Published : 21 Apr 2017 10:17 AM
Last Updated : 21 Apr 2017 10:17 AM

கலைவாணர் அரங்கில் சர்வதேசப் படவிழா!

கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்துள்ளது கலைவாணர் அரங்கம். சென்னை சேப்பாக்கம், வாலஜா சாலையில் கடந்த 40 ஆண்டுகளைக் கடந்து அரசு மற்றும் பொது நிகழ்வுகளின் களமாக விளங்கிவந்த அது, பின்னர் இடிக்கப்பட்டது. தற்போது மூன்று தளங்கள், மின்சார நகரும் படிக்கட்டுகள், 1100 பேர் அமர்ந்து பார்க்கும் கலையரங்கம், 1300 பேர் அமரும் பல்நோக்கு அரங்கம், இது தவிர ஒரு மினி திரையரங்கம் எனப் பிரம்மாண்டமான புதிய கலைவாணர் அரங்கம் பயன்பட்டுக்கு வந்துவிட்டது. இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 4கே வசதி கொண்ட டிஜிட்டல் புரஜெக்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் 2,500 பார்வையாளர்கள் படம் பார்க்க முடியும்.

கடந்த பிப்ரவரி மாதம் உலக சினிமா ரசிகர்களை மகிழ்வித்த சென்னை சர்வதேசப் படவிழாவைப் புதிய கலைவாணர் அரங்கத்தை மையமாகக் கொண்டு நடத்த ‘இண்டோ சினி அப்ரிஷியேசன் பவுண்டேஷன்’ முயன்றது. முதல்வர் இறப்பு உள்ளிட்ட பல காரணங்களால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. ஆனால், தற்போது 22-வது ‘ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா’ வின் தொடக்க விழாவையும் முதல் திரையிடலையும் கலைவாணர் அரங்கில் நடத்துகிறது.

ஏப்ரல் 22-ம் தேதியான நாளை தொடங்கி மே 4-ம் தேதிவரை 9 நாட்கள் நடைபெறும் இந்தப் படவிழாவைத் தமிழக அரசின் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் இந்தியாவுக்கான போர்ச்சுகல் நாட்டின் கலாச்சாரத் தூதுவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, போலந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம், பல்கேரியா, போர்ச்சுக்கல் உள்ளிட்ட 22 ஐரோப்பிய நாடுகளிலிருந்து தலா ஒரு படம் விதம் திரையிடப்பட உள்ளன. கலைவாணர் அரங்கம் தவிர, மேக்ஸ்முல்லர் பவன், அல்லையன்ஸ் பிரான்சைஸ் ஆகிய இடங்களில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் பட விழா பற்றிய முழுமையான தகவல்களை 044-2821 2652 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x