தொல்லையில்லா தொலைநிலைக் கல்வி

தொல்லையில்லா தொலைநிலைக் கல்வி
Updated on
3 min read

பல்வேறு காரணங்களுக்காக முழு நேரக் கல்லூரிக் கல்விக்கு மாற்றாக, தொலைநிலைக் கல்வியை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். குடும்பச் சூழல், உடல் நிலை, பொருளாதாரக் காரணங்கள், பணியிலிருந்தவாறே மேற்கல்வி, பதவி உயர்வுக்காகக் கூடுதல் படிப்பு என அந்தக் காரணங்கள் பலவாக நீளும். நேரடி கல்லூரிக் கல்வியிலிருந்து தொலைநிலைக் கல்வி எந்த வகையில் வேறுபட்டது, தொலைநிலைக் கல்விக்கான சிறந்த நிலையங்களை எப்படிக் கண்டறிவது, தனிப்பட்ட வகையில் தன்னுடைய மேற்கல்விக் கனவை அடைவதற்குத் தொலைநிலைக் கல்வி உதவுமா? என மாணவர் மத்தியில் ஐயங்கள் ஏராளம் உண்டு.

தொலைநிலைக் கல்வியை வழங்குவதற்கு எனத் தேசிய மற்றும் மாநிலத் திறந்தநிலைப் பல்கலைக் கழகங்கள், பிற பல்கலைக்கழகங்கள், தொலைநிலைக் கல்வியை வழங்கு வதற்கு என்றே செயல்படும் கல்வி நிறுவனங்கள் எனப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. நாட்டில் பள்ளிக் கல்விக்குப் பின்னர் உயர் கல்வியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் தொலைநிலைக் கல்விக்கு அரசும் பல்வேறு வகைகளில் ஆதரவு வழங்கி வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 175 பல்கலைக்கழகங்கள் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பல்வகைப் படிப்புகளை வழங்குகின்றன.

யாருக்குத் தொலைநிலைக் கல்வி?

வழக்கமான வகுப்பறைச் சூழல், வருகைப் பதிவு, நேரடி கற்றல்-கற்பித்தல், சந்தேக நிவர்த்திக்கான வாய்ப்புகள் போன்றவை தொலைநிலைக் கல்வியில் குறைவு. மற்றபடி பாடத்திட்டங்கள், பட்டம், மதிப்பெண் தகுதி ஆகியவற்றில் நேரடி கல்லூரிக்கும் யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற தொலைநிலைக் கல்விக்கும் இடையே வேறுபாடில்லை. தொலைநிலையில் தங்கள் பட்டப் படிப்பை முடித்து, குடிமை தேர்வெழுதுவோர் அதிகரித்து வருகின்றனர். நேரடிக் கல்லூரி படிப்போ, தொலைநிலைக் கல்வியோ மதிப்பெண்கள் என்பவை அடிப்படை தகுதி மட்டுமே. தனித்துவத் திறமையே பணிவாய்ப்புகளை ஈட்டித்தரும்.

எது என்னுடைய படிப்பு?

தனது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள ஏதேனும் ஒரு பட்டம் மட்டும் போதும் என்பவர்கள், தொலைநிலையில் விருப்பமான ஒரு கலைப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். ஆசிரியர் உதவி அதிகம் அவசியமின்றி பாட நூல்கள், நூலக உதவியுடன், இப்படிப்புகளை முடிக்கலாம். ஒப்பீட்டளவில் கட்டணமும் குறைவு. இலக்கியம், வணிகம், வரலாறு, சமூகவியல் போன்ற படிப்புகள் இதற்கான உதாரணங்கள்.

பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அடிப்படையான பள்ளிக்கல்வித் தகுதி இல்லாதவர்கள்கூடத் தொலை நிலையில் சேர்ந்து பட்டம் பெற முடியும். அடிப்படைக் கல்வியைத் தனிப் படிப்பாக வழங்கி அதன் தேர்ச்சி அடிப்படையில் பட்டப்படிப்புக்கு அனுமதிக்கும் வசதியைக் கணிசமான தொலைநிலைக் கல்வி நிலையங்கள் வழங்குகின்றன.

சாதக பாதகங்கள்

முந்தைய தலைமுறைகளில் அஞ்சல் வழிக் கல்வியாக அடையாளம் காணப்பட்ட தொலைநிலைக் கல்வி, இன்று இணைய வழி பயன்பாட்டினால் பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஆன்லைன் கல்வி என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் படிப்புகளைக்கூட நம் வீட்டிலிருந்த படியே பெறுவது சாத்தியம். முழுநேரப் படிப்புக்குப் போதிய நேரமோ, பணமோ ஒதுக்க முடியாதவர்களுக்குத் தொலை நிலைக் கல்வி பெரும் வரப்பிரசாதம். உதாரணமாக, லட்சங்களை விழுங்கும் எம்.பி.ஏ. படிப்பை, தொலைநிலைக் கல்வியில் கணிசமான ஆயிரங்களில் செலவழித்து முடித்துவிடலாம்.

முழுநேரப் படிப்பாகக் கல்லூரியில் சேர்ந்து படிப்பவர்கள்கூடத் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள, இணையான இன்னொரு பட்டம் அல்லது பட்டயப் படிப்பிபை தொலைநிலையில் பெற முடியும். வேலைவாய்ப்பில் போட்டி மிகுந்து வரும் சூழலில் இவ்வகையிலான இரட்டைத் தகுதி ஏற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன.

அதே சமயம் தொழிற்கல்வி, செய்முறை பயிற்சி அதிகமுள்ள படிப்புகளை மேற்கொள்ளக் கணிசமான மாணவர்கள் தொலை நிலைக் கல்வியில் தடுமாறுகிறார்கள். தொலைநிலையில் வழங்கப்படும் வார இறுதி நேர்முக வகுப்புகளும் சிறப்பு பயிற்சிகளும் அவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. நேரடிக் கல்லூரிகளில் கிடைக்கும் வளாகத் தேர்வு அடிப்படையிலான பணி வாய்ப்புகள் தொலைநிலையில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. தொலைநிலையில் சட்டம் படித்தவர்கள் வழக்கறிஞர் ஆவதற்கு அகில இந்திய பார் கவுன்சில் அனுமதிப்பதில்லை.

வேலைவாய்ப்பும் வரவேற்பும்

முழு நேரக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுடன் தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்கள், வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிட முடியாது என்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. ஆனால், நடைமுறையில் முழு நேரக் கல்லூரிகளுக்கு நிகராகப் பல்வேறு தொலைநிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குகின்றன. தன்னம்பிக்கை, ஆர்வம், தொடர்பாற்றல், பணி அனுபவம், செய்முறைப் பயிற்சி ஆகியவற்றில் தொலைக்கல்வியில் பயின்ற மாணவர்கள் தற்போது ஜொலிக்கவே செய்கிறார்கள். இந்த வகையில் சான்றிதழ்களைவிட வேலை தேடி வருபவர்களின் திறமையை உரசிப் பார்த்தே தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை நியமித்து வருகின்றன.

கல்வி மையத்தில் கவனம்

பல்கலைக்கழகங்கள் எத்தனை சிறப்பான கல்வியைப் பாடத்திட்டத்தில் கொண்டிருந்தாலும் அவை, நேரடிப் பயிற்சி வகுப்புகளை வழங்கும் கல்வி மையங்கள் வாயிலாகவே முழுமை அடைகின்றன. முறையான அங்கீகாரம், கணினி- நூலக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள், தகுதியான ஆசிரியர்கள், இருப்பிடத்திலிருந்து தொலைவு போன்றவற்றை மாணவர்கள் முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியம். இந்த நேரடி வகுப்புகள் மற்றும் செய்முறை பயிற்சிகளைத் தங்கள் வசதிக்காக இடம் மாற்றி வழங்கும் கல்வி மையங்கள் இருக்கின்றன.

சேர்ந்தாற்போலச் சில தினங்கள் முன்பின் அறியாத ஊரில் தங்கியாக வேண்டிய சூழல் வரும்போது, குறிப்பாகப் பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எந்தக் காரணத்துக்காக தொலைநிலைக் கல்வியைப் பெண்கள் தேர்வு செய்தார்களோ, அதன் அடிப்படையே இந்த வகையில் ஆட்டம் கண்டுவிடும். எனவே ஆசிரியர்களோடும் முன்னாள் மாணவர்களோடும் கலந்தாலோசித்து நேரடிப் பயிற்சி வகுப்புகளை வழங்கும் கல்வி மையங்களை அடையாளம் காண்பது அவசியம்.

புதிய உத்திகள்

மெய்நிகர் வகுப்பறைகள், வீடியோ பயிற்சிகள், இணையத் தள உதவிகள் எனத் தொலைநிலைக் கல்வி முறையானது பல நவீன அடையாளங்களுடன் வளர்ந்துள்ளது. openculture.com, academicearth.org, openlearningworld.com, ocw.mit.edu, science.gov, bookboon.com உள்ளிட்ட தளங்களில் தங்களுக்குத் தேவையானவற்றை மாணவர்கள் கண்டடையலாம். தரமான ஆன்லைன் கற்றலுக்கு உதவும் வகையில் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவை தொழில்நுட்ப மேற்கல்விக்கு உதவும் வகையில் ஆன்லைனில் வகுப்புகள், பயிற்சிகளை வழங்குகின்றன.

‘வெர்சுவல் கிளாஸ் ரூம்’ வசதிகள் நேரடி வகுப்பறை அனுபவத்தை மாணவர்களுக்குத் தருவதோடு, ஆன்லைனில் மாணவர்கள் தங்களுக்குள் விவாதிக்கவும், ஐயம் போக்கிக்கொள்ளவும் உரிய வசதிகள் வந்துள்ளன. நேரடி பயிற்சி வகுப்புகளில், பிரபலப் பேராசியர்களின் வீடியோ கற்றல் பயிற்சி முறைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இதற்கெனக் கல்விச் சந்தையில் கிடைக்கும் பாடப்பொருள் ‘டிவிடி’க்களை விலை கொடுத்து வாங்கியோ, யூடியூப் போன்றவற்றில் இலவசமாகக் கிடைக்கும் வீடியோக்கள் உதவியுடனோ மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

பணியோடு படிப்பைச் சமாளிக்க

உரிய திட்டமிடல்களைப் பின்பற்றினால் ேலைசெய்யும்போதே படிப்பது என்கிற இரட்டை சவாரியைச் செய்யலாம். முதலாவதாக, விடுமுறை நாட்களைத் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். உரிய கால அட்டவணையுடன் விடுமுறை நாட்களைத் திட்டமிட்டு, நேர்முக வகுப்புகளில் கலந்துகொள்வது, அசைன்மெண்டுகள், செய்முறைப் பயிற்சிகளைத் தயாரிப்பது, தேர்வுக்குத் தயாராவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in