Last Updated : 19 Jul, 2016 12:34 PM

 

Published : 19 Jul 2016 12:34 PM
Last Updated : 19 Jul 2016 12:34 PM

வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு!

யூ.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கு (Civil Service Prelims) சில நாட்களே உள்ளன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்குபெறும் இந்தத் தேர்விலிருந்து 12 ஆயிரம் மாணவர்களை யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. ஐந்து லட்சம் போட்டியாளர்களா என மலைப்பாக இருக்கிறதா? 25,000-க்கும் குறைவான மாணவர்களே இந்தத் தேர்வை சிரத்தையுடன் எதிர்நோக்குகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

முதல்நிலைத் தேர்வில் முக்கியமாகச் சோதிக்கப்படுவது மன உறுதியும் தன்னம்பிக்கையும்தான். அதனால் தன்னம்பிக்கை தளராமல் மனஉறுதியோடு இந்தத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். 100 வினாக்களைக் கொண்ட ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies) தேர்வின் மொத்த மதிப்பெண் 200. இதில் 110 மதிப்பெண் பெற்றாலே தகுதி பெறுவது உறுதி. ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. (OBC, SC, ST) வகுப்பின ருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்றுக் குறைவாக இருக்கும். இரண்டாம் தாள் தகுதித் தேர்வு மட்டுமே என்பதால் அதில் 33 சதவீதம் எடுத்தாலே போதுமானது.

இந்தத் தேர்வுக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு இதோ சில எளிமையான குறிப்புகள்.

பாடத்திட்டம் பற்றிய கலந்தாய்வு:-

நடப்புச் செய்திகள்

நடப்புச் செய்திகளைப் பற்றிய அறிவாற்றல் மிகவும் முக்கியமானது. நாளிதழ்களைத் தொடர்ந்து வாசிப்பது அவசியம். அதே போல நடப்புச் செய்திகளின் தொகுப்பாகத் தயாரிக்கப் படும் குறிப்பேடுகளைப் படிக்கலாம். இது தொடர்பாகப் பலவிதமான குறிப்பேடுகள் உள்ள. இவற்றில் எது சிறந்தது என குழப்பமடையத் தேவையில்லை.

அரசியல் சாசனச் சட்டம்

அத்தனை சட்டப் பிரிவுகளை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்னும் பயம் இங்கு எழலாம்.

அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் வழிகாட்டுக் கொள்கைகள் (Fundamental Rights and Directive Principles of State Policy) தொடர்பான சட்டப் பிரிவுகள் அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது தவிர மற்ற பிரிவுகளின் அர்த்தங்களை சரியாகப் புரிந்துகொண்டாலே போதுமானது. அரசியல் சாசன சட்டத் திருத்தம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். மாநில, மத்திய அரசு, Commission (Financial Commission), Constitutional Offices, Statutory bodies பற்றி தெரிந்திருப்பது அவசியம்.

இந்தியப் பொருளாதாரம்

எண்களும் புள்ளியியலும் மட்டும் பொருளாதாரம் அல்ல. அதிலும் இத்தேர்வுக்குப் பொருளாதாரம் சார்ந்த கருத்தியல்களைப் புரிந்துவைத்திருப்பதுதான் முக்கியம். உதாரணமாக, Balance of Payments பகுதியில் வரும் Current Account Deficit எவ்வளவு என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமல்ல. Current Account Deficit-ன் ஏற்ற இறக்கத்தால் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

இந்திய வரலாறு

இந்திய வரலாற்றில் 18-ம் நூற்றாண்டு முதல் இந்திய சுதந்திரம்வரை (1947) அலசி ஆராய்ந்து படிக்க வேண்டும். குறிப்பாக பண்டைய மற்றும் மத்திய கால இந்திய வரலாற்றைத் தேர்வு செய்து படித்தால் போதுமானது.

கலாச்சாரம் சமீப காலமாக வரலாற்றின் இந்தப் பகுதிக்கு இந்தத் தேர்வில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் பகுதியில் மிக முக்கியமாகப் படிக்க வேண்டியவை புத்த மதம், சமணம், கலை மற்றும் கட்டிடக்கலை, ஓவியங்கள், சூஃபி மற்று பக்தி இயக்கம், நாட்டுப்புறக் கலையும் கலாச்சாரமும், இந்திய இசை, சாஸ்திரிய நடனம் மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.

புவியியல் புவியியலின் அடிப்படை கருத்துகளான ஜியோ மார்ஃபாலஜி, கடலியல், வானிலையியல் மிக முக்கியமானது. வானிலை, பருவநிலை மாற்றம் குறித்து தெளிவான புரிதல் அவசியம். இது குறித்து நடத்தப்படும் சர்வதேசக் கருத்தரங்குகள், இதை எதிர்கொள்ள முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத் திருத்தல் அவசியம். உலக வரைபடத்தில் முக்கியப் பகுதிகள், நாடுகள் மற்றும் அவற்றின் எல்லைகள் குறிப்பாக மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, அண்டார்க்டிக் கடல் பிரதேசம், மத்திய ஆசியா, காஸ்பியன் மற்றும் கருங்கடல் பகுதி, பால்டிக் கடல் பிரதேசம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்வாழ் உயிரிகளின் சூழல் அமைப்பு

இந்திய சதுப்பு நிலங்கள், உயிரிகோளக் காப்புக்காடு (Biospere Reserves), புலிகள் சரணாலயம் மற்றும் இவ்விடங்களின் புவியியல் மற்றும் உயிரினங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அருகிவரும் உயிரினங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள்

அரசின் பல்வேறு துறைகளின் இணையப் பக்கங்கள் மூலமாக அதன் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கென நூல்கள் கிடைப்பது சிரமம்.

இறுதிக்கட்டத் தயாரிப்பு

தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை படிக்காமல்விட்டதை தேடி படிப்பதா அல்லது நன்றாக படித்ததை மீண்டும் படித்து சரிபார்ப்பதா என்கிற குழப்பம் எழலாம். எவ்வளவு புதிய விஷயங்களை தெரிந்து கொண்டாலும் முதல் நிலை தேர்வுக்கு நிச்சயம் கைகொடுக்கும். அதே நேரத்தில் ஏற்கெனவே படித்ததை மீண்டும் நன்றாக படிப்பது நல்லது.

தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பு

தவறாகப் பதில் அளித்தால் மதிப்பெண் கள் குறைக்கப்படும் என்பதால் நூறு சதவீதம் சரி என நம்பிக்கை உள்ள கேள்வி களுக்கு மட்டுமே விடை அளிப்பது நல்லது.

நேர நிர்வாகம் அவசியம்

வினாத்தாளின் மொத்த பக்கங்கள் 40-க்கும் குறைவாக இருந்தால் கால அளவு அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க போதுமானதாக இருக்கும். 45 பக்கங்களுக்கு மேல் இருந்தால் கால அளவில் சற்று பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அனைத்து வினாக்களின் நீளம் ஒன்று போல இருக்காது. ஒரு மணி நேரத்தில் 52 வினாக்கள் விடையளித்திருக்க வேண்டும். அதே வேளையில் வினாத்தாளில் சரிபாதி பக்கங்கள் கடந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் விடையைத் தேர்ந்தெடுத்தவுடன் ஓ.எம்.ஆர். தாளில் (OMR Sheet) பதிவு செய்துவிடவும். முற்றிலும் விடை தெரியாத வினாக்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டாம். உரிய இடைவெளியில் வினாக்களின் சரியான எண்களில் ஷேட் (shade) செய்துள்ளோமா என்று உறுதிசெய்கொள்வது அவசியம்.

தேர்வு தினத்தன்று

தேர்வு நாளன்று சோர்வடையாமல் இருப்பது அவசியம். ஆகவே, கடைசி இரண்டு நாட்கள் அதிகம் சிரமப்படாமல் படியுங்கள். தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் எண்ணெய் அதிகம் இல்லாத சத்தான உணவைச் சாப்பிடுங்கள். தேர்வு மையத்தில் பிற மாணவர்கள் படிப்பதைப் பார்த்துப் பதற்றம் கொள்ளாதீர்கள். உங்களுடைய கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து மனஉறுதியுடன் தேர்வை எழுதுங்கள்.

கட்டுரையாளர்: குடிமைப் பணித் தேர்வுகள் பயிற்சியாளர் மற்றும் பணிவாழ்க்கை வழிகாட்டி, பெங்களூர்

தொடர்புக்கு: thiru21vino@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x