சேதி தெரியுமா? - 200 கோடிப் பேர் அசுத்தமான தண்ணீர் குடிக்கிறார்கள்

சேதி தெரியுமா? - 200 கோடிப் பேர் அசுத்தமான தண்ணீர் குடிக்கிறார்கள்
Updated on
2 min read

சமீபத்தில் (13.04.17) வெளியான உலக சுகாதார மையத்தின் (World Health Organisation) ஒரு அறிக்கை, உலகில் 200கோடிப் பேர் அசுத்தமான தண்ணீரைத்தான் குடிநீராக அருந்துகிறார்கள் என்று கூறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவில் அசுத்தமான நீரைக் குடிநீராக அருந்துபவர்கள் 63 கோடிப் பேர். அசுத்தமான குடிநீரைப் பருகுவதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர் என்றும் மேலும் 80 சதவீத நாடுகள் குடிநீர், கழிவுநீர் ஆகிய தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என்றும் மேலும் அந்த அறிக்கையின் முடிவு சொல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரத்தில் அமைந்துள்ளது.

வெடி குண்டுகளின் தாய்

அணு ஆயுதம் இல்லாத உலகின் மிகப் பெரிய வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் வீசியுள்ளது. இந்த வெடி குண்டு எம்.சி. 130 ஆயுதம் தாங்கி விமானத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் குகைகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிபியு-43 (GBU-43) என்று பெயர்கொண்ட இந்த வெடிகுண்டு ‘வெடிகுண்டுகளின் தாய்’ (mother of all bombs) என்று அறியப்படுகிறது. இதன் எடை 9800 கிலோ. 300 அடி நீளம்கொண்டது. இந்த வெடி குண்டு முதன் முதலாக 2003-ம் ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் 2017-ல் இப்போதுதான் இதை பயன்படுத்தப்பட்டுள்ளது. பதுங்குக் குழிகளைத் தாக்குவதில் இந்த வெடி குண்டு சிறப்பாகச் செயல்படக் கூடியது எனச் சொல்லப்படுகிறது.

வாடகைக் கார்களுக்குப் புதிய பரிந்துரைகள்

பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு வாடகை கார்களுக்கான சில புதிய பரிந்துரைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. ஜி.பி.எஸ். ஒலி எழுப்பும் பட்டன் இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ஓட்டுநர் கட்டுப்பாட்டில் அறைக் கதவு (Centre locking system) இருக்கக் கூடாது. ஓட்டுநர்களின் ஒளிப்படம், வாகனத்தின் பதிவு எண்ணுடன் வாகனத்துக்குள் தெரியும் வண்ணம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குற்றமிழைக்கும் ஓட்டுநர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பயணி அனுமதியின்றி இருக்கையை ஒட்டுநரே பகிர்ந்துகொள்ளக் கூடாது. இது போன்ற பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க எழுத்தாளருக்கு புலிட்சர் விருது

2017-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை அமெரிக்க எழுத்தாளரான கால்சன் ஒயிட்ஹெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் புலிட்சர் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த நாடகம் உள்ளிட்ட 21 துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ‘The Underground Railroad’ என்னும் புதினத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் கால்சன் ஒயிட்ஹெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1917-ம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் முறையே 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் நிர்வகித்து வருகிறது.

சிந்து தோல்வி

2017-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலக அளவில் பிரபலமான முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் பங்கேற்று ஆடிவருகின்றனர். சமீபத்தில் இந்திய ஓப்பன் பேட்மிட்டன் போட்டியில் கோப்பையை வென்று உலக பேட்மிட்டன் வீராங்கனை பட்டியலில் இரண்டாம் பிடித்த இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து இந்தத் தொடரில் தொடக்கத்திலிருந்து சிறப்பாக ஆடி வந்தார். காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்த்துப் போட்டியிட்டார். முதல் செட்டில் 11-21 என ஆட்டத்தை இழந்த சிந்து, இரண்டாவது செட்டையும் 15-21 என்ற கணக்கில் இழந்தார். கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிந்து, காலிறுதிப் போட்டியிலேயே ஆட்டமிழந்து சிங்கப்பூர் தொடரிலிருந்தே வெளியேறினார்.

ஐ.நா. தூதரானார் மலாலா

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான இளம் துாதராக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூஸப்சாய் பொறுப்பேற்றார். ஐ.நா.வின் அமைதிக்கான இளம் தூதராக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அறிவித்தார். மலாலா 12 ஜூலை, 1997-ம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்தவர். 2012-ம் ஆண்டு பள்ளிக்குச் செல்லும்போது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உலகக் கவனம் பெற்றார். 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார். நோபல் விருதை தனது 17 வயதில் பெற்றார். மிகச் சிறிய வயதில் விருதைப் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in