Last Updated : 11 Apr, 2017 10:37 AM

 

Published : 11 Apr 2017 10:37 AM
Last Updated : 11 Apr 2017 10:37 AM

கேள்வி மூலை 25: புத்தகங்களைப் பிரிக்கப் புதிய முறை கண்ட தமிழர்

ஒவ்வொரு புத்தகமும் ஒரு அறிவுச் சுரங்கம். அதேநேரம் புத்தகங்களை உரிய முறையில் பிரித்து வைக்கவில்லை என்றால், எந்த நூலகத்தையும் நம்மால் பயன்படுத்த முடியாது. இதில்தான் புத்தக வகைப்படுத்தும் முறைகள் கைகொடுக்கின்றன.

புத்தக வகைப்பாட்டியலில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன் எனப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், அடிப்படையில் கணித வியலாளரான இவர், உலகப் புகழ்பெற்ற நூலகவியலாளராக மாறியவர்.

லண்டன் படிப்பு

நூலக அறிவியல் படிக்கும் நோக்கத்துடன் 1924-ல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி நூலக அறிவியல் பட்டப் படிப்பில் இவர் சேர்ந்தார். அந்தத் துறைக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத அவர், அதிக ஆர்வமின்றி அந்தப் படிப்பைப் படிக்க லண்டன் சென்றிருந்தார்.

ஆனால், நூலக அறிவியல் படிப்புகளில் புத்தக வகைப்பாட்டு முறையைக் கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். இதில் அவருடைய கணித அறிவு மூழ்கித் திளைத்தது.

டூயி முறையின் குறைகள்

அவர் படிப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட ‘டூயி தசம வகைப்பாட்டு முறை’ (Dewey Decimal Classification) அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது.

அந்த முறையில் ஒரே புத்தகத்தை இரு வேறு பிரிவுகளில் தவறாகப் பிரித்து வைப்பதற்கான சாத்தியமிருந்தது. அத்துடன் நூல்களுக்கான அடையாளக் குறியீடுகள் மிக நீளமாக இருந்ததால், எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்வதும் சிரமமாக இருந்தது.

இதுபோன்ற குறைபாடுகளை உணர்ந்துகொண்ட எஸ்.ஆர். ரங்கநாதன், புதிய வகைப்பாட்டு முறையைக் கண்டறிவதில் முனைப்பாக ஈடுபட்டார்.

மேற்கண்ட குழப்பமான அம்சங் களைக் களையும் வகையில் ஒரு தலைப்பைப் படிப்படியாகவும் திட்டவட்டமான முறையிலும் அணுகும் முறையை அவர் வலியுறுத்தினார். நிறுத்தல் குறிகளைப் பயன்படுத்தி கோலன் (Colon classification) என்ற புதிய வகைப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்.

நூலகவியல் தந்தை

அந்தக் காலத்தில் நூலக வகைப்பாட்டியல் முறைகளில் காணப்பட்ட வளர்ச்சியின் மையுடன் ஒப்பிடும்போது, புத்தகங்கள் குறித்த தகவலைத் தேடுவதில் ரங்கநாதன் பரிந்துரைத்த முறை முக்கிய வளர்ச்சியாக இருந்தது. அவர் உருவாக்கிய கோலன் வகைப்படுத்தும் முறை இப்போதும் நாட்டின் பல்வேறுபல்கலைக்கழக நூலகங்களில் பயன்படுத்தப் படுகிறது.

புத்தகங்கள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன். நாடெங்கிலும் நூலகங்களை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும், தேசிய நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ‘இந்திய நூலகவியலின் தந்தை’யாகக் கருதப்படும் இவருடைய பிறந்த நாள், தேசிய நூலக நாளாக (ஆகஸ்ட் 12) கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x