Published : 04 Nov 2014 12:31 PM
Last Updated : 04 Nov 2014 12:31 PM

‘சிகப்பு மனிதன்’ சாத்தியமா?

தூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே நேரம், சின்னச் சின்ன அதிர்ச்சிக்கெல்லாம் தூங்கி விழும் நோய் பாதித்தவர்களும் இருக்கிறார்கள். இது நிஜத்தில் இருப்பது சாத்தியமா? அல்லது இதெல்லாம் சினிமாவுக்கான பூச்சுற்றல் என்று தோன்றுகிறதா?

மனநலம் குறித்து தொடர்ந்து பல தமிழ் படங்கள் வந்தாலும், சினிமா சுவாரசியத்துக்காகக் கற்பனையாகச் சில விஷயங்கள் சேர்த்துச் சொல்லப்படுவது உண்டு. அதாவது, படத்தில் சித்திரிக்கப்படும் மனநோயின் இயல்பு குறித்துச் சில தவறான தகவல்களைக் கொடுத்துவிடுவார்கள். சில படங்களில் மட்டும் சம்பந்தப்பட்ட மனநோய் சரியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். அம்மாதிரியான படங்களுள் ஒன்றுதான் சமீபத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’.

விஷால் நடித்த இந்தப் படம், கட்டுப்படுத்த இயலாத தூக்க வியாதியை (Narcolepsy) மையமாகக் கொண்டது. நாயகன் விஷால் சிறு வயதிலேயே இந்த வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பார். சின்னச் சின்ன அதிர்ச்சியையும் தாங்க முடியாமல், இருந்த நிலையிலேயே தூங்கி விழுந்துவிடுவார். அதனால் ஒருவரின் உதவியில்லாமல் வேறு எங்கும் அவரால் போக முடியாது. இந்த நோயால் அவர் இயல்பான வாழ்க்கை நடத்த முடியாத நிலை. இந்த நோயைச் சித்திரித்ததில் மனநலம் மருத்துவம் வகுத்துள்ள இலக்கணத்தை இந்தப் படம் மீறவில்லை.

தூக்கமும் நோயும்

இது ஒரு விநோதமான மனநலப் பாதிப்பு. சட்டென ஏற்படும் சிறு அதிர்ச்சியைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல், அப்படியே தூங்கிவிடுவார்கள். சாலையில் நடக்கும்போது, சாப்பிடும்போதுகூட இவர்கள் சட்டெனத் தூங்கக்கூடும். இந்த வியாதியைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இதற்குத் தூக்கத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

பொதுவாகத் தூக்கத்தில் இரு நிலைகள் உள்ளன; கண்களின் அசைவு குறைந்த தூக்கம் (Non-rapid eye movement sleep- NREM Sleep), இன்னொன்று கண்களில் அசைவு வேகமாக உள்ள தூக்கம் (Rapid eye movement sleep-REM Sleep). முதலில் குறிப்பிடப்பட்டுள்ள NREM Sleep என்பது ஆழ்ந்த தூக்கம். REM Sleep என்பது மிதமான தூக்கம். சாதாரணமாக நம்முடைய தூக்கம் இந்த இரு நிலைகளையும் கொண்டது.

என்ன பிரச்சினை?

கட்டுப்படுத்த இயலாத தூக்க வியாதி (Narcolepsy) பீடித்தால், விழித்திருக்கும் நிலையில் இரண்டாவது தூக்க நிலையான REM Sleep நிலைக்கு, அதாவது வேகமாகக் கண்கள் அசையும் தூக்க நிலைக்குச் சென்றுவிடுவோம். இந்தத் தூக்கத்துடன் உடல் செயல் இழப்பு, தசைகளில் தளர்ச்சி ஆகிய இரண்டும் இணைந்து கொள்ளும். இதனால் ஆழமான தூக்கமில்லாமல் விழித்தே இருந்தாலும் கை, கால்களை அசைக்க முடியாத நிலையில் இருப்பார்கள்.

அதாவது, அருகில் நடக்கும் சம்பவங்களை உணர முடியும். பேச்சைக் கேட்க முடியும். ஆனால், இவரால் அதற்குப் பதில் கூற முடியாது. இம்மாதிரி கட்டுப்படுத்த இயலாத தூக்க நிலையில், ஒருவர் அடிக்க வருவதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அதைத் தடுக்க முடியாது. இதுவும் இந்தப் படத்தில் சரியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலை 10 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கும். இது ஒரு காலத்தில் மிக அபூர்வமான வியாதி எனக் கருதப்பட்டது. ஆனால், இன்று மக்களிடையே 0.02 சதவீதம் முதல் 0.16 சதவீதம் வரை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வியாதி இருப்பவர்கள் எவ்விதமான வாகனமும் ஓட்டக் கூடாது. கனரக இயந்திரங் களையும் இயக்கக் கூடாது.

தடுப்பது எப்படி?

நம் மூளையில் எச்சரிக்கை உணர்வு (Alert Sensing) தருவதற்கெனச் சில ரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏற்படும் சில மாற்றங்களால் இம்மாதிரியான வியாதி ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு சிறு பிராயத்திலேயே இருந்தாலும்கூட, 10 முதல் 30 வரையிலான வயதில்தான் வெளிப்படத் தொடங்கும்.

இந்தக் குறைபாட்டை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். உணர்ச்சி வசப்படுவதால்தான் சட்டென இந்தப் பாதிப்பு வரும். அதனால், முதலில் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இரவுத் தூக்கம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தமும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்வதும் மிகவும் அவசியம். கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர், மனநல மருத்துவர்

தொடர்புக்கு: arulmanas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x