Published : 26 Sep 2016 10:28 AM
Last Updated : 26 Sep 2016 10:28 AM

ஃபோர்டு நிறுவன ஆராய்ச்சி வெற்றி: கார் ஏசி தண்ணீர் குடிநீராகிறது

இப்போது வரும் கார்கள் அனைத்துமே ஏசி கார்கள்தான். மாறிவரும் தட்ப வெப்ப நிலையில் பெரும்பாலான நேரத்தில் தேவைப்படுவது ஏசி கார் பயணம்தான். ஆனால் கார்களினுள் ஏசி பரவும். இதனால் வெளியாகும் குளிர் தன்மை தண்ணீராக மாறி அது அதற்கான குழாய் வழியாக தரையில் வீணாகிவிடும்.

இப்போது இவ்விதம் வீணாகும் தண்ணீரே குடிநீராக மாற்றி காரில் பயணிப்பவர்களே பயன்படுத்தும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் பவர்டிரைன் கண்ட்ரோல் மையத்தின் பொறியாளர் டோ மார்டின், கார் ஏசி-யிலிருந்து வீணாகும் தண்ணீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். கண்டென்சரில் சேரும் தண்ணீரை குடிநீராக மாற்றுவதே இவர் கண்டுபிடித்த நுட்பமாகும்.

இந்த நுட்பத்தைக் கண்டுபிடிக்க இவருக்கு மூல காரணமாக இருந்ததே பெரு-வில் பின்பற்றப்படும் தொழில்நுட்பம்தான். அங்கு காற்றிலுள்ள ஈரப்பதத்தை குடிநீராக மாற்றும் நுட்பம் பின்பற்றப்படுகிறது. இதையே கார் ஏசி-க்களில் பயன்படுத்தக் கூடாது என்ற இவரது கேள்வி மற்றும் அதற்கான ஆராய்ச்சியின் விளைவாக உருவானதே இந்த புதிய கண்டுபிடிப்பாகும்.

தனது சக நண்பரும் நிறுவன பணியாளருமான ஜான் ரோலிங்கருடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, காற்றின் ஈரப்பதத்தை குடிநீராக மாற்றும் கருவியைக் கண்டுபிடித்தார். இதன்படி கார் ஏசி-யின் கன்டென்சரில் சேர்ந்து வீணாகும் தண்ணீரை குழாய் மூலம் எடுத்து அதை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தும் கருவியை வடிவமைத்துள்ளார். இது காரின் டேஷ் போர்டில் உள்ள கன்சோலில் குடிநீராக வந்து விழும்படி செய்துள்ளார். சோதனையின் போது ஒரு மணி நேரம் கார் ஏசி இயங்கினால் சுமார் 2 லிட்டர் தண்ணீர் கிடைத்தது.

பாலைவனங்களில் பயணம் செய்வோருக்கு இந்த நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பயணத்தின்போது அதிக தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அத்துடன் பயணத்தின்போது தேவையான தண்ணீரும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இந்த நுட்பத்தை எப்போது ஃபோர்டு நிறுவனம் அனைத்துக் கார்களிலும் பயன்படுத்தப் போகிறது என்ற விவரம் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் பாலைவன பயனாளிகளுக்கு மட்டுமல்ல, நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த நுட்பத்தை பிற நிறுவனங்களும் தங்கள் கார்களில் பயன்படுத்தி அளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x