Published : 03 Nov 2014 12:05 PM
Last Updated : 03 Nov 2014 12:05 PM

வேலை வேண்டுமா?- யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸில் காலியிடங்கள்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் 323 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப இருக்கிறது. இதில், பொது மற்றும் நிதி, சட்டம், ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் ஆகிய தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான இடங்கள் அடங்கும்.

கல்வி

நிர்வாக அதிகாரி பணிக்கான (பொது) குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பப் பிரிவு நிர்வாக அதிகாரி பணிக்குச் சம்பந்தப்பட்ட பாடத்தில் அதாவது ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங்கில் பட்டம், சட்டப் பிரிவு எனில் பிஎல், நிதிப் பிரிவு என்றால் பிகாம், எம்காம், எம்பிஏ (நிதி) சிஏ, ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

21 முதல் 30 வரை. இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.500-ஐ (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் ரூ.100 மட்டும்) ஆன்லைனி லேயே நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகச் செலுத்திவிடலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப் படுவார்கள். எழுத்துத் தேர்வில் இடம் பெற்றுள்ள முதல்நிலைத் தேர்வும் சரி, மெயின் தேர்வும் சரி ஆன்லைனிலேயே நடத்தப்படும்.

தேர்வு

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண் கொண்ட இந்தத் தேர்வுக்கு 1 மணி நேரம் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர்தான் அடுத்த கட்டமான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு (நிதி தொடர்பானது) அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 மதிப்பெண்கள். அத்துடன் விவரித்து எழுதும் (Descriptive Type) தேர்வும் உண்டு. அதில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் (Precise Writing), கடிதம் எழுதுதல் ஆகியவை இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றாலே போதும். இந்தத் தேர்விலும், முதல்நிலைத் தேர்விலும் பெறும் மதிப் பெண் ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படாது.

முதல்நிலைத் தேர்வு டிசம்பர் இறுதி வாரத்திலும், மெயின் தேர்வு 2015 ஜனவரி கடைசி வாரத்திலும் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

உரிய கல்வித் தகுதி மற்றும் வயதுத் தகுதி உடைய பட்டதாரிகள் www.uiic.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் நவம்பர் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு: www.uiic.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x