திருக்குறளில் மனித வளம்: கண் போன்ற துறை!

திருக்குறளில் மனித வளம்: கண் போன்ற துறை!
Updated on
2 min read

ஒரு நிறுவனத்துக்கு வடிவமும் உருவமும் அளிப்பது கட்டிடமாக இருந்தாலும் அதற்கு ‘பொருளும்’ பெருமையும் கிடைப்பது தொழிலாளர்களால்தான். மன நிறைவும், திறனும் கொண்ட தொழிலாளர்களே ஒரு நிறுவனத்தின் உண்மையான அடித்தளம். அந்த அடித்தளத்தைத் தாங்கும் அடித்தளம் இந்த மனித வளத்துறை. மனித வளத் துறை பற்றி முதன்முதலில் பாடியவர் திருவள்ளுவர்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

என்று கூறும் வள்ளுவர் அமைச்சர்கள், குடிமக்கள் உள்ளிட்டோர் ஓர் அரசனின் முக்கிய அங்கங்கள் என்கிறார்.

இங்கே ‘குடி’ களை நிறுவனத்தின் தொழிலாளர்கள் என்றும், ‘அரச’ரை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்றும், அமைச்சு என்பதை நிறுவனத்தில் இயங்கும் துறைகளில் ஒன்று என்றும் பார்க்கலாம். நம் வசதிக்காக அமைச்சு என்பதை மனித வளத் துறை என்று கற்பனை செய்து கொள்வோம்.

இந்தத் துறை ஒரு நிறுவனத்தின் கண் போன்றது. தொழிலாளர்களைக் காண்பதற்கு மட்டுமல்ல. அவர்கள் மீது கண்காணிப்பு, கண்ணோட்டம், கண்டிப்பு, கருணை ஆகியவற்றைக் காட்டவும் இந்தக் கண் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கண்ணில் தொழிலாளி தன்னையே காண வேண்டும்.

முதன்மை பணி

ஓர் இலக்கு நோக்கி நிறுவனம் பயணிக்கிறது. அதற்கு அந்த நிறுவனத்துக்குத் தொழிலாளிகள் தேவை. எனவே, தகுந்த தொழிலாளர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அடையாளம் கண்டு பணியமர்த்துவதே மனித வளத் துறையின் முதன்மையான பணி. இக்கருத்தை ‘அமைச்சு’ என்னும் அதிகாரத்தின் முதல் குறளிலேயே சொல்கிறார் வள்ளுவர்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு

இதில் அருவினை என்னும் சொல் முக்கியமானது. அருவினை என்பதற்குப் பெரிய பலன்களைத் தரும் சிறிய செயல் என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். அருவினை என்பதை அருமையான வினை என்று பொருள் கொண்டால் வேறொரு பரிமாணம் கிடைக்கிறது . அருமையான என்பதற்குச் சிறப்பான என்பது மட்டுமன்றி அரிதான என்றொரு பொருளும் உண்டு. ‘அரிதான’ என்பதற்கு rare என்ற பொருளன்றிக் கடினமான என்றும் பொருளுண்டு.

குடிநீர் , உணவு, கழிவறை, மின்சாரம், இருக்கை, மேசை என அடிப்படை வசதிகளைத் தொழிலாளிகளுக்குச் செய்து கொடுக்க வேண்டியது மனித வளத் துறையின் கடமை. இவை சிறிய செயல்களாக இருந்தாலும் கடினமான செயல்கள் அல்லவா?

தொழிலாளிகளைக் காத்தல்

மனித வளத் துறை சார்ந்த சட்டங்களைக் கசடறக் கற்றவரே ஒரு சிறந்த மனித வள அலுவலர். இதை ‘கற்றறிதல்’ என்கிறார் வள்ளுவர்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு

கற்றறிவது எதற்காக? தொழிலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக. இக்குறளில் கற்றறிதல் என்ற சொல்லுக்கு முன் உள்ள சொல்லைப் பாருங்கள். குடிகாத்தல். ‘குடி’காத்தல் என்றால் இங்கே தொழிலாளிகளைக் காத்தல். குடி என்றால் குடும்பம் என்றும் பொருள். தேவை ஏற்படின் ஒரு தொழிலாளியின் குடும்பத்தையும் காப்பது மனித வளத் துறைக்கு அழகு. ‘குடிகாத்த’லையும், ‘கற்றறித’லையும் அருகருகே வைத்த வள்ளுவரின் மேதைமை மெய் வியக்க வைக்கிறது.

அர்த்தமுள்ள பொருள்

பிரச்சினை ஏற்படும் போது மனித வள அலுவலரின் ஒரு சொல்லில் தீர்வு கண்டு தொழிலாளி பணிக்குத் திரும்ப வேண்டும். அந்தச் சொல் தவறாகும் பட்சத்தில் தொழிலாளி பணியிலிருந்தே விலக வாய்ப்புண்டு. ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில், வள்ளுவர்

ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

என்கிறார். ‘ஆக்கம்’ என்ற சொல்லுக்குச் செல்வம் என்றும் பொருள். சோர்வு தராத சொல் கேட்டு, ஊக்கம் பெற்று, பணியாற்றும் தொழிலாளியே நிறுவனம் ‘பொருள்’ ஈட்டக் காரணமாகிறான். மனித வளத்துறை பொருளற்ற சொல்லைப் பேசினால் நிறுவனம் ‘பொருள்’ இழக்க வாய்ப்புள்ளது என்பதை அன்றே சொல்லிவிட்டார் நம் ஆசான்.

நடுநிலை காக்கும் அறம்

இவை மட்டுமின்றி மனித வளத் துறையின் ஏனைய கடமைகளையும் சொல்கிறார்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு

‘பிரித்தல்’- நிறுவனத்துக்குக் கேடு தரும் தொழிலாளர்களை நீக்குதல். ‘பேணிக் கொளல்’ - நிறுவனத்தின் சிறந்த தொழிலாளர்களைப் பேணுதல். ‘பிரிந்தார் பொருத்தல்’ - சில காரணங்களால் பிரிந்து சென்றோரை ஆற்றுப்படுத்தி மீண்டும் பணி அமர்த்துதல். தலைமைக்கும் தொழிலாளர்களுக்கும் நடுவே ஒரு பாலமாக இருப்பதால் இரு தரப்பினரிடமும் நடுநிலை காப்பதே மனித வளத் துறையின் அறம்.

பெரும்பாலான நிறுவனங்களில் தொழிலாளிகளுக்கு மனித வளத் துறை மீது வெறுப்பு ஏற்படக் காரணம் அவர்கள் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வதே. ‘நடுவுநிலைமை’ என்ற அதிகாரத்தின் கடைசிக் குறளை வணிகர்களை நோக்கிச் சொல்லி வியப்பில் ஆழ்த்துகிறார் வள்ளுவர்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்

இதை மனித வளத் துறை மேலாளர் இப்படிப் புரிந்துகொள்ளலாம். உன்னைப் பணியமர்த்திய தலைமைக்கு நீ செய்யும் பதில் பணி என்ன?

எல்லோரிடமும் பாகுபாடு காட்டாமல் பழகுவதே. ‘பிறவும் தமபோல் செயின்’ என்றால், பிற தொழிலாளர்களையும் தன்னைப் போலவே நினை என்பதே. இப்படி மனித வளத்துறையில் செயல்படுத்துவதற்கான அருமையான வழிகாட்டுதல்கள் திருக்குறளில் காணப்படுகின்றன.

- கட்டுரையாளர் ஒரு கவிஞர் மற்றும் ஊடகவியலாளர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in