

ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் இருந்து 906 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.
யு.பி.எஸ்.சி. (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையிலான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதலாம். மெயின் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படும். அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த ஆண்டு 1000 பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 46 நகரங்களில் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். இதில், 13 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் 946 தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மெயின் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. சென்னையில் ராணிமேரிக் கல்லூரி மற்றும் காயிதேமில்லத் கல்லூரி ஆகிய 2 மையங்களில் 906 பேர் தேர்வு எழுதினர். 40 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்தத் தேர்வு, வரும் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை காலை கட்டுரை எழுதுதல், மாலையில் மொழியியல் தேர்வு நடந்தது. கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை பொது அறிவு-1, பொது அறிவு-2 என 2 தேர்வுகள் நடக்கிறது. டெல்லியில் சட்டசபை தேர்தல் நடப்பதால் டிசம்பர் 4 மற்றும் 6-ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் திருட்டு ராணிமேரி கல்லூரி மையத்தில் தேர்வு எழுதிய சிலரின் செல்போன், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மாணவி பூர்ணிமா (23) கூறும்போது, ‘‘தேர்வு முடிந்து வெளியே வந்து பார்த்தபோது என் ஹேண்ட் பேக்கில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ1,500 காணாமல் போய்விட்டது. எங்களின் பொருட்களுக்கு தேர்வு மையத்தில் உள்ளவர்கள்தானே பாதுகாப்பு தர வேண்டும். இனியாவது மையங்களில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.