Last Updated : 21 May, 2017 12:08 PM

 

Published : 21 May 2017 12:08 PM
Last Updated : 21 May 2017 12:08 PM

ஒரு பிரபலம் ஒரு பார்வை - பெண் இயக்கங்களின் போதாமை

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு, நம் எதிர்வினைகள் வலுவற்று இருப்பதும் முக்கியமான காரணம். நீதி என்கிற பெயரில் தண்டனையோ, ஆண் வெறுப்போ, ஆணாதிக்கம் என்ற பரப்புரையோ இந்த வன்முறைகளைக் குறைக்கக் கொஞ்சமும் உதவப்போவதில்லை. குடும்ப அமைப்பில் சாதிய வழக்கங்களைக் கட்டாயமாக்கும் சாவிகள் பெண்களிடமும், அவை கொஞ்சமும் விதிகள் குறையாமல் பின்பற்றப்படுகின்றனவா என்கிற பூட்டுகள் ஆண்களிடமும் கொடுக்கப்பட்டதன் விளைவுதான் பெண்கள் மீதான உச்சபட்ச வன்முறை.

பெண்ணுரிமைப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் புதிய புதிய வடிவில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் கடந்த கால் நூற்றாண்டில் இதை ஒருமித்த அளவில் அணுகுவதற்கான பெண்ணிய இயக்கம் இந்தியாவில் தோன்றுவதற்கான எந்தச் சூழ்நிலையும் உருவாகவில்லை என்று ஆராய்ச்சியாளர்களும் பெண்ணிய லாளர்களும் சொல்கின்றனர். ஆங்காங்கே முழக்கங்கள் உயர்ந்தாலும், ‘நிர்பயா’ போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைப் பெற்றுத் தந்தாலும், நீதி என்பது அடைய முடியாத கனியாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், சமூகவியலாளர்களாகவும் போராளிகளாகவும் உருவாகும் பெண்களுக்கு இடையேயும்கூட சாதி ஒடுக்குமுறைகள், மத வேறுபாடுகள், வர்க்க ஏற்றத்தாழ்வுகள் போன்றவை கடுமையாகவும் முதன்மையானதாகவும் இருப்பதுதான்.

மனித உரிமையும் அவசியம்

உண்மையில், வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், வழக்கத்தில் இருக்கும் பெண்ணிய உரிமைகளையே நுகர்ந்து அறிமுகப்படுத்துவதுதான் பெண்ணியம் என இங்கு அறியப்பட்டிருக்கிறது. ஜோதிபா பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் சாதிய வேறுபாடுகள் பெண்களைப் பல படிகளில், பல வேறுபாடுகளுடன் அழுத்தத்தில் வைத்திருந்ததை அறிந்திருந்தார்கள். அதனால்தான், இத்தகைய ஆண் தலைவர்களே பெண்ணியச் சிந்தனையாளர்களாக மாறினார்கள். நம் பெண்ணியச் சிந்தனைகள் வலிமைப்படவும் காரணமாக அமைந்தார்கள். இந்தத் தலைவர்கள் இல்லையென்றால், இன்றைய பெண்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கான சமூகச் சிந்தனையே நமக்கு வாய்த்திருக்காது. அது மட்டுமில்லை, இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஆண்களின் வாழ்வு நிலை, ஆதிக்கச் சமூகத்தில் இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்நிலையைவிட மிகவும் இழிவானது.

ஆனால், எப்பொழுது எந்தச் சமூகச் சூழலில் பெண்கள் மைய சமூகப் பிரச்சனைகளுக்காக ஒருங்கிணைந்தாலும், அங்கே ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண்கள் இயக்கத்தைக் கலைத்துவிடுகிறார்கள். அதிகாரப் போட்டியும் பலப்பரீட்சையும் எழுந்து இயக்கங்கள் கலைக்கப்படுகின்றன. பெண்ணுரிமை என்கிற பெயரில் பெண்கள்கூட ஒரு குடையின் கீழ் இணைய முடியாதபடிக்கு, சிக்கலான அதிகாரப் படிகளைக் கொண்டது சாதி. உயர்ந்த சமூகப் பொறுப்பில் இருக்கும் பெண் என்றாலும், அவர் தலித்தாகவோ அல்லது சாதி அடையாளங்களில் தாழ்ந்த நிலையைக் கொண்டிருந்தாலோ, ஓர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை அல்லது வழிகாட்டும் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்ளாதபடிக்கு, ஆதிக்கச் சாதிப் பெண்கள் இயங்குவார்கள். அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணம், தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பெண்கள் பெரும்பான்மை அல்லது தலைமை வகிக்கும் இயக்கத்தில், தங்கள் சாதிப் பெண்கள் சேர மாட்டார்கள் என்பதுதான்.

பெண்களுக்குள் நிலவும் பாகுபாடு

இத்தகைய ஆதிக்கச் சாதிப் பெண்களுக்கு, அதிகாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஆண்களுடன் சேர்ந்து இயங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதே சமயம், பொதுவெளியில், ‘ஆணாதிக்கம்’ என்று பொதுப்படையாக, ஆண்களை வெறுக்கும் கருத்துகளை உதிர்ப்பதில், ஆண்களை எதிரிகளாகச் சித்திரிப்பதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. இதில் நிறுவனமயமாக்கப்பட்ட தோரணையைக்கூட ஆதிக்கச் சாதிப் பெண்கள் அணிந்துகொள்வார்கள். இத்தகைய பெண்ணியவாதிகளின் உள்நோக்கம் மிகவும் சுயநலமானது. தனது பகட்டையும் தனது அடையாளத்தையும் பொதுவெளியில் அதிகாரமான தொனியுடன் வைத்துக்கொள்வது என்பது மட்டும்தான் இவர்களது நோக்கம். ஒட்டுமொத்தப் பெண்களின் உரிமை, பிரச்சினைகள் என்று வரும்போது, மாமியார் - மருமகள் ரீதியான, சிறிய சிறிய அதிகாரப் போட்டிகளில் தங்களின் ஒருமையுணர்வை இழந்துவிடுகின்றனர்.

சொந்தச் சகோதரிகள் எவ்வளவோ வன்முறைகளை எதிர்கொண்டு, சாதிய வன்மங்களால் குழந்தைகளை இழந்த பின்னரும் சாதியத்தின் சிக்கல்களையும் அது நம் இதயத்துக்குக் கொடுக்கும் நோய்களையும் அறியாது இருக்கிறோம்.

பெண்கள் உரிமை குறித்து அரசை வலுவாக நிர்ப்பந்திக்கும், பொதுச் சமூகத்திற்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒருமித்த குரலைக் கொண்ட பெண்ணிய இயக்கம் இல்லாததன் குறையை நாம் முதலில் உணர வேண்டும். இப்படியான இயக்கம் தோன்றினால்தான், நம் நாட்டின் வடக்கு எல்லையிலிருந்து நான்கு திக்கிலும் பெண்கள் தினம் தினம் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டேயிருப்பதை நம்மால் எதிர்க்க முடியும்.

நம்மிடையே ஒருமையுணர்வு தேவைப்படுகிறது. சிறிய சிறிய வேறுபாடுகளுக்கு எல்லாம் சமூக உணர்வைப் பலிகொடுக்காத பரந்த சிந்தனை தேவைப்படுகிறது. முக்கியமாக, பெண்ணியம் என்றாலே, ‘ஆணாதிக்கம்’, ‘ஆண் வெறுப்பு’ என்பதுதான் என்று திணிக்கும் அறியாமையைக் களைய வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் பெரிய லட்சியங்களையும் பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற பொதுவாழ்வையும் நாம் வெல்ல முடியும்.

- கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: kuttirevathi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x