Last Updated : 27 Sep, 2013 10:40 AM

 

Published : 27 Sep 2013 10:40 AM
Last Updated : 27 Sep 2013 10:40 AM

நாகேஷ் எனும் மக்கள் கலைஞன்

நாகேஷ் எனும் மக்கள் கலைஞனின் பிறந்தநாள் இன்று. குண்டுராவ் என்றுஅழைக்கப்பட்ட இவர், கம்பராமாயண நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வம் ெற்று சென்னை வந்தார்.

கவிஞர் வாலியுடன் தங்கிக்கொண்டு, ரயில்வேயில் வேலை பார்த்து வந்த காலத்தில் ஒரு நாடகத்தில் வயிற்று வலிக்காரனாக இவர் நடித்த நடிப்பை பார்த்து பிரமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு கோப்பையை பரிசாக தந்தார். ஆனால், அதையாரும் பாராட்டவில்லை. நாகேஷை போலீஸ் கூப்பிட்டு, கோப்பையை திருடி வந்தாயா என்று விசாரிப்பது தான் நடந்தது.

அப்பொழுதில் இருந்து விருதுகளை வைக்க என்று வீட்டில் எந்த இடமும் தனியாக வைத்தது இல்லை அவர். ரெஜினா எனும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாகினி ஸ்டுடியோ ஓனரை, யாரென்று தெரியாமல் கிண்டலடித்த பொழுது இவரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் தான் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார் நாகேஷ்.

தொழுப்பேடு ரயில்வே கிராசிங் மூடி இருந்ததால் ஜெயகாந்தனும் இவரும் காரில் காத்திருக்க நேர்ந்தது . என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஜே.கே "பிச்சை எடுக்கலாமா ?" என்று கேட்டிருக்கிறார். இருவரும் சட்டை,பேன்ட் ஆகியவற்றை கழட்டிவிட்டு அண்டர் டிராயர் உடன் அமர்ந்து பிச்சை எடுத்திருக்கிறார்கள். நாகேஷ் தட்டில் குறைவாகவே பணம் சேர்ந்திருக்கிறது

‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த நடிகர் நாகேஷ், தில்லானா மோகனாம்பாள் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்ட 'வைத்தி' கதாபாத்திரத்தில் தோன்றி பின்னி எடுத்தார். மைலாப்பூர் குளத்தில் அமர்ந்து கொண்டு "தண்ணியெல்லாம் வத்திப்போச்சே" என்று புலம்பிக்கொண்டு இருந்த கிருஷ்ணஸ்வாமி எனும் நபரின் தாக்கத்தை

அப்படியே திரையில் கொண்டு வந்து நாகேஷ் காட்டிய விஸ்வரூபம் தான் தருமி கதாபாத்திரம். சிவாஜி அதைப் பார்த்து ரசித்து, கட்டே இல்லாமல் அது ஸ்க்ரீனில் வருமாறு பார்த்துக்கொண்டார். 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் அவர்களின் நடிப்பைப்பற்றி கமல் இப்படி சொன்னார் "உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ’இருக்கவில்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார்'' என்றார்.

நாகேஷ் நடிப்பைப் பார்த்து பிரமித்த வடநாட்டு நடிகர்கள் ஏராளம். இவரது 'அனுபவி ராஜா அனுபவி' படத்து கதாபாத்திரத்தை ஹிந்தியில் எடுத்து நடித்த மக்மூத் இவர் காலில் விழுந்து மரியாதை செய்தார். நாகேஷ் அவர்கள் வெறும் மவுனமான உடல்மொழியின் மூலம் காமெடி செய்யலாம் என்று சாப்ளின்,பஸ்டர் கீட்டன் ஆகியோரை பார்த்து நம்பினார். பின்னர் சத்தம் போட்டு திரையை அதிரவைத்தார்.

மதுப்பழக்கம்,ஒரு கொலை வழக்கில் உருண்ட பெயர் இவற்றைத்தாண்டி மீண்டும் திரையில் மின்னினார் நாகேஷ். அவரது நடன பாணி தனித்துவமானது. ஒரு முறை சரியாக ஆடத்தெரியவில்லை என்றொரு இயக்குனர் இவரை கடிந்து கொள்ள, கதவை மூடிக்கொண்டு பயிற்சி செய்துவிட்டு வந்தார். நடனத்தில் கலக்கி எடுத்தார். அப்படித்தான் அவரது பாணி உருவானது. தமிழகத்தின் ஜெர்ரி லூயிஸ் ஆனார் நாகேஷ்.

'பூவா தலையா?' படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்குவார். அப்போது இல்லாத வசனமான 'இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு' என்று டயலாக் பேசி அதிரவைத்தார். 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஆக் ஷன் என்று பாலச்சந்தர் சொன்னதும் நிழலை பார்த்து சியர்ஸ் சொன்னார் மனிதர் !

"உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி ?" என்று கேட்ட பொழுது ,"மாவு நல்லா அரைபடணும் அப்படின்னு அம்மிக்கல்லை ஆறு மாசத்துக்கு ஒருமுறை கொத்து வைப்பாங்க. அப்படி என் முகத்தில் சின்ன வயசில் ஆண்டவன் வைத்த அம்மை தழும்பால் தான் நான் நல்லா பொளிஞ்சு இருக்கேன் !" என்றார். அது தான் நாகேஷ் !

'நம்மவர்' படத்துக்காக பெற்ற சிறந்த துணை நடிகர் விருதைத் தவிர எந்த மத்திய அரசின் விருதும் இந்த மகத்தான கலைஞரை தேடிவரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x