யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 15: பெற்றோருக்காக ஐ.ஆர்.எஸ். பெற்ற ஐ.பி.எஸ்.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 15: பெற்றோருக்காக ஐ.ஆர்.எஸ். பெற்ற ஐ.பி.எஸ்.
Updated on
2 min read

ஐ.பி.எஸ். ஆன பின்பும் தமிழகத்தில் உள்ள தனது பெற்றோருக்காக யூ.பி.எஸ்.சி. தேர்வை மீண்டும் எதிர்கொண்டு, 2013-ம் வருட பேட்ச்சில் ஐ.ஆர்.எஸ். ஆனவர் ப.மாணிக்கராஜ். இவர், மூன்றாவது முயற்சியில் 2010-ம் ஆண்டு பேட்ச்சில் ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பிரிவில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். பிறகு நான்காவது முறை தேர்வெழுதி ஐ.ஆர்.எஸ். (ஐ.டி.) என்னும் இந்திய வருவாய்த் துறை (வருமான வரி) பெற்றார்.

கோயம்புத்தூரின் கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். விவசாயத் தம்பதிகளான பாப்புசாமி, மணிமேகலையின் ஒரே மகனான இவர் பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சுமாராகத்தான் படித்தார். கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2006-ல் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். 2007-ல் யூ.பி.எஸ்.சி.யில் புவியியல் மற்றும் தமிழை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்து ஆங்கில வழியில் தேர்வு எழுதியுள்ளார்.

கல்லூரிப் பருவத்தில் யூ.பி.எஸ்.சி.யை நோக்கி

சென்னையின் சங்கர் அகாடமியில் புவியியலில் மட்டும் பயிற்சி பெற்றார் மாணிக்கராஜ். முதல் இரு முயற்சிகளில் முதல் நிலைத் தேர்வில் மட்டும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் நிலையில் 5 மற்றும் 12 மதிப்பெண்களில் நழுவவிட்டார். இதனையடுத்து சங்கர் அகாடமியின் யோசனைப்படி மூன்றாவது முயற்சியில் தமிழுக்கு பதிலாக வேளாண்மை பாடம் எழுதியபோது 2010 பேட்ச்சில் ஜம்மு-காஷ்மீர் பிரிவில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

“நான் மருத்துவராகவோ அல்லது மாவட்ட ஆட்சியராகவோ ஆவேன் என என்னுடைய பெற்றோர் கனவு கண்டனர். ஆனால் நான் சராசரியாகப் படித்ததால் மருத்துவராக முடியவில்லை. கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போதுதான் யூ.பி.எஸ்.சி. மீதும் படிப்பின் மீதும் தீவிரமாக ஆர்வம் உண்டானது. ஐ.பி.எஸ். ஆனபோது ஜம்மு-காஷ்மீரில் பொறுப்பேற்றதால் தமிழகத்தில் இருக்கும் பெற்றோரை அடிக்கடி சென்று பார்க்க முடியாமல் போனது. இதற்காகவே ஐ.ஆர்.எஸ். பணியில் சேர முடிவெடுத்து மீண்டும் தேர்வு எழுதியதில் வெற்றி கிடைத்தது” என மகிழ்கிறார் மாணிக்கராஜ்

அந்த வெற்றிக்குப் பிறகு சந்தித்த நேர்முகத் தேர்வை அச்சமின்றி எதிர்கொண்டார் மாணிக்கராஜ். அப்போது கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் முறையில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியவில்லை. “ஐ.பி.எஸ். வேண்டாம் என சொல்லிவிட்டு ஐ.ஆர்.எஸ். பெற நான் விரும்பியது நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். அந்த நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1100 யூ.பி.எஸ்.சி. வெற்றியாளர்களில் எனக்குக் கடைசி மதிப்பெண்ணாக 100 மட்டுமே கிடைத்தது. பதில் அளிக்காவிட்டாலும் இந்த மதிப்பெண் கிடைக்கக் காரணம் அது தகுதிக்கான நேர்முகத் தேர்வு அல்ல. மாறாக கேள்விகளை எப்படி எதிர்கொள்கிறோம் என எங்களுடைய ஆளுமையை சோதிக்கும் தேர்வாகும். இதனால், 187-வது ரேங்க்குடன் நான் விரும்பிய ஐ.ஆர்.எஸ்.(ஐ.டி.) கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

பணி அனுபவம்

ஐ.பி.எஸ். முதல் பணியாக காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயிற்சி உதவிக் கண்காணிப்பாளராகவும், அங்குள்ள மட்டன் காவல் நிலையத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார் மாணிக்கராஜ். பிறகு உதவிக் கண்காணிப்பாளராக ஜம்முவின் பக்ஷி நகரில் சப்-டிவிஷன் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இப்பணியில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பணியாற்றியவர் அப்பகுதியின் வட்டார மொழிகளில் ஒன்றான உருதுவைப் பேசக் கற்றுக்கொண்டார். பிறகு ஐ.ஆர்.எஸ். (ஐ.டி.) பணிக்காக இந்தி மொழியையும் கற்றுக்கொண்டார். ஐ.ஆர்.எஸ்.(ஐ.டி.) கிடைத்ததும் நாக்பூரில் பயிற்சி பெற்று பெங்களூருவில் பணி அமர்ந்தார். இங்குள்ள வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் உளவு மற்றும் கிரிமினல் விசாரணை அதிகாரியாக முதல் பணி கிடைத்தது.

பிறகு, தொழில் துறையினருக்கான வருமான வரிப் பிரிவின் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். “ஐ.பி.எஸ். விடுத்து ஐ.ஆர்.எஸ். பெற மறுமுயற்சி செய்வது புதிய விஷயமல்ல. நான் தேர்வான அதே வருடம் என்னைப் போலவே ஐந்து பேர் சொந்த மாநிலம் தூரம் என்பதால் மறுமுறை எழுதி ஐ.ஆர்.எஸ். பெற்றார்கள். யூ.பி.எஸ்.சி.யின் பட்டியலில் உள்ள 24 பணிகளிலும் சாதக, பாதகங்கள் உள்ளன. இதில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் மாணிக்கராஜ்.

புதியவர்களுக்கான யோசனை

தற்போது யூ.பி.எஸ்.சி. வெல்வது மிகவும் எளிது. முன்பு போல் அன்றி தற்போது அனைத்து தகவல்களும் தமிழகத்திலேயே கிடைத்துவிடுகின்றன. இணையதளங்களிலும் ஏராளமான தகவல்கள் உள்ளன. இதை பற்றி கல்லூரிக் காலங்களில் விழிப்புணர்வு பெற்று பட்டம் பெற்றவுடன் யூ.பி.எஸ்.சி. முயன்றால் ஒரே முயற்சியில் வெற்றி நிச்சயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in