Last Updated : 20 Dec, 2013 09:38 AM

 

Published : 20 Dec 2013 09:38 AM
Last Updated : 20 Dec 2013 09:38 AM

எம்.ஜி.ஆர் நினைவுகள் : இயக்கத்தை நிறுத்தாத கைக்கடிகாரம்

1940களின் இறுதியில் தமிழில் பேசும்படம் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குள் ஒரு சாதாரண நடிகராக அறிமுகமான எம்.ஜி. ராமச்சந்திரன் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவின் இணையற்ற நாயகர்களில் ஒருவராக உயர்ந்தது சினிமாவைத் தன் முதன்மையான கலாச்சார அடையாளமாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஆச்சரியமான நிகழ்வல்ல. அவரளவுக்கு இல்லையென்றாலும் சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களில் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள், அதன் அடையாளங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டவர்கள் எனக் குறைந்தபட்சம் பத்துப் பேரையாவது சுட்டிக்காட்ட முடியும். எம்.ஜி.ஆர்., அவர்களில் ஒருவரல்ல. அவரோடு ஒப்பிடத் தக்கவர்கள் என வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியாது எனச் சொல்லும் அளவுக்கு முக்கியமானவர். அவரது திரைப்படங்கள் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டவை, எவ்விதமான கலை மதிப்பும் அற்றவை என்னும் விமர்சனங்களை ஒப்புக்கொள்வதில் திரைப்படம் பற்றிய பார்வை கூர்மையடைந்திருக்கும் இத்தருணத்தில் யாருக்கும் தயக்கம் இருக்கப் போவதில்லை. ஆனால் இது தமிழ்ச் சமூகத்திடம் அவர் பெற்றிருக்கும் ஒப்பிடமுடியாத இடத்தை மறுக்கும் ஒரு வாக்கியமாக ஒருபோதும் மாறமுடியாது.

மக்கள் திலகம் என்றோ புரட்சி நடிகர் என்றோ அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும்கூடக் கேட்கக் கிடைப்பவை. அவர் தர்மத்தின் தலைவன், தமிழ்ச் சமூகத்திற்கு ஆயிரத்தில் ஒருவன், அதன் மன்னாதி மன்னன், இன்றுவரை மாறாத அடையாளம் இது. அவரது ஒரு சொல்லேகூட அதிகாரத்தின் ஆணி வேரை அசைக்கும் அசாதாரணமான சக்தி கொண்டதாக இருந்தது. தி.மு. கழகத்தால் 1967இல் காங்கிரசின் அதிகாரத்தை வீழ்த்த முடிந்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த அடையாளமும் ஒரு முக்கியமான காரணம் எனச் சொல்ல முடியும். இந்த வகையில் பார்த்தால் அவர் தாவீதுடன் ஒப்பிடத் தகுந்தவர்.

ஆனால் தாவீதாக அல்ல அவர் தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழைகளால் கருணையே வடிவான இயேசுவாகவே பார்க்கப்பட்டார். அவர் ஒரு கொடை வள்ளல். கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை. ஆனால் தேவையானபோது அவர் போர்க்கோலம் கொள்ளக்கூடியவர். வெறும் திரைப்படப் பிம்பமல்ல அது. அப்படியிருந்திருந்தால் அதைக்கொண்டு 1977இல் பலம் பொருந்திய திமுகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக முதல்வராக நீடித்திருக்க அவரால் முடிந்திருக்காது.

பிம்பமும் நிஜ வாழ்வும்

அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான். தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த பிம்பத்தை முதலமைச்சராக அவர் பெற்ற தோல்விகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த பத்தாண்டுகளில் அவர் அசாதாரணமாக எதையாவது செய்ய முயன்றாரா? ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்கள் எவை? இந்தக் கேள்விகள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால் திரைப்படங்களின் வழி நிலைபெற்றுவிட்ட அவரது பிம்பங்கள் அவரது தோல்விகளுக்கப்பாலுங்கூட முக்கியமானவை.

நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது

காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ

என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,

நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை

என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான பாடல் ஒன்று உண்டு. 1968இல் திரைக்கு வந்த அவரது ஒளிவிளக்கு திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.

தெய்வமாக்கிய பாடல்

எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.

உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.

சாகாவரம் பெற்ற பாடல்

அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் எம்.ஜி.ஆர்., என்ற அந்த தெய்வத்தை தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள். 1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார். 1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x