Published : 06 Jun 2016 03:02 PM
Last Updated : 06 Jun 2016 03:02 PM

இலங்கையில் கார் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

டெல்லியில் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்த 2,000 சிசி திறனுக்கு மேலான கார்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் அண்டை நாடான இலங்கை, புதிய கார்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங் கேயும் எஸ்யூவி ரக கார்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

1,300 சிசி திறனுக்குக் கீழான கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்துள்ள அரசு, 1,500 சிசிக்கு அதிகமான கார்களுக்கான வரியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.

சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் வரை கார்களுக்கு கூடுதலாக இறக்குமதி வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகே குறிப்பிட்டுள்ளார்.

காரில் பயணம் மேற்கொண்டால் வாகன நெரிசல் காரணமாக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சாலை வசதிகள் மேம்படுத்தும் வரை புதிய கார்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இறக்குமதி வரி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங் களின் எண்ணிக்கை 45,000 ஆகும். 2015-ம் ஆண்டில் இது இரு மடங்காக உயர்ந்து 90,100-ஐத் தொட்டுள்ளது. இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கார்களின் வரத்து குறையும் என்று அரசு நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய வாகனங்களுக்கு (எஸ்யூவி) வரியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால் அத்தகைய கார்கள் இறக்குமதி செய்வது குறையும். அதேசமயம் சிறிய ரகக் கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என இலங்கை அரசு நம்புகிறது.

இலங்கை அரசின் கட்டுப்பாடு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சற்று பாதகமாக அமைந்துள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எஸ்யூவி கார்களை விற்க விதிக்கப்பட்ட தடையால் மந்த நிலையை எட்டியுள்ள இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இலங்கை அரசின் கட்டுப்பாடு மேலும் பாதகமாக அமைந்துள்ளது. அதேசமயம் 1300 சிசி-க்கு குறைவான சிறிய ரகக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது சாதகமாகும்.

ஆட்டோக்களுக்கான இறக்குமதி வரியையும் இலங்கை அரசு உயர்த்தி யுள்ளதால் ஆட்டோ ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x