Published : 18 Sep 2013 12:30 PM
Last Updated : 18 Sep 2013 12:30 PM

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட திட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் வினாத்தாள்-விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல புதிய நடைமுறைகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அரசு பொதுத் தேர்வுகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய முக்கிய தேர்வுகள். இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்தான் அவர்கள் எந்த படிப்பை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கின்றன.

அதனால்தான் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளைக் காட்டிலும் அவர்களின் பெற்றோர் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். டியூசன், அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்சி என என்னென்ன வசதிகள் உண்டோ அத்தனையையும் தங்கள் பிள்ளைகளுக்கு செய்துகொடுக்கிறார்கள்.

ஒரே வாரத்தில் தேர்வு முடிவு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், 8 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வும் எழுதுகிறார்கள். தேர்வு முடிவடைந்து விடைத்தாள் மதிப்பீடு செய்து முடிவு வெளியிடுவதற்கு கிட்டதட்ட 2 மாதங்கள் ஆகின்றன.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்து சரிபார்த்து மதிப்பெண் பட்டியல் தயாரித்து தேர்வு முடிவை வெளியிடுவதற்குள் தேர்வுத்துறை ஒருவழியாகிவிடும். இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்து ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

புதிய நடைமுறைகள்

இதற்காக இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் உதவி தேர்வர்கள் (விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்) மதிப்பெண் விவரம், தேர்வு எண், தேர்வு மையம் போன்றவற்றை பட்டியலாக தயாரித்து முதன்மை தேர்வரிடம் அனுப்புவர்.

அவர் விடைத்தாள்களை குத்துமதிப்பாக மதிப்பீடு செய்வதுடன் மதிப்பெண் பட்டியலை மீண்டும் சரிபார்ப்பார். அதன்பிறகு அந்த பட்டியல் மதிப்பெண் சரிபார்ப்பு அதிகாரியிடம் செல்லும். அவரது ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண் அட்டவணையாரிடம் வழங்கப்படும். இவ்வாறு பல்வேறு சரிபார்ப்புக்குப் பிறகு மதிப்பெண் பட்டியல் அணி அணியாக தபால்பிரிவு பணியாளர் மூலம் சென்னையில் உள்ள அரசு ஆவண தொகுப்பு மையத்துக்கு (டேட்டா சென்டர்) அனுப்பப்படும்.

வினாத்தாள்-விடைத்தாள் பாதுகாப்பு

இவ்வளவு நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் மதிப்பெண் பட்டியல் விவரங்களை தினசரி ஆன்லைனில் சென்னைக்கு அனுப்பும் புதிய நடைமுறையை கொண்டுவர தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், வினாத்தாள் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், விடைத்தாள்களை அதற்கான மையங்களுக்கு எடுத்துச்செல்லவும் பாதுகாப்புக்காக புதிய முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

அரக்கு சீல் இல்லை

வினாத்தாள்-விடைத்தாள் பாதுகாப்பை உறுதி செய்ய அரக்கு சீல் வைக்கும் நடைமுறைக்குப் பதிலாக வங்கிகளில் கேட்புக் காசோலையில் தொகையில் எந்த திருத்தமும் செய்யாமல் இருப்பதற்காக அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதைப் போல வினாத்தாள், விடைத்தாள் எடுத்துச்செல்லப்படும் கட்டுகளில் தேர்வுத்துறை அதிகாரிகளின் கையெழுத்துடன் ஸ்டிக்கரை ஒட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், விடைத்தாள்களை அதற்கான மையங்களுக்கு எடுத்துச்செல்லவும் பாதுகாப்புக்காக புதிய முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x