Published : 27 Jun 2017 10:59 AM
Last Updated : 27 Jun 2017 10:59 AM

வேலை வேண்டுமா? - நபார்டு வங்கியில் உதவி மேலாளர் ஆகலாம்!

நபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கிவருகிறது. இவ்வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் 91 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொது, பொருளாதாரம், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தக் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இருக்கின்றன.

தேவையான தகுதி

உதவி மேலாளர் (பொது) பணிக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது.

பொதுப் பிரிவு தவிர்த்து இதர தொழில்நுட்பப் பிரிவுகளைப் (பொருளாதாரம், விவசாயம் போன்றவை) பொறுத்தவரையில், அந்தந்தப் பாடப்பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தமட்டில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரண்டுமே ஆன்லைன் வழித் தேர்வுகள்தான்.

முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, கணிதம், கணினி, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையிலும், மெயின் தேர்வில் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, பொருளாதாரம் ஆகிய பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையிலும், ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் வகையிலும் வினாக்கள் இடம்பெறும்.

முதல்நிலைத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org) பயன்படுத்தி ஜூலை மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை நபார்டு வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதவி மேலாளர் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.56 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x