோது கருமந்தி லேகியம், கருமந்தி படம் தாங்கிய பாட்டில்கள் கடைகளில் விற்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றேன்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை (Nilgiri tahr) மழைக்காடுகளுக்கு அருகில் காணாலாம். இந்தக் காட்டாடு மலை முகடுகளில், பாறைகளில் வெகு எளிதாகத் தாவிச் செல்லும். மந்தைகளாக வாழும் வரையாடுகளை அதன் இறைச்சிக்காக வேட்டையாடினார்கள். சாகச வேட்டையாடிகளுக்கு வரையாட்டைச் சுடுவது பெருமை தரும் ஒரு காரியமாக இருந்தது. அதிலும் முதுகில் பழுப்பு - வெள்ளைப் பரப்புக் கொண்ட முதிர்ந்த ஆண் வரையாட்டைச் சுடுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. வேட்டையாடிகள் Saddle back என்று குறிப்பிட்டு, அதன் தோலை ஒரு விருதாக வைத்துக்கொள்வதற்காகக் கொன்றனர். இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, ஏறக்குறைய அற்றுப்போகும் நிலைக்கு வந்துவிட்டன. இன்றும் வரையாடுகள் திருட்டு வேட்டைக்கு பலியாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் இந்த வரையாடுகளைத் தமிழ்நாட்டில் ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் காண முடியும். அழிவின் விளிம்பின் ஊசாலாடிக்கொண்டிருக்கும் இந்த மூன்று தமிழகக் காட்டுயிர்களும், நம் கானகங்களின் குறியீடாக விளங்குகின்றன. அவற்றின் தற்போதைய நிலை நம் கானகங்களின் பரிதாப நிலையைப் பிரதிபலிக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் தவிர, கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சில பகுதிகளும் தமிழ்நாட்டிலுள்ளன. ஆனால் இவை, ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பிரிந்து பிரிந்து இருக்கின்றன. சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை, வேலூர் மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லி மலை போன்று கடந்த சில ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினால், காடும் அங்கு வாழும் காட்டுயிரும் சற்று அதிகரித்திருப்பது நல்ல செய்தி. தமிழ்க் காட்டுயிர்ச் சூழலில் சிறுமலையில் கடம்ப மான்கள் இருப்பதும், ஜவ்வாது மலைக்காடுகளில் காட்டெருதுகள் காணப்படுவதும், காவனூர் அருகே யானைகள் நடமாடுவதும் அண்மையில் கிடைத்த நல்ல செய்திகள்.

சு. தியடோர் பாஸ்கரன், மூத்த காட்டுயிர் எழுத்தாளர்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

குமரி முனைவரையாடுஇயற்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author