Published : 12 May 2017 08:42 AM
Last Updated : 12 May 2017 08:42 AM

ஆறு கோடிப் பேரில் நானும் ஒருவன்! - அருள்நிதி பேட்டி

‘‘‘உப்பு கருவாடு' வெளியானவுடனே ராதாமோகன் சார் இரண்டு கதைகள் சொன்னார். இரண்டுமே பயங்கரமாக நடிக்க வேண்டிய கதையாக இருக்கிறதே எனச் சிரித்தேன். 'ஆறாது சினம்' த்ரில்லர் கதைக்குப் பிறகு மீண்டும் ஒரு த்ரில்லர் கதை செய்ய வேண்டாம் என்று 'பிருந்தாவனம்' ஒப்புக்கொண்டேன்’ ’ என்று 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படப்பிடிப்பில் பேசத் தொடங்கினார் அருள்நிதி.

‘பிருந்தாவனம்' படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடித்துள்ளீர்கள். என்ன பயிற்சி செய்தீர்கள்?

ஏற்கெனவே ராதாமோகன் சார் 'மொழி' படத்திலேயே சைகை மொழியைப் பயன்படுத்தியிருப்பார். அவர் அதில் பரிச்சயமானவர். ஜோதிகா மேடத்துக்குப் பயிற்சி கொடுத்த விஜயா பாஸ்கர் மேடத்திடம் படப்பிடிப்புக்கு முன்பு 10 நாட்களுக்குப் பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பில் விஜயா பாஸ்கர் மேடம் கூடவே இருந்து, என்ன மாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்லிக்கொடுத்தார்கள். “வாம்மா மின்னல்” என்ற வடிவேலு சாரின் காமெடி போல இருந்தது படப்பிடிப்பு.

மைசூரைத் தாண்டி சக்லேஸ்பூர் என்ற இடத்தில் 20 நாட்களும், அதனைத் தொடர்ந்து ஊட்டியில் 20 நாட்களும் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படப்பிடிப்பில் எனக்குத்தான் இடையே இரண்டு நாள் இடைவெளி கொடுத்தார்கள். மற்ற படக்குழுவினர் அனைவருமே இடைவிடாது பணியாற்றி மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார்கள். மீண்டும் ராதாமோகன் சாரோடு ஒரு காதல் கலந்த த்ரில்லர் கதையில் நடிக்கவுள்ளேன். அதுவுமே நடிப்பதற்குச் சவாலான படம்தான்.

விவேக்குடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி…

நடிகர் விவேக்காகவே நடித்துள்ளார். அவருடைய ரசிகனாக நடித்துள்ளேன். காமெடி எப்படி ஒருவனுடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பதுதான் கதைக்களம். நானூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் விவேக் சார். எனக்கு இவ்வளவு பெரிய நடிகரோடு நடிக்கிறோம்; சரியாக நடித்துவிட வேண்டும் என்ற கூச்சம் கலந்த பயம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், முதல் ஷாட்டிலேயே அவருடைய அனுபவத்தையெல்லாம் தாண்டி நட்பாக்கிக்கொண்டார். எந்த வயதினரோடு பேசுகிறாரோ, நடிக்கிறாரோ அந்த வயது ஆளாகவே மாறிவிடுவது அவருடைய ஸ்பெஷல். சினிமாவில் காமெடிக் காட்சிகளில் எப்படிச் சிரிக்க வைக்கிறாரோ, அப்படித்தான் நேரிலும் இருக்கிறார். அதுதான் அவருடைய ஸ்பெஷல்.

மிகவும் நிதானமாகப் படங்களை ஒப்புக்கொள்கிறீர்களே. என்ன காரணம்?

குறைவான படங்கள் செய்கிறோம் என்ற எண்ணத்தில்தான் இந்த ஆண்டு மூன்று படங்களை ஒப்புக்கொண்டேன். எனக்கு வருடத்துக்கு இத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. வருடத்துக்கு ஒரு படம் செய்தாலும், சரியாகச் செய்துவிட வேண்டும் என நினைப்பேன். ஒவ்வொரு படமுமே எனக்கு மிகவும் முக்கியம். அவசரமாக ஒரு படத்தை ஒப்புக்கொண்டு நடித்துச் சரியாகப் போகாமல், அடுத்த இரண்டு வருடங்களுக்குப் படமே செய்யாமல் இருப்பதைவிட வருடத்துக்குச் சரியாக ஒரு படம் செய்வதே மேல். அதுக்காக மட்டுமே எனக்குச் சரியான கதைகளைத் தேர்வு செய்து போய்க்கொண்டிருக்கிறேன். என்னுடைய ப்ளஸ் – மைனஸ் இரண்டுமே எனக்குத் தெரியும்.

என்னிடமிருந்து ஒரு படம் வரும்போது, அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறார்கள். அதை ஏமாற்ற விரும்பவில்லை. எத்தனை படங்களில் நடித்தாலும் கதைநாயகனாகவே இருக்க விரும்புகிறேன். 15 ஆண்டுகள் கழித்து எனது திரையுலக வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, இத்தனை படங்களில் நடித்தாலும் நல்ல படமாகச் செய்திருக்கிறான் என்று அனைவரும் சொல்ல வேண்டும். அந்தப் பெயரை ரொம்ப முக்கியமாகப் பார்க்கிறேன்.

உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் மற்ற நாயகர்கள் நடிப்பது எப்போது?

நான்கு படங்களைத் தயாரித்துள்ளேன். எனது நிறுவனத்திலேயே தொடர்ச்சியாகப் படம் நடித்தாலும், ஏன் என்ற கேள்வி வருகிறது. அதனாலேயே வெளிநிறுவனங்களும் படம் நடித்துக்கொடுக்கிறேன். வெளிநிறுவனத்தின் படங்களில் நடிக்கும்போது, எனக்குத் தயாரிப்புச் சுமை குறைவாகவுள்ளது. வரும் காலங்களில் இதர நாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருக்கிறது.

அதற்காகப் புதிய நிறுவனம் ஒன்று தொடங்கும் பணியில் உள்ளோம். அனைத்தும் முடிவாகித் தொடங்க ஒரு வருடம் ஆகலாம். என்னுடைய படங்களின் பொருட்செலவுக்கு எத்தனை திரையரங்குகளில் வெளியாக வேண்டும் எனத் தெரியும். ஆனால், ஒவ்வொரு வாரமும் நிறைய படங்கள் வெளிவருவதுதான் பிரச்சினை. அது எனக்கு மட்டும் பிரச்சினையல்ல. ஒட்டுமொத்தத் தமிழ் திரையுலகுக்கான பிரச்சினை.

ஜல்லிக்கட்டுக்காகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களே…

(கேள்வியை முடிக்கும் முன்பே) நான் மட்டுமா போராடினேன். அப்போது ஊரே போராடியது. அதில் அரசியல் எதுவுமே கிடையாது. அரசியலாகப் பார்த்தீர்கள் என்றால் ஆறு கோடிப் பேர் எம்.எல்.ஏ-வுக்கு நிற்க வேண்டும். அனைவருடனும் இணைந்து போராடினேன் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதை அரசியலாகப் பார்க்கக் கூடாது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x