

மாணவர்களோடு உரையாடுவது எப்போதும் எனக்கு விருப்பமான விஷயம். பெருங்கவலைகள் இல்லாத இளம்பருவத்தின் மகிழ்ச்சித் துளிகள் கொஞ்சம் எனக்குள்ளும் வந்து சேரும். தேங்கிவிடாமல் உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் இந்த உரையாடல் மிகவும் உதவும்.
வித்தியாசமான கடிகாரம்
சரவணன் என்றொரு மாணவர். அவர் இருந்த வகுப்பில் பத்துப் பேர் மிகவும் நன்றாகக் கவனிப்பார்கள். ஐந்து பேர் நன்றாகக் கவனிப்போர் இருந்தால் போதும், மற்றவர்களை எளிதாகக் கவனிக்க வைத்துவிடலாம். ஆகவே அந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. என் சக்தியை எல்லாம் திரட்டி வகுப்பு எடுத்தேன். எவ்விதம் எல்லாம் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று கருதியிருந்தேனோ அவ்விதம் எல்லாம் கற்பிக்க வாகாக அமைந்த வகுப்பு அதைப் போல வேறொன்றில்லை. மாணவர்களும் அத்தனை பிரியமாக இருப்பார்கள்.
சரவணனும் அவர் நண்பர்களும் ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு என்னைத் துறையில் சந்திக்க வருவார்கள். எப்போதும் பாடத்தையே பேச முடியாது அல்லவா? சரவணன் கையில் நிறையக் கயிறுகளைக் கட்டியிருந்தார். செம்பு வளையத்தையும் போட்டிருந்தார். ஒருநாள் அந்த வளையத்தைக் கழற்றிக் கொடுக்கக் கேட்டேன். இன்னொரு கையில் கட்டியிருந்த கடிகாரம் வித்தியாசமாகத் தெரிந்தது. அதையும் கழற்றிக் கொடுக்கும்படி கேட்டேன். கொடுத்தார். அக்கடிகாரத்தில் ஒரு முன்னணி நடிகரின் படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. நடிகர்களின் மேல் அதீதப் பாசத்தில் இருக்கும் மாணவர்களைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கரைத்துவிடுவது என் வழக்கம்.
எல்லாமே சரவணன்தான்!
சரவணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டுத் திரைப்பட ஆசையில் சென்னை சென்று ஒரு வருடம் சுற்றியதாகவும் அப்போது அந்த நடிகரைப் பார்க்க அலைந்ததாகவும் சொன்னார். அது எனக்குப் போதுமானதாக இருந்தது. கடிகாரத்தையும் வளையத்தையும் என் மேஜையறைக்குள் போட்டு வைத்தேன். தினமும் சரவணனும் நண்பர்களும் என்னைப் பார்ப்பதற்கும் என்னிடம் பேசுவதற்கும் விஷயம் கிடைத்துவிட்டது. “வளையத்தை வைத்துக் கொள்ளுங்கள், கடிகாரத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்பது அவர் கோரிக்கை. “கடிகாரத்துள் இருக்கும் நடிகர் படத்தை நீக்கிவிடுவதென்றால் கொடுக்கிறேன்” என்பது எனது பதில். இந்தப் பேச்சு அப்படியே கதையாக விரிந்தது. நானும் சரவணனின் நண்பர்களும் இணைந்து ஒரு கதையை உருவாக்கிவிட்டோம்.
சரவணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் சென்னைக்குப் போய் அந்த நடிகர் வீட்டுக்கு முன்னால் நின்றார். காரில் நடிகர் கிளம்பும்போது அவர் கண்ணில் படும்படி நிற்பார். மாதக்கணக்கில் நின்றபின் “யார் அது” என்று நடிகர் கேட்டார். சரவணனை அழைத்துப் போய் நடிகரின் முன்னால் நிறுத்தினார்கள். நடிகரின் படங்கள் பற்றியும் அவர்மீது தான் கொண்டிருக்கும் வெறித்தனமான அன்பையும் சொன்னார் சரவணன். நடிகர் நெகிழ்ந்து போய்விட்டார். “நீ என்னோடவே இரு” என்று சொல்லி உதவியாளராக வைத்துக்கொண்டார். அதுமுதல் நடிகருக்கு எல்லாமே சரவணன்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு படத்தில் அந்த நடிகருக்கு அடிபட்டுப் படுத்துக் கிடப்பது போலவும் கதாநாயகி அவரைக் கவனித்துக்கொள்வது போலவும் காட்சிகள் வரும். படத்தில் வருவது உண்மைதான் எனவும் அப்போது உண்மையாகவே அடிபட்டு நடிகர் படுக்கையில் கிடந்தார் எனவும் எங்கள் கதை வளர்ந்தது. அப்போது உடனிருந்து முழுதுமாகக் கவனித்துக் கொண்டவர் சரவணன். உடலைத் துடைப்பதிலிருந்து கால் கழுவி விடுவது வரைக்கும் சரவணன்தான். அப்புறம் சரவணனின் அப்பாவும் அம்மாவும் கதறி அழுததால் ஊருக்குத் திரும்பிவிட்டார். இப்போதும் அடிக்கடி நடிகர் இவருக்குப் பேசுவார். படிப்பு முடித்ததும் அவரைத் தேடி மீண்டும் போய்விடுவார். ‘என்ன இருந்தாலும் கால் கழுவி விட்டவரை யாராவது மறப்பார்களா?’ என்று கதையை முடிப்போம்.
மனக்காயத்தை ஆற்ற வேண்டுமே!
கதையை உண்மை போலவே சொல்வோம். ஆகவே அது உண்மை எனவே மாணவர்களிடம் பரவிச் சிலர் சரவணனிடம் வந்து அந்த நடிகரைச் சந்திக்கவும் ஏதாவது வாய்ப்பு வாங்கித் தரவும் சிபாரிசு கேட்கத் தொடங்கிவிட்டனர். “ஐயா உருவாக்கிய கதை” என்று சரவணன் சொல்லியது எடுபடவில்லை. இந்தப் பேச்சும் கதையும் ஒரு வருடம் முழுக்க ஓடியது. கடைசியாகப் படிப்பு முடித்துப் போகும்போது என்னிடம் இருந்து கடிகாரத்தை ஒருவழியாக வாங்கினார்.
இடையில் ஆண்டுகள் ஓடின. சரவணன் எப்போதாவது எனக்குச் செல்பேசியில் பேசுவார். ஒருமுறை “எந்த சரவணன்” என்று கேட்டுவிட்டேன். அது அவருக்குப் பெரிய மனக்காயம் ஆகிவிட்டது. அந்த நடிகரின் பெயரைச் சொல்லி “அந்தச் சரவணங்கய்யா” என்றார். “எத்தனையோ சரவணன் இருக்குறாங்க. கால்கழுவி சரவணன்னு அறிமுகப்படுத்திக்க வேண்டாமாப்பா” என்று வேடிக்கையாகச் சொன்னேன். “போங்கய்யா” என்று வெட்கப்பட்டாலும் என் கேள்வி அவரைக் காயப்படுத்திவிட்டது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை எப்படி ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு இப்போது அரசுப் பணிக்காக அல்லும் பகலும் அயராது படித்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். என் மகனின் தலைமுடி நடுவில் உயர்ந்து சுற்றிலும் சுருண்டு நவீன வடிவில் இருந்ததைப் பார்த்தார். “நாம இப்படி வச்சிருந்தா ஐயா என்ன ஓட்டு ஓட்டுவாரு” என்று தன் நண்பரிடம் சொன்னார். சரிதான் என்றேன். கிளம்பும்போது “எந்தச் சரவணன்னு கேப்பீங்களாய்யா” என்றார். என் செல்பேசிப் பதிவில் பெயரை எடுத்துக் காட்டினேன். சரவணனுக்குப் பக்கத்தில் அந்த நடிகரின் பெயரைச் சேர்த்துப் பதிவு செய்திருந்தேன். திருப்தியான மனத்தோடு போனார். காயத்தை ஆற்றிவிட்ட திருப்தி எனக்கும்.
பெருமாள்முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com