இளைஞர்களுக்குத் தமிழ் ஊட்டும் மன்றம்
படிப்பு, வேலை என வாழ்க்கையே பரபரப்பாக மாறிவரும் இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியம் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இத்தகைய நிலையில், தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு குறித்து மாணவர்களுக்கு உணர்த்த ‘தமிழ்ப் பேராயம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். தமிழ் மொழி வளர்ச்சிக்கெனவே இந்த அமைப்பு 2011-ல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தரால் நிறுவப்பட்டது.
தமிழ் மென்பொருள்
இந்தத் தமிழ்ப் பேராயத்தின் ஓர் அங்கமாகச் செயல்படுகிறது பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம். கடந்த 2015-ல் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தமிழ் மன்றத்தின் தலையாய நோக்கங்கள், மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டைச் சொல்லிக்கொடுப்பது, தமிழ்ப் பற்றை ஊட்டுவது, அவர்களிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பது, தமிழ் ஆற்றலை ஊக்குவிப்பது ஆகியவையே.
“முழுக்க முழுக்கத் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ்ப் பேராயம் அமைப்பு. உரைநடை வழியாகத் தமிழ்ப் பயிற்சி அளிப்பது, தமிழ்ப் பேராயத்தின் சிறப்பம்சமாகும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, தேசிய-சர்வதேசக் கருத்தரங்குகள், பட்டிமன்றம், கவியரங்கம் முதலான இலக்கிய நிகழ்வுகளை இதில் நடத்துகிறோம். தமிழ் மென்பொருளைப் பிரத்யேகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
படைப்பிலக்கியம், கவிதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, அறிவியல் தமிழ், தமிழிசை என 11 தலைப்புகளில் ரூ.22 லட்சத்துக்கு விருதுகள் வழங்குகிறோம்” என மாணவர் தமிழ் மன்றத்தின் இலக்குகளையும் பணிகளையும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் தமிழ்ப் பேராயம் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கரு. நாகராஜன்.
தமிழோடு சமூக அக்கறை
இது தவிர வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் படிக்க வசதியாக இணையவழிக் கல்வி, வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு அயலகத் தமிழாசிரியர் என்ற பிரத்யேகப் பட்டயப் படிப்பு, கணினித் தமிழ்ச் சான்றிதழ் கல்வி என இணையவழி படிப்புகளையும் வழங்கிவருகிறது.
மேலும், பல்வேறு தமிழ்ப் பணிகளையும் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது இந்தத் தமிழ்ப் பேராயம் அமைப்பு. சங்க இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சி, சங்க இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறைகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் வகையில் சங்க இலக்கியங்களை எளிய மொழிநடையில் வெளியிடுவது, சிறந்த புத்தகங்களை மொழிபெயர்ப்பது, மறுபதிப்பு செய்வது என தமிழ்ப் பணிகள் பட்டியல் நீள்கின்றன.
இந்த மன்றத்தில் தமிழ்ப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் என்று கிட்டத்தட்ட 3,800 உறுப்பினர்கள் தற்போது உள்ளனர்.
“அடுத்து, தமிழ் மன்றத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்குக் கவிதை எழுதும் பயிற்சி, பேச்சாற்றல், புத்தக விமர்சனம் எழுதுவது, சமூகச் சிந்தனை உருவாக்குவது முதலான பயிற்சிகளை அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், கண்தானம், ரத்ததானம், முழு உடல் பரிசோதனை, மரக் கன்றுகள் நடுதல், ஏழை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் சேவைகளில் ஈடுபடுகிறோம்” என்கிறார் கரு.
நாகராஜன். இவர் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலராகவும் பணியாற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக மாணவர் ஒருங்கிணைப்பாளராக அருணாச்சலம் செயல்படுகிறார்.
தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் சார்ந்த விழுமியங்களை இளைய தலைமுறையிடம் கொண்டுசெல்லும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றத்தின் பணி போற்றத் தக்கது!
