Last Updated : 05 Mar, 2017 11:23 AM

 

Published : 05 Mar 2017 11:23 AM
Last Updated : 05 Mar 2017 11:23 AM

கமலா கல்பனா கனிஷ்கா: குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்திய சிறுமி!

கமலா பாட்டி, கல்பனா ஆன்ட்டி, கனிஷ்கா மூன்று பேரும் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

“போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பதை நம்ம மக்கள் இப்போதான் உணர்ந்திருக்காங்க. அந்த விதத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு நன்றி சொல்லணும். புதுக்கோட்டை நெடுவாசல் மக்கள் விவசாயமும் நீர்வளமும் நிறைஞ்ச எங்க ஊரை, ஹைட்ரோகார்பன் திட்டம் பாலைவனமாக்கிடும்னு எதிர்ப்புக் குரல் கொடுக்குறாங்க. அரசாங்கம் நல்லதுதான் செய்யும்னு இனிமேல் யாரும் கண்மூடித்தனமா நம்பத் தயாராயில்லை. அரசாங்கம் தவறான முடிவெடுத்தால், அதைத் தடுக்கும் பொறுப்பும் மக்களுக்கு இருக்கு. அதை மக்கள் நல்லாவே புரிஞ்சுக்கிட்டாங்க” என்றார் கமலா பாட்டி.

“ஆமாம் பாட்டி. இனிமேல் அரசாங்கம் ஏதாவது திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஒருதடவைக்கு நாலு தடவை யோசிக்கணும்” என்று சொன்ன கனிஷ்கா, அடுத்துப் பேசியதும் முக்கியமான விஷயம்தான்.

“வரலட்சுமி சரத்குமார் பாலியல் வன்முறைகளைக் கையாள்வதற்கு ஒரு திட்டத்தை முன்வச்சிருக்காங்க. திரைத்துறையில் பெண்களுக்குப் பிரத்யேக சங்கத்தை உருவாக்க வேண்டும். அதில் திரைத்துறையினர் யார் வேண்டுமானாலும் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதி பெறலாம். அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி, கல்வியாளர் யாராவது இருக்க வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் அப்படின்னு நிறைய விஷயங்களை வரலட்சுமி சொல்லியிருக்காங்க” என்றாள் கனிஷ்கா.

“புத்திசாலித்தனமா பேசியிருக்கார். ஒவ்வொரு தாலுகாவிலும் மகளிர் நீதிமன்றம் ஆரம்பித்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பாலியல் வன்முறை வழக்குகளில் வழக்கு பதியப்பட்ட ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு

வழங்கப்பட வேண்டும். அப்போதான் பாதிக்கப்பட்ட பெண் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்லமுடியும் என்ற ரெண்டு கோரிக்கையும் வரவேற்கத்தக்கது. இதுக்காக வரலட்சுமி 8-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்காங்க” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“கேரளாவின் மலப்புரம் மாவட்டத்துல ஒரு பள்ளி மாணவி 1098 சைல்ட் ஹெல்ப் லைனில் சொன்ன புகாரால், பத்து குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டிருக்கு. அந்தப் பொண்ணுக்கும் சேர்த்து திருமண ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அவளுக்கோ படிக்கணும்னு ஆசை. 1098-க்கு போன் பண்ணி விவரத்தைச் சொல்லியிருக்கா. அதிகாரிகள் ஊரில் விசாரிச்சதில் ஏப்ரல், மே மாசத்துல மட்டும் பத்து குழந்தைத் திருமணங்கள் ஏற்பாடாகியிருந்த விஷயம் தெரியவந்திருக்கு. குழந்தைகளின் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்திட்டிருக்காங்க. ஒரு சிறுமியின் போராட்டக் குரல் பத்து சிறுமிகளின் வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்கு!” என்றாள் கனிஷ்கா.

“வெரிகுட். சைல்ட் ஹெல்ப்லைன் மாதிரி மகளிருக்கான ஹெல்ப்லைன் (1091) இருக்கு. பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த நம்பருக்கு போன் பண்ணி தங்களோட பிரச்சினைகளைச் சொல்லலாம். சமூக நீதிக்கான போராட்டத்தை ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியிருக்காங்க திவ்ய பாரதி. சமூகமே முகம் சுளிக்கும் ஒரு தொழிலில் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவர்கள் நல்வாழ்வுக்கு யார் வழி செய்வாங்கன்னு சாட்டையச் சுழற்றியிருக்கு இந்தப் படம். நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றிருக்கு” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“பெண்ணுரிமையைப் பறிக்கும் வகையில் ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்ற திரைப்படத்துக்குத் தடை விதித்துள்ளது தணிக்கை வாரியம். அலங்கிரிதா ஸ்ரீ வஸ்தவா என்ற பெண் இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருக்காங்க. இதில் காட்டப்படும் பெண்கள் யதார்த்த வாழ்க்கையைத் தாண்டிய மாயையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர், என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி சான்றிதழ் அளிக்க முடியாதுன்னு தணிக்கை வாரியம் சொல்லியிருக்கு” என்றாள் கனிஷ்கா.

“ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, அவரோட குடியுரிமை கொள்கைகளால் இனவெறித் தாக்குதல் அதிகரிச்சிட்டிருக்கு. அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்துல இந்தியப் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டதும் அதோட எதிரொலிதான். ‘என் நாட்டைவிட்டு வெளியே போ’ன்னு சொல்லிக்கிட்டே அவரச் சுட்டுக் கொன்றிருக்கார் அந்த நபர். ‘அமெரிக்கா குடியேறியவர்களால் ஆன நாடு. அப்படியிருக்க இங்கே வராதீர்கள் என்று சொல்ல அமெரிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கு?’ என்று ஆவேசத்தோடு கேள்வி எழுப்பியிருக்காங்க ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் அம்மா பர்வதவர்த்தினி”.

“அந்த எதிர்ப்பைச் சரிகட்டதான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் உரையில் ட்ரம்ப் இனவெறித் தாக்குதலைக் கண்டிப்பதாகச் சொல்லியிருக்கார்” என்று கல்பனா ஆன்ட்டி சொல்ல, மூவரும் கிளம்பினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x