

கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். கூடவே 2017-ஐப் பற்றிக் கவலையும் கொண்டிருக்கிறோம். எனினும், இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கும் விஷயங்களை எண்ணியும், அதைப் பற்றித் தொடர்ந்து நாம் கற்றுக்கொண்டிருக்கும் அதிசயத்தக்க விஷயங்களை எண்ணியும் ஆறுதல் அடையலாம். இந்தப் பிரபஞ்சத்தில் நமக்குப் புலனாகக் கூடியது 5 சதவீதப் பருப்பொருளே. அதைப் பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறோம், புரிந்துவைத்திருக்கிறோம். அந்தப் புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! அதற்காக, மீதமுள்ள 25% கரும்பொருள் (Dark Matter) 70% கரும்சக்தியின் (Dark Energy) புதிர்களை அறிவியலாளர்கள் அவிழ்க்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
கரும்பொளை உறுதி செய்தவர்
சாதாரணமான பருப்பொருளைப் போலவே கரும்பொருளும் ஈர்ப்பு விசை மூலம் தொடர்புகொள்கிறது. எனினும், இதை நாம் கரும்பொருள் என்று அழைப்பதற்குக் காரணம் இது ஒளியுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்வதில்லை; எந்த விதத்திலும் நமக்குப் புலப்படுவதில்லை. ஆகவே, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பெரும்பான்மையான பருப்பொருள் (அதாவது கரும்பொருள்) வழக்கமான பருப்பொருள் வடிவத்தில் இல்லை. அது அணுக்களால் ஆனதும் இல்லை, மின்கடத்தும் திறனையும் அது கொண்டிருப்பதில்லை.
1980-களில் கண்டறிந்த தரவுகள் கரும்பொருள் இருப்பதை ஓரளவுக்கு உறுதிசெய்பவையாக இருந்தன. இதனால் புதிதாக ஒரு பெரிய அறிவியல் துறையே உருவானது. 20-ம் நூற்றாண்டில் இயற்பியலில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றங்களுள் கரும்பொருள் அறிவியலும் ஒன்று. ஆகவே, உலகின் மிக உயர்ந்த பரிசு வழங்குவதற்கு உரிய துறையாகவும் ஆகிறது. எனினும் இன்றுவரை, கரும்பொருள் அறிவியலாளர் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இனி வழங்கப்படாமலும் போகலாம். ஏனெனில், கரும்பொருளின் இருப்பை உறுதிசெய்தவர்களில் அதிகம் குறிப்பிடப்படுபவரான வீரா ரூபின் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதியன்று காலமாகிவிட்டார்.
தெரியாமல் போன சாதனை
நோபல் பரிசு பெற்ற பிறகு பெரும் புகழ் அடைந்திருக்கும் இயற்பியலாளர்களெல்லாம் அதற்கு முன்னால் சிறிதும், புகழ் வெளிச்சம் இல்லாத சூழ்நிலையில் தாம் உண்டு தம் வேலை உண்டு என்றே பணிபுரிந்திருக்கிறார்கள். வீரா ரூபின் ஆற்றிய பணி மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது; என்றாலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவர் மட்டும் நோபல் பரிசு பெற்றிருந்தால் இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டிருப்பார்; வளரும் அறிவியலாளர்களுக்கு ஊக்கசக்தியாக இருந்திருப்பார்.
வீரா ரூபினுக்கு நோபல் பரிசு கொடுக்கக் கூடாது என்று வாதிட்ட சில இயற்பியலாளர்கள் முக்கியமான சில பிரச்சினைகளை முன்வைத்தார்கள்; கரும்பொருள் இருப்பதை உறுதிசெய்வதற்கு ரூபின் முன்வைத்த மறைமுகமான ஆதாரங்கள் போதுமானவையா, விண்மீன் மண்டலங்களின் சுழற்சிகள் அதிகரிப்பது குறித்துக் கொடுக்கப்பட்ட விளக்கங்களுக்கு ரூபின் மட்டும்தான் பொறுப்பா (இந்தக் கண்டறிதலில் ரூபினுக்கும் அவரது சகாக்களுக்கும் பங்குண்டு) என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.
விசித்திரமான ஏதோ ஒன்று
பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை வானியலாளர்கள் 1990-களில் கண்டறிந்தார்கள். எனினும் இந்த வேக அதிகரிப்புக்குக் காரணமான ‘கரும்சக்தி’யைத் தருவது எதுவென்று யாருக்கும் தெரியவில்லை. உயர்மின்னழுத்த அதிகடத்துத்திறன் (High-temperature superconductivity) என்ற நிகழ்வும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னுள்ள இயங்குமுறை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. எனினும் இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் அதன் கண்டுபிடிப்பாளர்களுக்கு நோபல் விருதுகளைப் பெற்றுத் தந்தது. ஆனால், ‘கரும்பொருள்’ என்ற விஷயத்துக்கான ஆதாரங்களைக் கண்டறிந்தவர்கள் கைவிடப்பட்டனர்.
ரூபினுக்கு எதிராக வைக்கப்படும் இன்னொரு வாதமும் உண்டு. கரும்பொருளைப் பற்றி ஒரு முழுமையான கருத்து உருவாவதற்குப் பல்வேறு அறிவியலாளர்களும் பங்களித்திருக்கிறார்கள் என்பதுதான் அந்த வாதம். எனினும், விசித்திரமான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களாக ரூபினின் தரவுகள்தான் வெகு காலம் இருந்தன. அதற்குக் காரணம் எதுவென்று ரூபின் அறிந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்! ஆதாரங்களை முன்வைத்தார் அல்லவா? (எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு அறிவியலாளர்களைச் சேர்த்து அவருக்குப் பரிசை வழங்கியிருக்கலாம்.)
முதன்முதலில் கரும்பொருள் விவகாரத்தின் மீது கவனத்தைச் செலுத்திய இயற்பியலாளர்களுள் ரூபினும் ஒருவர். விண்மீன் குடும்பங்களின் விளிம்பில் உள்ள பொருட்களைப் போலவே அவற்றின் மையத்தில் உள்ள பொருட்களும் சமமான வேகத்தில் சுழல்வதை ரூபின் கண்டறிந்தார். நமக்குப் புலனாகும் பருப்பொருளைவிட மிக மிக அதிக அளவிலான பருப்பொருள் விண்மீன் மண்டலத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். புலனாகாத அந்தப் பருப்பொருள்தான் ‘கரும்பொருள்’ என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
புறக்கணிக்கப்படும் பெண்கள்
நோபல் விருதைத் தவிரப் பல விருதுகளை ரூபின் பெற்றார். அறிவியலுக்கான தேசியப் பதக்கத்தை 1993-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ரூபினுக்கு வழங்கினார். பிரச்சினை மிகவும் வெளிப்படையானது. அதுதான் பால் வேற்றுமை. நோபல் பரிசால் புறக்கணிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டது.
பரிசுகளும் விருதுகளும் முக்கியமானவைதானா? ஆமாம், நிச்சயமாக. பெண் அறிவியலாளர்களுக்குப் பெருமளவில் பக்கபலமாக இருந்தவர் ரூபின். அவருக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தால் எத்தனை பேரை அவரது பெயர் சென்றடைந்திருக்கும்!
ரூபினின் சாதனைகளை அங்கீகரித்துப் பேசுவதற்குப் பதிலாக அவருக்கு நோபல் வழங்கப்படாததை முன்னிட்டு இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்திருக்கும் சூழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பணியாளர்களாகவும் விருதாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் பெண்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்ப்பவர்களுக்கு வழக்கமாக ஒரு பெருமிதம் இருக்கும், தாங்கள் ஏதோ சேவை செய்வதுபோல. அந்தப் பெண்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் அது பெரிதில்லை. எனினும், பால் வேறுபாடு காட்டாத ஒரே ஒரு பட்டியல் உண்டு. எந்தப் பட்டியலிலும் சேர்க்கப்படாத பெண்களின் பட்டியல்தான் அது. நாம் காண்பதைத் தாண்டியும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது என்பதைக் காட்டியது ரூபின் ஆற்றிய பணி என்பதை மட்டும் நாம் மறக்கவே கூடாது!
- லிஸா ராண்டால், ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர், ‘டார்க் மேட்டர் அண்டு த டைனசார்ஸ்’ என்ற நூலின் ஆசிரியர்.
இரண்டு பெண்களுக்குத்தான் விருதா?
20-ம் நூற்றாண்டின் இயற்பியல் சாதனைகளின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது ‘படித்தர மாதிரி’ (Standard Model). அதன் உருவாக்கத்தில் பங்களித்தவர்கள் எல்லோருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது, ஒரே ஒருத்தரைத் தவிர. அவர்தான் ச்சியன்-ஷியங் வூ (Chien-Shiung Wu). அவரது கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கள் கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்ட அவரது ஆண் சகாக்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது; இதன் தொடர்ச்சியாக மற்றுமொருவருக்கும் நோபல் பரிசு பின்னால் வழங்கப்பட்டது. ஆனால், ச்சியன்-ஷியங் வூக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
இயற்பியலில் நோபல் பரிசு வென்ற 204 பேரில் இரண்டு பெண்களை மட்டுமே காண முடிகிறது. முதலாவது நபர், மிகவும் பிரபலமானவரான மேரி க்யூரி. அவர் பெயரே, அவரது கணவர் பியர் வலியுறுத்திய பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டு, இருவரின் கூட்டுப் பங்களிப்புக்குமாக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அடுத்தவர் மரியா கோர்ட் மேயர் பரிசுகளிலும் விருதுகளிலும் இறுதி முடிவு என்று ஒரு விஷயம் வழக்கமாக உண்டு. அதில் பெரும்பாலும் எப்போதுமே சர்ச்சை ஏற்படுவதுண்டுதான். ஆனால், பெண்களுக்கு இவ்வளவு குறைவாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பதன் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பெரிய விஞ்ஞானி ஒருத்தர்தான் வர வேண்டுமா என்ன?
நன்றி: நியூயார்க் டைம்ஸ்
தமிழில்: ஆசை