Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணி நியமனம் பாதிக்கப்படுமோ?- தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அச்சம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தகுதி 5 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 45 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். முதல்கட்டமாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்க்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் அச்சம்

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்ற பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்ததுமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்.

புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த காலதாமதம் ஆகி வருகிறது. இதற்குள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பழைய அறிவிப்புக்கு பொருந்துமா?

ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொருத்தவரை, அதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு தேர்வும் முன்னரே நடத்தப்பட்டுவிட்டது. எனவே, நடத்தை விதிகள் இதற்குப் பொருந்தாது என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது. அரசு உத்தரவுப்படி பணிகளை மேற்கொள்வோம்” என்று பதிலளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x