Published : 14 Nov 2014 11:02 AM
Last Updated : 14 Nov 2014 11:02 AM

கிட்டாத கோவா கவுரவம்... தமிழ் சினிமாவுக்கு பின்னடைவா? புறக்கணிப்பா?

சர்வதேச பட விழாக்களில் நல்ல படைப்புகளை அரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆராதிப்பது, அந்தக் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டுமின்றி, அந்தப் படைப்புகளின் மொழி பேசும் ரசிகர்களும் பெருமிதம் கொள்ளும் தருணங்கள். ஆனால், அத்தகைய வாய்ப்புக்கு தமிழ் சினிமா வகை செய்கிறதா என்பது கேள்விக்குறி.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா எனப் பல்வேறு நகரங்களிலும் ஆண்டுதோறும் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் களைக்கட்டுகின்றன. எனினும், மத்திய அரசின் அங்கீகாரத்தோடு கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாதான் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பிரதிபலிப்பாக கவனிக்கப்படுகிறது.

கோவாவில் இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது, 45-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா. இதில் 'இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிட 26 படங்கள் தேர்வாகி இருக்கின்றன. மலையாளம் மற்றும் மராத்தி மொழிகளில் தலா 7 திரைப்படங்களும், பெங்காலியில் 5 திரைப்படங்களும் தேர்வாகியுள்ள நிலையில், தமிழில் இருந்து 'குற்றம் கடிதல்' என்ற ஒற்றைத் திரைப்படம்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பின்னுக்குச் செல்கிறதா தமிழ் சினிமா?

இந்திய சினிமா ஆர்வலர்களால் கவனிக்கப்படும் மிக முக்கியத் திரைப்பட விழாவில், இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு படம் மட்டும்தான் தேர்வாகி இருக்கும் நிலை சொல்லும் சேதிதான் என்ன?

தமிழ் சினிமா ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, "தற்போதைய தமிழ் சினிமாவில் யதார்த்த அம்சங்கள் நிறைந்த படங்களையே பார்க்க முடியவில்லை. அதுமட்டுமன்றி, முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது சம்பளம் எவ்வளவு, பெரிய இயக்குநர், பெரிய ஒளிப்பதிவாளர், காசை தண்ணீராக இறைக்கும் தயாரிப்பாளர் இருக்கிறரா போன்றவற்றை மட்டுமே பார்க்கிறார்கள். வர்த்தக ரீதியில் தமிழ் சினிமாவை எட்ட முடியாத பக்கத்தில் உள்ள மலையாளத்தில் 7 படங்கள் தேர்வாகி இருக்கிறது. அங்கு பெரிய நடிகர்கள்கூட கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் நடிக்கிறார்கள். ஆனால், இங்கோ தனக்கு கதையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்க்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

'திரைப்பட விழாக்கள் இரண்டாம் பட்சமே!'

சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமா நிலை குறித்து இயக்குநர் ராமிடம் கேட்டபோது, "தேர்வாகும் தகுதிக்கு தமிழ்ப் படங்கள் வரவில்லை என்று எனக்கு வருத்தம்தான். அதேவேளையில் கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்' படத்தை மட்டும்தான் தேர்வு செய்தார்கள். நிறைய தகுதியான படங்கள் கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 'ஆதலால் காதல் செய்வீர்', 'பரதேசி' என அனுப்பி இருந்தும் தேர்வு செய்யப்படவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம்... நாங்கள் திரையரங்கிற்குதான் படங்கள் எடுக்கிறோம். எங்களுடைய படங்களைப் பார்த்து ரசிகர்கள் திருப்தி அடைந்தால் போதுமானது. திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவது எல்லாம் அதற்குப் பிறகு தான்" என்றார்.

இயக்குநர் ராம், இயக்குநர் வசந்தபாலன் மற்றும் தமிழ் ஸ்டூடியோ அருண்

தமிழ் சினிமா புறக்கணிப்படுகிறதா?

அதேவேளையில், திரைப்பட விழா, திரைப்பட விருதுகள் விவகாரத்தில் நடுநிலை குறித்த கேள்வியை எழுப்பும் இயக்குநர் வசந்தபாலன், "நம்மகிட்ட வந்து மலையாளத்திலும், பெங்காலியிலும் சரி நிறைய படங்களை அனுப்புகிறார்கள். ஆனால், நமது படங்களை அனுப்புவதில்லை. தரமில்லை, கதையம்சம் இல்லை என்று கூறுவதை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.

தேர்வுக்குழுவில் உள்ள நடுவர்கள் தமிழ் சினிமாவிற்காக போராட வேண்டும். கோவா திரைப்பட விழா மட்டுமில்லை, தேசிய விருதிலும் இதேதான் நடக்கிறது. இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்காக போராடுபவர்கள் யாருமில்லை என்பதுதான் உண்மை.

மலையாளத்தில் இருந்து திரையிட தேர்வாகி இருக்கும் 7 படங்களும் தரமான படங்களா என்று பார்க்க வேண்டும். அங்கிருக்கும் ஜூரிகள் அவர்களது சினிமாவிற்காக போராடுகிறார்கள். நமது ஜூரிகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேசிய விருதுகளில்கூட பாருங்கள்... சிறந்த படம், சிறந்த இயக்குநர் போன்ற விருதுகள் அனைத்துமே வேறு மொழிக்கு கொடுத்து விடுவார்கள். காஸ்ட்டியூம்ஸ், மேக்கப் என மிஞ்சி இருக்கும் விருதுகள்தான் தமிழ் சினிமாவிற்கு கொடுக்கிறார்கள். 'வழக்கு எண் 18/9' படத்தில் மேக்கப்புக்கு தேசிய விருது கொடுக்க என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

'ஆடுகளம்' படத்திற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தபோது, சுஹாசினி மணிரத்னம் அந்தத் தேர்வு குழுவில் இருந்தார். அவர் போராடி நமக்கு விருது வாங்கி தந்தார். அதேபோல் போராடினால் கிடைக்கும். சும்மா கதையம்சம் இல்லை, தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய நிலைமைப்படி தமிழ் சினிமாவில் தான் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகிறது" என்றார் உறுதியாக.

பின்னடைவின் பின்னணிதான் என்ன?

ஒரே ஒரு தமிழ் படம் தேர்விற்கு என்ன காரணம் என்று கோவா திரைப்பட விழாவில் 'இந்தியன் பனோரமா' பிரிவுத் தேர்வு குழுவில் இடம்பெற்றவரும், தேசிய விருது பெற்றவருமான நடிகை அர்ச்சனாவைத் தொடர்புகொண்டு பேசினேன்.

"இந்த ஆண்டு தேர்விற்கு 16 தமிழ் படங்கள் வந்தன. அதில் 'குற்றம் கடிதல்' மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 15 படங்கள் என்னென்ன என்பதை வெளியிடக் கூடாது. இருப்பினும் சில நியாயமான பதில்களை மட்டும் சொல்கிறேன்.

மொத்தம் 13 பேர் குழுவில் இடம்பெற்றோம். அதில் 12 பேர் ஜூரி, ஒருவர் சேர்மன். இந்த ஜூரி குழுவில் இடம்பெற திரைப்பட விழா இயக்குநரகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னைப் பொறுத்தவரை எனக்குத் தலைவர் தெரிந்தவராக இருக்க வேண்டும், நாம் சொன்னால் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று நினைத்துச் சென்றேன். ஏ.கே.பிர் தலைவராக இருந்தார். அவர் என்னுடைய நண்பர். 'காந்தி' படத்தின் இரண்டாம் யூனிட்டிற்கு ஒளிப்பதிவு செய்தவர்.

பெங்காலியில் 32, மலையாளத்தில் 42, மராத்தியில் 26 என பல மொழிகளிலும் இருந்து 181 நுழைவுத் தகுதி மிக்க படங்கள் வந்தன. அதில் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 16. அனைத்து படங்களையும் பார்க்கும்போது, குழுவில் இருக்கும் அனைவருக்கும் மாற்றுக் கருத்து ஏற்படாமல் இருந்தால் அப்படம் தேர்வு செய்யப்படும். ஒரு சின்ன விவாதம்கூட இல்லாமல் சில படங்களைத் தேர்வு செய்தோம்.

எங்களைப் பொறுத்தவரை படத்தின் கதையம்சம் ரொம்ப முக்கியம். ஆனால் தற்போதைய தமிழ்ப் படங்களைப் பார்த்தால் தொழில்நுட்பத்தில் வலுமிக்கதாக இருந்தாலும், கதையம்சம் விஷயத்தில் ரொம்ப பலவீனமாக இருக்கிறார்கள். அது நல்ல விஷயம் கிடையாது. 'குற்றம் கடிதல்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அப்படத்தில் நல்ல ஒரு கதையம்சம் இருந்தது. நல்ல ஒரு கதைக்கருவை எடுத்து அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்.

மெயின் ஸ்ட்ரீம் படங்களை நாங்கள் தவிர்க்கிறோம் என்று சொல்வது தப்பு. அப்படிப் பார்த்தால் மலையாளத்தில் இருந்து மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தை தேர்வு செய்திருக்கிறோம். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?. பொழுதுபோக்கு அம்சம் உள்ள படங்கள் முக்கியம் தான். அதை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால், முழுக்க பொழுதுபோக்கு பின்னாடியே போய்விடக் கூடாது. 'உதிரிப் பூக்கள்', 'அழியாத கோலங்கள்' மாதிரியான படங்கள் எல்லாம் இப்போது வருவதில்லை. அந்த மாதிரியான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் மிகவும் குறைந்து வருகிறார்கள்.

அதேபோல தமிழ் சினிமாவில் இன்னொரு குறை இருக்கிறது. நிறைய படங்கள் மதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கிறார்கள். தமிழ்ப் படங்கள் என்றாலே ரவுடியிசம் தானா? என்ற கேள்வி நிலவுகிறது. காமெடியான படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. நிறைய படங்கள் ரவுடியிசத்தை சார்ந்து அனுப்பி வைக்கும்போது, அதில் நல்ல கருத்து எதில் இருக்கிறது என்பதைப் பார்த்து தேர்வு செய்ய முடியும். நல்லப் படங்கள் வந்திருந்தால் கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். ஒரே ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறை கூறுவதை நான் மறுக்கிறேன்.

அதே போல, நடுவர் குழுவில் தமிழ்ப் படங்களுக்காக பேச ஒருவர் இடம்பெற்று இருக்க வேண்டும், இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் பாலாவின் 'பரதேசி'. கதையம்சமும் சரி, தொழில்நுட்பமும் சரி எல்லாமே அருமையாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு 'பரதேசி', திரைப்படம் தேர்வு செய்யப்படவில்லை. அப்படத்திற்காக பேச ஆளில்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ் படங்கள் வந்திருந்தால், சண்டையிட்டு தேர்வு செய்ய வைத்திருப்பேன். ஆனால் 'குற்றம் கடிதல்' தவிர வரவில்லையே?" என்றார் நடிகை அர்ச்சனா.

கவுரவப் பிரச்சினையா?

நடிகை அர்ச்சனா, இயக்குநர் வசந்தபாலன் ஆகிய இருவரது வாதங்களும் சரியே என்று சுட்டிக்காட்டும் விதமாக கருத்து கூறிய சினிமா ஆர்வலர் 'தமிழ் ஸ்டூடியோ' அருண், "கோவா திரைப்பட விழாவுக்கு இம்முறை 'ஜிகர்தண்டா', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' உள்ளிட்ட படங்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தேர்வாகவில்லை. தமிழ் சினிமாவில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் படங்களைவிட, மலையாளத்தில் தேர்வாகி இருக்கும் படங்கள் கதையம்சப்படி குறைந்தவைதான்.

தமிழ் சினிமாவில் இந்தியன் பனோரமாவிற்கு அனுப்பி வைப்பதை கவுரவமாகக் கருத வேண்டும். இந்தியன் பனோரமா பிரிவைப் பொறுத்தவரை, படங்கள் என்பது மக்களுக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று பார்ப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் கலைக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி என்பது அதிகமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நாம் பார்க்கும் வாழ்க்கை முறைக்கும், நிஜ வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.

'குற்றம் கடிதல்' திரைப்படம் ஒரு பள்ளி பின்னணியில் நிகழும். மிகவும் யதார்த்தமாக படமாக்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்' படம் தேர்வானது. ஆனால், அதைவிட மிக நல்ல படங்கள் எல்லாம் இருந்தன. என்ன, மக்களுடைய வாழ்வியல் முறைக்கு அது எவ்வளவு நெருக்கம் என்பதுதான் இந்தியன் பனோரமாவில் முக்கியம்.

அதேபோல், மலையாளத்தில் இருந்து ஜுரி குழுவில் இடம் பெறுபவர்கள் சண்டையிட்டு படங்களை தேர்வு செய்வார்கள். ஆனால், தமிழ் சினிமா சார்பில் சண்டையிடுவது கிடையாது. 5 படங்களுக்கு மேல் தேர்வாகவில்லை என்றால் மலையாள சினிமாவிற்கு கவுரவக் குறைச்சலாக பார்ப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் படம் முடிந்துவிட்டதா, வெளியானதா, அடுத்தப் படம் தொடங்கி விட்டோமா இதுதான் பார்க்கிறார்கள். ஜே.எஸ்.கே. போன்ற சில நபர்கள் மட்டுமே அனைத்து திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்' என ஆண்டுக்கு ஒரு படம் தான் தேர்வாகி இருக்கின்றனு. இந்தியன் பனோராமா என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தேசிய விருதுக்கு எல்லாம் அங்கிருந்து தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். அங்கு ஒரு படம் தேர்வாகி விட்டால், அங்கிருந்து நிறைய திரைப்பட விழாக்கள் என நிறைய பொருளாதார விஷயங்களில் நாம் முன்னேற முடியும்" என்றார் அருண்.

இந்திய சினிமா வர்த்தகத்தில் 'வசூல்' என்ற அளவீட்டில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ் சினிமா, 'தரம்' என்ற மதிப்பீட்டிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்போதைய அவசரத் தேவையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x