Published : 01 Jan 2016 16:42 pm

Updated : 13 Jun 2017 15:51 pm

 

Published : 01 Jan 2016 04:42 PM
Last Updated : 13 Jun 2017 03:51 PM

சினிமா ரசனை - 30: முதுமையை வென்ற இருபெரும் இசையமைப்பாளர்கள்!

30

“ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்கையில், காட்சிகளில் சொல்லப்படாத விஷயங்களைப் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதே மிகவும் முக்கியம். அதுதான் இசையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்” – என்னியோ மாரிகோனி, உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் (வயது 87).

எந்த நாட்டுப் படமாக இருந்தாலும் சரி, இசை அப்படங்களில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த இசையை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டு இசையமைப்பவர்கள் நிஜமாகவே குறைவுதான். உலகம் முழுக்க ஏராளமான இசையமைப்பாளர்கள் இருந்தாலும், அவர்களில் சிலரே ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கிறார்கள். காரணம் இசையைப்பற்றிய அவர்களின் புரிதல். அப்படிப்பட்ட இரண்டு உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

வெஸ்டர்ன் படங்களின் இசை பிரம்மா

முதலில், என்னியோ மாரிகோனி. தனது ஆறாவது வயதிலேயே இசைக்குறிப்புகளை எழுதத்தொடங்கிய ஜீனியஸ். 1928 நவம்பர் 10-ம் தேதி ரோமில் பிறந்த மாரிகோனி, சில குழுக்களில் ட்ரம்பெட் வாசித்துவந்த அவரது தந்தையால் கவரப்பட்டு இசையின் பக்கம் வந்தார். ட்ரம்பெட்டை முறைப்படி கற்றுக்கொண்டார். தனது பதினான்காவது வயதில், ட்ரம்பெட் டிப்ளமாவை முடித்ததில் இருந்து முழுவீச்சில் இசைக்குறிப்புகளை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அப்போதிலிருந்து இன்றைய தேதி வரை கிட்டத்தட்ட எழுபத்து நான்கு வருடங்களாகப் பல்வேறு வகையான இசைக்குறிப்புகளை எழுதி உலகப்புகழோடு விளங்கிக்கொண்டிருக்கிறார்.

அறுபதுகளில் வெளியான கௌபாய் படங்களின் ரசிகர்கள், மாரிகோனியின் இசையை மறந்திருக்க மாட்டார்கள். ‘A Fist Full of Dollars’, ‘For a Few Dollars More’, ‘The Good, The Bad and the Ugly’, ‘Once upon a Time in the West’, ‘A Fist full of Dynamite’ போன்ற அட்டகாசமான வெஸ்டர்ன் படங்களில் இயக்குநர் செர்ஜியோ லியோனியுடன் இணைந்து பணிபுரிந்தார் மாரிகோனி. இவற்றில், ‘Once upon a Time in the West’ படத்தின் இசையானது, உலகம் முழுக்கப் பத்து மில்லியன் பிரதிகள் விற்றிருக்கிறது. உலகத்தில் மிக அதிகமாக விற்பனையான இசைக்குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதுபோல அவரது பல படங்களின் இசைக்குறிப்புகள் ஏராளமாக விற்றிருக்கின்றன.

தாயக வாசம்.. தாய்மொழிப் பாசம்..

மொத்தம் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளார் மாரிகோனி. அவை சாதாரணமான இசைக்குறிப்புகளும் அல்ல. ஒவ்வொன்றுமே மாரிகோனியின் ஜீனியஸைப் பறைசாற்றும் தன்மையுடையன. இப்போதுவரை மிகவும் பிஸியாகவும் உள்ளார். நாம் சென்ற வாரம் பார்த்த ‘The Hateful Eight’ படத்தின் இசையை அமைத்திருப்பவர் மாரிகோனிதான். படம் வெளியான ஒருசில தினங்களிலேயே இவரது இசை பலவாறு பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த 70க்கும் மேற்பட்ட வருடங்களாக இசையமைத்துக்கொண்டிருக்கும் இவர், இத்தாலியில் மட்டுமில்லாமல், உலகம் முழுக்கவே பல்வேறு புகழ்பெற்ற இயக்குநர்களின் பல படங்களுக்கு மாரிகோனியே இசை. சினிமா பேரடிஸோ இயக்கிய க்யுஸெப்பெ தோர்னதோரே, டெரன்ஸ் மாலிக், ப்ரையன் டி பால்மா, பாரி லெவின்ஸன், ஆலிவர் ஸ்டோன், ரோலாண்ட் ஜோஃப்ஃபே, ரோமன் பொலான்ஸ்கி, ஜான் கார்ப்பெண்டர், வுல்ஃப்கேங் பீட்டர்ஸன் மற்றும் ஏராளமான இயக்குநர்களின் பல படங்கள் மாரிகோனியின் இசையால் புகழடைந்துள்ளன.

இன்றும் துடிப்பாக இயங்கிவரும் இந்த 87 வயது இளைஞர், இன்றுவரை பேட்டிகளில் இவரது தாய்மொழியான இத்தாலியனில் மட்டுமே பேசுவார். ஹாலிவுட்டில் வாழ மாட்டேன் என்று முடிவுசெய்து, இன்றுவரை இத்தாலியில்தான் வாழ்கிறார். இப்போதுவரை மொத்தம் 70 மில்லியன் பிரதிகள் உலகெங்கும் இவரது இசை விற்றிருக்கிறது.

ஐந்துமுறை ஆஸ்கரை அள்ளியவர்!

இந்தக் கட்டுரையில் அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் இசையமைப்பாளர், டிபிகல் ஹாலிவுட் இசையமைப்பாளர் என்றே அறியப்படுபவர். என்னியோ மாரிகோனியை விட நான்கு வயது இளையவர் (83). இவரும் மாரிகோனியைப்போலவே இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். ஹாலிவுட்டில் இவர் இசையமைக்காத பிரபல இயக்குநர்களே இல்லை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான இசையமைப்பாளர். இதுவரை வெளியாகியுள்ள ஸ்டார் வார்ஸின் ஏழு பாகங்களுக்கும் இசையமைத்துள்ள ஜான் வில்லியம்ஸ்தான் அந்த இசையமைப்பாளர்.

உலகப்புகழ் பெற்ற ‘Fiddler on the Roof’படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் ஜான் வில்லியம்ஸ் பெற்ற முதல் ஆஸ்கர். இதன்பின் ‘Towering Inferno’, ‘Jaws’, ‘Star Wars’ படங்கள், ‘Superman’, ‘Close Encounters of the Third Kind’, ‘Indiana Jones’ படங்கள், ‘E.T’, ‘Empire of the Sun’, ‘Home Alone’, ‘Jurassic Park’, ‘Shindler’s List’, ‘Seven Years in Tibet’, ‘A.I’, ‘Harry Potter and the Sorcerer’s Stone’ என்று ஹாலிவுட்டின் அத்தனை பிரபலமான சீரீஸ் வகைப் படங்களுக்கும் இவர்தான் இசை. தற்போது சென்ற வாரம் வெளியாகியிருக்கும் ஸ்டார் வார்ஸின் ஏழாவது படமான ‘The Force Awakens’ படத்துக்கும் ஜான் வில்லியம்ஸ்தான் இசை.

இதுவரை மொத்தம் 49 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, அவற்றில் ஐந்து ஆஸ்கர்களை வாங்கியிருக்கிறார் வில்லியம்ஸ். ஹாலிவுட்டின் வாழும் இசைப் பிதாமகர் என்று ஜான் வில்லியம்ஸை எளிதாகச் சொல்லிவிடமுடியும் (இன்னொரு பிதாமகர், ஜெர்ரி கோல்ட்ஸ்மித்).

என்னியோ மாரிகோனி மற்றும் ஜான் வில்லியம்ஸ் ஆகிய இருவரைப்பற்றியும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. ‘ஹேட்ஃபுல் எய்ட்’ படத்துக்காக வரும் ஆண்டு ஆஸ்கர்களில் அவசியம் என்னியோ மாரிகோனி பரிந்துரை செய்யப்படத்தான் போகிறார். அதேபோல் ‘ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்துக்காக ஜான் வில்லியம்ஸூம் அதே ஆஸ்கர்களில் பரிந்துரை செய்யப்படுவார். இந்த இருவரில் ஆஸ்கர் வெல்லப்போவது யார் என்பதுதான் மிகுந்த சுவாரஸ்யமான தகவல். இதுவரை ஐந்துமுறைகள் வென்றுள்ள ஜான் வில்லியம்ஸுக்கே வாய்ப்பு அதிகம். மாரிகோனி இதுவரை ஐந்தே முறைகள்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒரு ஆஸ்கர்கூட வென்றதில்லை (உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் ஆஸ்கர்களில் இப்படித்தான் கிள்ளுக்கீரையாக நடத்தப்படுவர்).

பல திறமையான இசையமைப்பாளர்கள் ஹாலிவுட்டில் உண்டு. இருந்தாலும், என்னியோ மாரிகோனி மற்றும் ஜான் வில்லியம்ஸின் பாதிப்பு இல்லாத இசைக்கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் (ஜெர்ரி கோல்ட்ஸ்மித்தும் இத்தகைய ஜீனியஸே).
ஜான் வில்லியம்ஸ்சினிமாவிமர்சனம்தொடர்சினிமா ரசனைஇசையமைப்பாளர்கள்!

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x