Last Updated : 27 Jan, 2017 10:05 AM

 

Published : 27 Jan 2017 10:05 AM
Last Updated : 27 Jan 2017 10:05 AM

திரை நடனம்: காலச் சுழற்சியில் நடனமிடும் கலை

கலைகளுக்குப் பேர் பெற்ற தஞ்சைப் பகுதியிலிருந்து வந்த வழுவூர் ராமையா பிள்ளை, முத்துசாமி பிள்ளை, கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, முத்துக்குமாருப் பிள்ளை, காஞ்சிபுரம் எல்லப்பப் பிள்ளை என்று பலர் 1960-கள் வரையிலும்கூட நல்ல செவ்வியல் நடனங்களைத் திரைப்படத்தில் அமைத்திருக்கிறார்கள்.

இசை வேளாளர் குலத்திலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கனவுக்குள்ளும் புகுந்தவர் டி.ஆர். ராஜகுமாரி. 1940-களில் பாகவதர், சின்னப்பா பாடல்கள் பிரமாதமாக அமைந்த அளவுக்கு நாட்டியங்கள் சிறப்பாக அமையவில்லை. 1947-ல் வெளிவந்த ‘நாம் இருவர்’ படத்தில் குமாரி கமலாவின் வருகை மிக முக்கியமானது. பத்துப் பன்னிரெண்டு வயதுப் பெண்ணாக இருந்தாலும் நளினம் கொஞ்சும் கச்சிதமான நடனம் ஆடினார்.

திருவாங்கூர் சகோதரிகள் வருகை

1950-களில் லலிதா, பத்மினி, ராகினி என்ற திருவாங்கூர் சகோதரிகளும், வையஜயந்தி மாலாவும் வந்தபோது, கதாநாயகிகளின் விறுவிறுப்பான நடனக் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. 1959-ல் வெளிவந்த ‘தங்கப் பதுமை’படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி ஆடற்கணிகையாக வந்து ‘முகத்தில் முகம் பார்க்கலாம்….’, ‘வருகிறாள் உன்னைத் தேடி...’ ஆகிய பாடல்களுக்கான நடனங்களில் சில அபிநயங்கள் பிடிப்பார். ‘அம்பிகாபதி’யில் பானுமதி, ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே...’ என்று பாட, ராஜசுலோசனா ஆடுவார். அப்படி நாயகியரின் படங்களில், தனியாக நடன மங்கையரைத் தேடி, நல்ல நடனங்களைச் சேர்க்க வேண்டிவந்தது.

‘மலைக்கள்ளன்’ படத்தில் அறிமுகமான சாயி-சுப்புலட்சுமி இணை அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான நாட்டியச் சகோதரிகள். முத்துசாமிப் பிள்ளையின் மாணவிகளான இவர்களது நடனத்துக்காகவே படம் பார்க்க ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள். ‘மலைக்கள்ளன்’100 நாட்கள் ஓடியது.

‘சிவகங்கைச் சீமை’ முழுக்கவும் இசைக்கும் பாடலுக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் தந்த, கண்ணதாசனின் கனவுப் படம். இதில் குமாரி கமலா கதாநாயகி. நடனத்துக்காகவே அவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் கண்ணதாசன். படத்தின் உச்சகட்டக் காட்சியில் 10 நிமிடங்கள் வரும் குமாரி கமலாவின் ஊழித் தாண்டவம், பரத நாட்டியத்துக்குத் தமிழ் சினிமாவின் கொடைகளில் ஒன்று.

குமாரி கமலா, பத்மினி, வைஜயந்தி மாலா என்று 1950-60களில், நாட்டிய நடிகைகளே கொடிகட்டிப் பறந்தார்கள். கமலாவுக்காகவே நடனத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படம் ‘கொஞ்சும் சலங்கை’. காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வரமும், கமலாவின் நாட்டியமும் மையமாக அமைந்து, ஏராளப் பொருட்செலவில் தமிழின் முதல் டெக்னிக் கலர் படமாக வந்தது ‘கொஞ்சும் சலங்கை’.

நடன ஆதிக்கப் படங்கள்

ஸ்ரீதரின் ‘மீண்ட சொர்க்கம்’ தமிழின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்று என்பேன். இந்தியில் சாந்தாராம் எடுத்த ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’, ‘நவ்ரங்’ போன்ற நாட்டியத்தை மையமாகக் கொண்ட படக் கதைகள் போல் தமிழில் ஒரு காதல் காவியம். நாட்டியத்துக் காகவேயான வெற்றிப்படம். இதையடுத்து தீபாவளிக்கு வந்தது ‘மன்னாதி மன்னன்’. ஆட்டனத்தி ஆதி மந்தி வரலாற்றுக் கதை. பத்மினியின் ‘நான் கலையோடு பிறந்தது உண்மை…’ பாடலுக்கான நடனமும், ‘ஆடாத மனமும் உண்டோ…’ பாடலுக்கு ஆடும் நடனமும் கிளாஸ், மாஸ் இருவகை ரசிகரையும் மெய்மறக்க வைப்பவை.

‘காத்தவராயன்’ படத்தில் கோபி கிருஷ்ணாவும் குமாரி கமலாவும் ஆடுவதுதான் பிரமாதமான பார்வதி சிவ தாண்டவம். நடன அமைப்பு வழுவூர் ராமையா பிள்ளை. அதே படத்தில் சந்திரபாபுவும் எம்.என் ராஜமும் பொம்மலாட்ட பொம்மைகள்போல ஆடும் நடனம் ஒன்றும் சற்று வித்தியாசமானது. பொம்மலாட்ட நடனத்தை ‘மீண்டும் வாழ்வேன்’ படத்தில் நாகே‌ஷும் பாரதியும், ‘காக்கும் கரங்கள்’ படத்தில், எல்.விஜயலட்சுமியும் நாகேஷும் ஆடுவார்கள். நாகேஷ் ஒரு அற்புதமான நடனக்காரர். ‘காரைக்கால் அம்மையார்’ படத்தில், சிவகுமார்-  வித்யா சிவ - பார்வதி நடனம் ஹிட். ஸ்ரீவித்யா இன்னொரு நாட்டியப் பேரொளி.

அபிநயங்களில் திளைத்த பத்மினி

செவ்வியல் நடனத்தைச் சிறப்பித்த, அதை வெகுஜன ரசிகர்களிடம் கொண்டுசேர்த்த முதன்மையான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. இவை இன்றைக்கும் புதுப்புது தலைமுறையினரும் பார்த்து அனுபவிக்கக்கூடிய படங்களாக அமைந்திருப்பதே அவற்றின் சிறப்பு. பத்மினி, ‘விக்ரமாதித்தன்’ படத்தில் ராகினியுடன் ஆடும் போட்டி நடனத்திலும், எம்.ஜி.ஆரின், ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் சன்மானம் போய்விடும் தப்பாது...’ என்ற பாடலுக்கு ஆடும் நடனத்திலும் ரசிகர்களின் கை தட்டலில் சன்மானம் பெற்றுவிடுவார். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் வைஜயந்தி மாலா - பத்மினி போட்டி நடனம், இந்தியா -பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்போல.

வைஜயந்தி, பத்மினி போன்ற நாட்டிய நாயகிகள் காலத்தில் ராஜ சுலோசனா, அஞ்சலிதேவி ஆகியோரும் நடனம் ஆடக்கூடியவர்கள். ஆனால், முன் சொன்னவர்களுக்கு இணையானவராக ஈ.வி.சரோஜா இருந்தார். அவர் செவ்வியல் நடனத்தோடு பல விதமான நடனங்களையும் ஆடுவதில் வல்லவர். ‘குலேபகாவலி’, ‘புதுமைப்பித்தன்’, ‘காத்தவராயன்’ போன்ற படங்களில் ஈ.வி. சரோஜாவின் ஆட்டம் ரசிகர்களை விசிலடிக்கவைக்கும். அவரது குரு வழுவூர் ராமையா பிள்ளை.

இந்த நட்டுவனார்களையெல்லாம் தமிழ் சினிமா நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பின்னால் வந்த பி.எஸ். கோபாலகிருஷ்ணன், ஏ.கே.சோப்ரா, பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ், தங்கப்பன் போன்றோர் புதுவித நடனங்களை வெற்றிகரமாக சினிமாவில் அமைத்தார்கள். ஆனால், எப்படி மெல்லிசைக்கு ராகங்கள் இன்னும் அடிப்படையாக இருக்கின்றனவோ அதேபோல் இன்றைய நடனத்திலும் செவ்வியல் நடனங்களின் அடிப்படை இல்லாமல் அமையாது.

‘காதலன்’ படம் பிரபு தேவா இல்லாமல் எடுக்கப்பட்டிருக்க முடியாது. மாஸ்டர் ஜான் பாபு ‘நாட்டுப்புற பாட்டு’ படத்தில் சிறப்பான கரகாட்டங்களை அமைத்துத் தானும் ஆடியிருப்பார். ரேவதி (‘வைதேகி காத்திருந்தாள்’, ‘புன்னகை மன்னன்’) ரோகிணி (‘மறுபடியும்’) ஆகியோரின் நடனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தவை.

நடனத்தில் ஜொலித்த நடிகைகள்

எல்.விஜயலட்சுமி சிறந்த நாட்டியக் கலைஞர். மிக இள வயதிலேயே, ‘நீதிபதி’, ‘குறவஞ்சி’ போன்ற படங்களில் ஆடியிருக்கிறார். அவரது படு ஹிட்டான டான்ஸ், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் வரும், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...’ என்ற பங்ரா டான்ஸ். ஒரு மாதம் தனியாக பங்ரா டான்ஸ் பயிற்சி செய்த பின்பே அவருடன் இணைந்து எம்.ஜி.ஆர். ஆடினாராம்.

நாட்டியப் பள்ளி நடத்துகிற அளவுக்கு அர்ப்பணிப்பும் திறமையும் உள்ள நடிகை ஷோபனா. இவரின் ‘மணிசித்ரதாழ்’ நடனம் தமிழிலும் பிரபலமானது. ‘சந்திரமுகி’யில் ஜோதிகா திறமையாக சமாளித்திருப்பார். கலையின் ஆதி வடிவங்கள் ஒருபோதும் அழிவதே இல்லை. அவை காலச் சுழற்சியில் புதுப்புது அவதாரம் எடுக்கும்.

படங்கள் உதவி: ஞானம்
(‘தி இந்து பொங்கல் மலர்’ 2017-ல் இடம்பெற்றகட்டுரையின் ஒரு பகுதி
)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x