

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு "கேட்" (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.எம். போன்ற தேசிய அளவிலான நிர்வாகவியல் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் கேட் (Common Admission Test) என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இதேபோல், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு "டான்செட்" (Tamilnadu Common Entrance Test) என்ற பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம். டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகியவற்றுக்கு ஒரு தேர்வு, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பு களுக்கு மற்றொரு தேர்வு எனத் தனித்தனித் தேர்வுகளாக டான்செட் நடத்தப்படுகிறது. எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வை எழுதப் பொறியியல், தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 45 சதவீத மதிப்பெண் போதும். எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்.சி.ஏ. பட்டதாரிகளும் இதற்கு விண் ணப்பிக்கலாம். எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டம் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பில் சேர கணிதப் பாடத்துடன் கூடிய இளங்கலை பட்டம் அவசியம். மேற்சொன்ன மதிப்பெண் விதிமுறை இவற்றுக்கும் பொருந்தும்.
2014-2015ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத் தேர்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி எம்.பி.ஏ., எம்.சி.ஏ. நுழைவுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதியும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்டி., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 23ஆம் தேதியும் நடைபெற உள்ளன. குறைந்தபட்சக் கல்வித் தகுதி உடையவர்கள் மட்டுமின்றி, தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: www.annauniv.edu/tancet2014
தேர்வுக் கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.250. தேர்வுக் கட்டணத்தை "செயலாளர், டான்செட், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை" என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அவர்களுக்குத் தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும்.
ஆன்லைனில் மட்டுமின்றி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட 15 இடங்களில் செயல்படும் டான்செட் நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இங்குப் போகும்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் நகல், தேர்வுக் கட்டணத்துக்கான டி.டி. ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
சென்னை நீங்கலாக மற்ற இடங் களில் உள்ள மையங்களில் சென்று விண்ணப்பிக்கப் பிப்ரவரி 18ஆம் தேதியும், சென்னை மையத்தில் விண்ணப்பிப்பதற்கு 20ஆம் தேதியும் கடைசி நாள்.