Last Updated : 01 Feb, 2017 10:28 AM

 

Published : 01 Feb 2017 10:28 AM
Last Updated : 01 Feb 2017 10:28 AM

யானைக்கு எப்போது தும்பிக்கை நீண்டது?

யானை என்றாலே அதன் குண்டு உடலும் நீளமான தும்பிக்கையும்தான் நினைவுக்கு வரும். அந்தத் தும்பிக்கை தொடர்பாகச் சுவையான பல தகவல்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வோமா?

# பிறக்கும்போது யானையின் தும்பிக்கை ரொம்ப சின்னதாகவே இருக்கும். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இது வேகமாக வளரத் தொடங்கிவிடும். யானைக் குட்டிகளுக்குத் தொடக்கத்தில் இந்தத் தும்பிக்கையை என்ன செய்வது என்றே தெரியாது. சில சமயம் தும்பிக்கையால் தடுக்கிக் கீழேகூட விழும்.

# யானையின் தும்பிக்கைக்கு முகரும் தன்மை மிக அதிகம் உண்டு. அதாவது நிறைய நரம்புகள் கொண்டது தும்பிக்கை. பல மைல் தொலைவில் இருக்கும் தண்ணீரைக்கூட இருக்குமிடத்திலிருந்தே தும்பிக்கை மூலம் யானையால் கண்டுபிடித்துவிட முடியும்.

# யானையின் தும்பிக்கையில் 40,000 தசைகள் உள்ளன (மனிதனுக்கு வெறும் 639தான்). அதனால்தான் மிகப் பெரிய மரங்களைக்கூட யானையால் தன் தும்பிக்கை மூலம் தூக்க முடிகிறது.

# சில ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை நுனி இரண்டு விரல்கள் போலப் பிளவுபட்டிருக்கும். அதனால், இரண்டு விரல்களால் தூக்குவதைப் போல அந்த யானைகளால் சில பொருள்களைத் தூக்க முடிகிறது. ஆனால், ஆசிய யானைக்கு ஒரே தும்பிக்கைதான். அதனால் எந்தப் பொருளையும் அது தன் தும்பிக்கையால் வளைத்துச் சுற்றித்தான் தூக்குகிறது.

# யானைக்குத் தும்பிக்கை என்பது மூக்கா, நாக்கா, விரலா? வெவ்வேறு கோணங்களில் யோசித்தால் இவை எல்லாமுமாகச் செயல்படுகிறது தும்பிக்கை.

# யானையின் தும்பிக்கை பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஒரு கதையை எழுதி இருக்கிறான். அது இதுதான்:

ஒரு காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. அது அருகில் வந்தாலே மீதி விலங்குகளெல்லாம் ஓடி ஒளிந்தன. காரணம், அதன் முதுகு அழுக்காக இருந்தது. இதனால், அது அருகில் வந்தாலே ஒரே நாற்றம்! யானைக்கு இதில் ஒரு பிரச்சினை இருந்தது. எப்படித் தன் பெரிய முதுகைத் தேய்த்துக் குளிப்பது? (அப்போதெல்லாம் யானைக்குச் சிறிய மூக்குதான்.)

பிற விலங்குகள் தன்னுடன் விளையாட மறுப்பதை நினைத்து, அந்த யானை ஒரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு (யானை உட்கார்ந்தால் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்களேன்!), ஓவென்று அழுதது. தொடர்ந்து சில நாட்களுக்கு அழுதது அது. திடீரென்று பார்த்தால் அதன் மூக்கு நீளமாக நீண்டிருந்தது.

அருகிலிருந்த நதிக்குப் போய்த் தன் தும்பிக்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. அதன் மூலம் தண்ணீரை உறிஞ்சி

தன் முதுகில் அடித்துக்கொண்டது. அதன் உடம்பு அழுக்கெல்லாம் போயே போச்சு. இதன்பிறகு மற்ற விலங்குகளெல்லாம் யானையோடு விளையாடத் தொடங்கின. யானைக்கு அவ்வளவு சந்தோஷமாகி விட்டது.

அதிலிருந்துதான் எல்லா யானை களுக்குமே தும்பிக்கை நீளமாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x