Published : 10 Apr 2017 10:23 AM
Last Updated : 10 Apr 2017 10:23 AM

சந்தையைக் கலக்குமா டாடா டிகோர்

இந்தியாவின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், டாடா டிகோர் என்கிற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட டாடா டியாகோ ஹேட்ச் பேக் மற்றும் ஹெக்ஸா கார்களை அடுத்து காம்பாக்ட் டிசைனில் மூன்றாவது மாடலாக `ஸ்டைல்பேக்’ டாடா டிகோர் வெளிவந்துள்ளது. டியாகோ காரை போன்றே முன்புற வடிவமைப்பு கொண்டுள்ளதுடன் ஹேட்ச்பேக் மற்றும் சிறிய செடான் கார் இரண்டின் கலவையாக இது உள்ளது.

இந்திய சந்தைக்கு ஏற்ப, வாடிக்கை யாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு, வசதிகள், விலை ஆகியவற்றின் அடிப் படையில் பல கவர்ந்திழுக்கும் அம்சங் களையும் டிகோர் கொண்டுள்ளது. காம்பாக்ட் செடான் வகையிலான டிகோர் பெட்ரோல், டீசல் இரண்டு மாடல்களில், ஆறு கண்கவர் வண் ணங்களில் கிடைக்கிறது.

டாடா டிகோர் பெட்ரோல் மாடல் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 85 பிஎஸ் ஆற்றலையும் அதிகபட்சமாக 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டிகோர் டீசல் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.05 லிட்டர் ரெவோடார்க் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 70 பிஎஸ் ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பெட்ரோல் மாடல் 15 அங்குல அலாய் சக்கரங்களையும், டீசல் மாடல் 14 அங்குல அலாய் சக்கரங்களையும் கொண்டுள்ளது. காரின் நீளம் 3,992 மி.மீ, அகலம் 1,677 மி.மீ, உயரம் 1,537 மி.மீ. சக்கரத்தின் அகலம் 2,450 மி.மீயாகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீ ஆகவும் உள்ளது. எரிபொருள் கொள்ளளவு 35 லிட்டராகும்.

முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்குகளும் உள்ளன. டிகோரில் இரண்டு ஏர்பேக்குகள் உள்ளன. ரிமோட் வழியாகவும் இயங்கும் செண்ட்ரல் லாக் சிஸ்டம், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், கிளட்ச் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

ஃபாக் லேம்ப்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ் டபிள் எல்ஈடி இண்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிர்ரர்கள் உள்ளன.

உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டுள்ளது. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இது யூஎஸ்பி, புளூடூத் கனெக்ட் செய்யும் வசதி கொண்டது. ஆடியோ கண்ட்ரோல் ஸ்டீரிங்க் வீல், ஸ்மார்ட்போன் அடிப்படையிலான நேவிகேசன் வசதியும் கொண்டுள்ளது.

பெட்ரோல் மாடலின் விலை ரூ. 4.82 லட்சம் முதல் ரூ.6.37 லட்சம் வரையில் உள்ளது. டீசல் காரின் விலை ரூ.5.72 லட்சத்தில் தொடங்கி ரூ.7.28 லட்சம் வரை உள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களி லேயே டிகோர் 50,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 83,000 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் வாகன பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறியுள்ளார். இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களின் சந்தை 55 சதவீதமாக இருக்கிறது. இதில் ஹேட்ச்பேக் சந்தை தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. அதனால் இந்திய சந்தையில் டாடா டிகோருக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செடான் மற்றும் ஹேட்ச் பேக் இணைந்த அழகிய டாடா டிகோர் கார், மாருதி சுசுகியின் ஸ்விப்ட் டிசையர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹுண்டாய் ஆக்சென்ட் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x