Last Updated : 09 Feb, 2014 12:53 PM

Published : 09 Feb 2014 12:53 PM
Last Updated : 09 Feb 2014 12:53 PM

ஒரு செடி.. ஒரு ஃப்ளவர்.. : ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜ்

காதல் - கா+த+ல் காத்திருந்து, தவித்திருந்து, இல்லாமல்-போவது என்பார் எங்கள் தமிழாசிரியர்………!

ஆறாங்கல்லிலிருந்து நற்சாந்துப்பட்டி பள்ளிக்கூடத்திற்கு ஒரு கூட்டமே சைக்கிளில் வரும். அதில் உமாபதியும் ஒருவன். அதே வழியில் வரும் தாட்சாயிணி மேல் உமாபதிக்கு ஒரு கண்... இல்லை இரண்டு கண்ணுமே தாட்சாயிணி மேல்தான். நாங்கள் அனைவரும் பதினோராம் வகுப்பில் ப்யூர் சயின்ஸ் குரூப்.

எப்படிடா, தாட்சாயிணிய ஃபிரெண்ட் பிடிக்குறதுன்னு தெரியாம உமாபதி முழிச்சிகிட்டிருந்தபோது, தாட்சாயிணியே வந்து, “சைக்கிள் சாவி தொலைஞ்சு போச்சு. பூட்டை உடைச்சுத் தர முடியுமா” ன்னு கேட்டதுதான் தாமதம், பூட்டு உடைக்கப்பட்டது. மறுநாள் பூட்டு இல்லாத சைக்கிளோடு வந்தாள்.

அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் சைக்கிள்கள் காணாமல் போகும் காலம். இதை வைத்து உமாபதி, பேச்சு கொடுத்தான், “என்னோட பூட்டுல வேணா உன் சைக்கிள் செயினை எடுத்து மாட்டிக்கோ” ன்னு பிட்டு போட அது ஒர்க்அவுட் ஆனது.

பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பினாலும் தாட்சாயிணி மட்டும் சைக்கிள் ஸ்டாண்டில் காத்திருக்கும். ஏன்னா... உமாபதி சைக்கிள் எடுக்க வந்திருக்க மாட்டான். ஒட்டு மொத்த பள்ளிக்கூடமும் காலியாகும் வரை காத்திருக்க வைப்பான். இப்படியே, தினசரி அவளை காக்க வைத்து, தாட்சாயிணியோடு தனியாக சைக்கிள் பயணம் போக ஆரம்பித்து, நட்பை பலப்படுத்தினான். தாட்சாயிணிக்குமே இது பிடித்திருக்க வேண்டும், ஏனென்றால் எனக்கு தெரிந்து பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை தாட்சாயிணி சைக்கிளுக்கு பூட்டே மாட்டவில்லை. இப்படி லாக்கை வைத்து, தாட்சாயிணியை லாக் செய்த உமாபதியின் டெக்னிக், பிறகு ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் பரவியது தனிக்கதை.

தாவரவியல் பாடத்தில் தாவர குடும்பங்களைப் பற்றி ரவிச்சந்திரன் சார் விளக்குவார். மால்வேசியே, ரூபியேசியே, அரிகேசியே, முயுசேசியே என ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதாரணங்களை அடுக்கும்போதே, மனதுக்குள் பூவும் இலையும் சேர்த்து கோர்த்து ஒரு பொக்கே செய்து விடுவான் உமாபதி.

மறுநாள், என்ன குடும்பம் என்பதற்கேற்ப, வயல் வரப்புல எல்லாம் சுத்தி, கிடைக்காத பூவையும், கொடியையும் கொண்டுவந்து, வாத்தியாரிடம் பாராட்டு வாங்குவான்! தாட்சாயிணிக்கு ஹெர்பேரியம் செய்து கொடுத்து, மனதில் காதலை விதைத்தான். அந்த ஹெர்பேரியத்தில் காய்ந்து, உலர்ந்து ஒட்டிக்கிடந்த செடிகளில் இலைகளோடு இழையோடியிருந்த உமாபதியின் காதல் எனக்கு இன்றும் என்றும் ஆச்சரியமே.

விலங்கியல் பாடம் எடுத்த, ரவி சார், ஒரு மனிதனின் சிறுநீர் கொள்ளளவு என்ன? என கேட்க, மூன்று லிட்டர், ஐந்து லிட்டர் என எங்கள் பதிலை கேட்டு வகுப்பே சிரிக்கும், ஆனால் நாங்கள் மட்டும் எங்களுக்கு பிடித்த பெண்ணை பார்த்து சிரிப்போம். கடைசியா, ரவி சார், "யோவ்.. அஞ்சு லிட்டர் பிடிக்க அது என்ன எவர்சில்வர் குடமா.. சிறுநீர் குடம். எல்லோருக்கும் ஒன்றரை லிட்டர் தான்.. மீறுனா, பொங்கிடும்யா", என கலகலப் பூட்டுவார்.

அப்போதெல்லாம், உமாபதியும், தாட்சாயிணியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர அதிர சிரித்ததை, அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான். விலங்கியல் பிராக்டிக்கல் வந்தா, கரப்பான் பூச்சி புடிக்கிறேன்னு ஒரு பயல தூங்கவிடமாட்டான், தவளை புடிக்கிறேன்னு ஒரு குளம் விடமாட்டான், பிராக்டிக்கலுக்கு எலி கேட்டா வயல்ல வேட்டையாடி பெருச்சாளியே பிடிச்சு வந்து அவளை ஆச்சரியப்படுத்துவான். தாட்சாயிணிக்கு தேவையான அனைத்தையும் விலங்கியல் லேபுக்கு டோர் டெலிவரி செய்து அவன் அடித்த காதல் அட்டூழியங்கள், சொல்லி மாளாதவை.

இந்த காதல் தாவரங்களின் நடுவில் வளர்ந்ததோடல்லாமல், பிப்பெட்டுகளுக்கும் பியூரெட்டுகளுக்கும் நடுவிலும் தொடர்ந்தது. அவங்களுக்குள்ள என்ன ஒரு கெமிஸ்ட்ரின்னு பக்கடா மாதிரி ஒருத்தன் தூண்டி விட, வெள்ளை பாஸ்பரஸ், சிவப்பு பாஸ்பரஸ் வேறுபாடு பற்றி தங்கமணி சார் விளக்கும்போதும், வினையூக்கிகளை விவரிக்கும்போதும், இருவருக்கும் இடையில் வேதியியல் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அல்லிவட்டம், புள்ளிவட்டம், அயல் மகரந்த சேர்க்கை, சூலகம் என்று ஒவ்வொன்றாய் வரைந்து ரவிச்சந்திரன் சார் விளக்க, கரைந்து போவோம் நாங்கள். அல்லி வட்டம் வரைய அவளிடம் வளையலை வாங்கிய உமாபதி, அதை திருப்பிக் கொடுக்கும்போது திடீரென கவிஞர் அவதாரம் எடுத்துவிட்டான்,

“அல்லிவட்டம் புள்ளிவட்டம் வரைய

வளையல் கழற்றி தந்தாயே...

உன்னையே வட்டம் இடுகிறேன்

இதயம் கழற்றித்தா” என்று எழுதி தாட்சாயிணிடம் கொடுக்க, இந்த காதல் வரலாறை முழுமையாக தெரிந்து கொள்ள எங்கள் பத்தாம் வகுப்பு வரலாறு வாத்தியார் உள்ளே என்ட்ரி கொடுத்தார். அவர் ஏன் இங்கு சம்பந்தமில்லாமல் வருகிறார்??? தாட்சாயிணியின் அப்பா என்ற முறையில் அவர் வருவதுதானே முறை. உமாபதியை அழைத்தார்.

“வாய்யா.. நீதான் என் மருமவனா.... சரி.. எம்பொண்ணு உன்னை நம்பி வந்தா எப்படிய்யா வச்சு காப்பாத்துவ... உனக்குன்னு ஒரு சம்பாத்தியம் வேணும், அதுக்கு வேலை வேணும். படிச்சு என்னாகப் போற???” என்று கேட்க, ‘நான் கலெக்டர் ஆகப் போறேன்’ என்றான் உமாபதி. “நீ என்னவா வேணும்னாலும் ஆகுய்யா... கலெக்டர் ஆனா ரொம்ப சந்தோஷம், ஆனா இது படிக்கிற வயசு.. இப்போ இதெல்லாம் வேண்டாம்... அஞ்சு வருஷம் கழிச்சு வா..அப்பவும் எம்பொண்ணு உன்னை விரும் புனா, நீயும் எம்பொண்ணை விரும்புனா நானே கட்டித்தர்றேன்” என்றார்.

சமீபத்தில் ஊர் திருவிழாவிற்கு போன போது தாட்சாயிணியை பார்த்தேன். எனக்கு அடையாளம் தெரியவேயில்லை. அதுவாகவே வந்து பேசியது, “பாண்டிராஜி.. எப்படி இருக்க... உம்படம் பார்த்தேன்... நல்லா இருக்கியா... இவுகதான் எங்க வீட்டுக்காரவுக” என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தது. அது உமாபதி இல்லை, அவர் வேறு யாரோ ஒரு சபாபதியோ, ரகுபதியோ, ஏன் அம்பிகாபதியாகவோ இருக்கலாம். இடுப்பில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தையோடு சிரித்து பேசிய தாட்சாயிணியிடம் இப்போதும் இருக்குமா? உமாபதி சேகரித்து வந்த செடிகளும் கொடிகளும் உலர்ந்து போய் ஒட்டி வைத்த அந்த ஹெர்பேரியம் ?

நிசப்தம் தான் மிஞ்சுகிறது.

ஆமாம் உமாபதி?... கலெக்டர் ஆவேன் என்று கூறியவன் இப்போது கார் டிரைவராக இருக்கிறான். தாட்சாயிணிக்கு திருமணம் பண்ணலாம் என்று அவள் அப்பா நினைத்தபோது தான் கொடுத்த வாக்குக்காக உமாபதி பற்றி கேட்டிருக்கிறார். ‘அன்னைக்கு என்னமோ வெளையாட்டுத்தனமா பண்ணிடேம்பா!’ என்று கூறிவிட்டதாம் தாட்சாயிணி!

மகிழ்ச்சியும், துயரமும் தங்களின் உச்சத்தை ஒருசேர ஒருவனுக்கு உணர்த்தும் இடம் காதல்தான். அந்த வகையில் ஒவ்வொருவருக்குள்ளும் நினைவு கிடங்குகளில், சொல்லாத / சொல்லியும் வெல்லாத / நிராகரிக்கப்பட்ட / உதாசீனப்படுத்தபட்ட / பிரிந்துவிட்ட / பிரிக்கப்பட்ட / தவிக்கவிட்ட / தவித்திருந்த காதல் குவிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட அனைத்து காதலுக்கும், அதை சுமந்து வாழும் காதலர்களுக்கும், இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலை காதலிப்போம் !!!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x