Last Updated : 15 Apr, 2017 12:04 PM

 

Published : 15 Apr 2017 12:04 PM
Last Updated : 15 Apr 2017 12:04 PM

எண்ணில் அடங்கிய பறவைகள்!

‘இந்தியாவில் எண்ணிலடங்காப் பறவைகள் உள்ளன' என்று இனி யாரும் கதையளக்க முடியாது. காரணம், இங்கு நம்மிடையே இருப்பது மொத்தம் 1,263 பறவை இனங்கள்தான் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது!

இதனால், யாரும் சோகமடையத் தேவையில்லை. பறவை நோக்குதலில் நமக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வெளிச்சம் என்று நினைத்து மகிழலாம். ஏனென்றால், இவ்வளவு நாட்கள் எத்தனை பறவைகள் பூமியை விட்டு, நம்மை விட்டு அற்றுப்போய்விட்டன என்பது தெரியாத நிலையில், சமீபத்தில் வெளியான பறவைப் பட்டியல் நமக்கு அதிகத் தெளிவைத் தந்திருக்கிறது. இதனால், நம் சூழலை இன்னும் நெருக்கமாக அணுகி, முன்பைவிட அதிக அளவு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

பறவைப் பட்டியல் பயன்பாடு

பறவைகள் சரி... பறவை நோக்கல் சரி... அதென்ன பறவைப் பட்டியல்? நீங்கள் ஒரு இடத்துக்குச் செல்கிறீர்கள். அங்கு பல விதமான பறவைகளைப் பார்க்கிறீர்கள். நீங்கள் பார்த்த பறவைகள், கேட்ட ஒலிகளின் அடிப்படையில் நீங்கள் யூகித்த பறவைகளை எண்ணி, வரிசைப்படுத்தி ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்தால் அதுதான் பறவைப் பட்டியல். இதை ஆங்கிலத்தில் ‘செக்லிஸ்ட்' என்கிறார்கள்.

இந்தப் பட்டியல் ஏன் முக்கியம்? இந்த இடத்தில், இந்த ஆண்டில், இத்தனை விதமான பறவைகள் இருந்தன எனும் வரலாற்றுப் பதிவாக அந்தப் பட்டியல் மாறும். இது ஒரு காரணம். மற்றொரு காரணம், இந்த இடத்தில், இந்த ஆண்டில், இன்ன விதமான பறவை தென்பட்டது. ஆனால் சென்ற ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அந்தப் பறவை தென்படவில்லை என்று சொன்னால், அந்த இடத்தில், அந்த இடத்தின் சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அல்லது பின்னடைவை அறிந்துகொள்வதற்கான ஒரு அறிவியல் பதிவாகவும் இந்தப் பட்டியல் மாறும். எனவே, இந்தப் பட்டியலைக் கொண்டு நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அதன் மூலம் பறவைகளையும் காப்பாற்ற முடியும்.

பட்டியல் தோன்றிய வரலாறு

பிரிட்டிஷாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அன்றைய தெற்காசியாவில் தென்பட்ட பறவைகளைப் பற்றி, எட்வர்டு பிளைத் 1850-ம் ஆண்டில் மூன்று பாகங்கள் கொண்ட புத்தகமாகப் பறவை பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து டி.சி.ஜெர்டான், இந்தியத் துணைக் கண்டத்தில் தென்படும் பறவைகளை மட்டும் பட்டியலிட்டு இரண்டு பாகம் கொண்ட புத்தகமாக வெளியிட்டார். அதற்கு முன்பு வந்த பட்டியல் லத்தீன் பெயர்களைக் கொண்டிருக்க, ஜெர்டான் வெளியிட்ட பட்டியலில் இந்தியப் பறவைகள் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்தன.

அதன் பிறகு, பறவைகளுக்குப் பெயரிடுதல், அவற்றை வகைப்படுத்துதல் ஆகியவற்றின் மீது 1960-களில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களும் புரிதல்களும் உருவாகின. இந்தக் காலகட்டத்தில் அலெக்சாண்டர் வெட்மோர், ஜே.எல்.பீட்டர்ஸ் ஆகியோர் உருவாக்கிய பறவைப் பட்டியலை உலகம் முழுவதுமுள்ள பறவையியல் அமைப்புகள் அங்கீகரித்தன.

அதை அடியொற்றி எஸ்.டி.ரிப்ளி என்பவர் ‘சினாப்சிஸ்' எனும் பறவைப் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியல்தான் பிற்காலத்தில் சாலிம் அலியும் ரிப்ளியும் இணைந்து உருவாக்கிய பத்து பாகங்கள் கொண்ட ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் கையேடு' எனும் புத்தகத்துக்கு அடிப்படையாக இருந்தது.

இப்படியாக வளர்ந்துவந்த இந்தியாவுக்கான பறவைப் பட்டியலில் மேலும் பல மாறுதல்கள், கூடுதல் சேர்க்கைகள், நீக்கல்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட பிறகு கிரிம்மெட், கஸ்மீர்சாக் மற்றும் ராஸ்முஸ்ஸென், ஆண்டர்டன் ஆகிய மூன்று விதமான பறவைக் கையேடுகள் தற்சமயம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

பட்டியலில் என்ன பிரச்சினை?

இந்தப் பட்டியல்களில் ஒரு பிரச்சினை உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம்' (ஐ.யு.சி.என்), உலகம் முழுவதும் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றிய பட்டியலை வெளியிடும். இதற்கு ‘சிவப்புப் பட்டியல்' (ரெட் லிஸ்ட்) என்று பெயர்.

இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பறவை அழியும் நிலையில் இருக்கிறது என்பது, இந்தப் பறவைப் பட்டியலை அடிப்படையாக வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட பறவை இந்தியாவில் ஒரே ஒரு முறை மட்டும் தென்பட்டிருக்கலாம். அதுவும் நம் நாட்டில் வாழும் பறவையாக இருக்காது. வேறொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வலசை செல்லும்போது, இடையில் இந்தியாவை ஓய்வெடுக்கும் தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

அப்படியான பறவை, அழியும் நிலையில் இருக்கிறது என்று பதிவு செய்யப்பட்டால், இங்கு உள்ள பறவையியலாளர்கள் மத்தியில் அநாவசியப் பதற்றமும் குழப்பமும் ஏற்படும். இதனால், உண்மையிலேயே அழியும் நிலையில் உள்ள பறவைக்கு முறையான கவனிப்பு இல்லாமல், வேறு ஒரு பறவையினத்தின் மீது கவனம் குவியும். இது இயற்கையைப் பாதுகாப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும்.

அதிகாரபூர்வப் பறவைப் பட்டியல்

இந்த நிலையை மாற்றுவதற்காக, ஜே. பிரவீன், ராஜா ஜெயபால், ஆஷிஷ் பிட்டீ ஆகிய மூன்று பறவையியலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தியாவின் அதிகாரபூர்வமான புதிய பறவைப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். மூவருமே நாடறிந்த பறவையியலாளர்கள். பிரவீன் மென்பொருள் பணியாளராகவும், ராஜா ஜெயபால் கோவையில் உள்ள ‘சாலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான மைய'த்தில் (சாகான்) பேராசிரியராகவும், ஆஷிஷ் பிட்டீ ‘இந்தியன் பேர்ட்ஸ்' எனும் பறவையியல் தொடர்பான அறிவியல் இதழின் ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் தயாரித்த பறவைப் பட்டியல் மேற்கண்ட இதழில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

முழுமையான ஆவணப்படுத்துதல்

இதுகுறித்து ராஜா ஜெயபால் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “நான்காண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டம் இது. இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள பறவைகளை ஆவணப்படுத்த நினைத்தோம். அதற்காக இதுவரை இந்தியா தொடர்பாக வெளிவந்த பறவைப் பட்டியல்கள் அனைத்தையும் ஆராய்ந்தோம். அப்போது எங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.

உதாரணத்துக்கு, கருநெற்றிப் பெருங்கொக்கு (ஹூடட் கிரேன்) எனும் பறவை அசாம் மாநிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தென்பட்டதாக ஒரு பதிவு உண்டு. ஆனால் நாங்கள் வரலாற்றில் தேடிப் பார்த்தபோது, அந்தப் பறவையைப் பற்றி எங்குமே தகவல்கள் கிடைக்கவில்லை. ஆக, வேறு ஏதாவது கொக்கை ‘கருநெற்றிப் பெருங்கொக்கு' எனத் தவறாக அடையாளம் காணப்பட்டிருக்க ஏராளமான சாத்தியம் உண்டு.

இலங்கை, நேபாளம் உள்ளிட்ட உலக நாடுகளில் புதிய பறவை தென்பட்டால் அதை ஆராய்ந்த பிறகு அங்கீகரிக்கும் நடைமுறையைக் கொண்டிருக்கும் ‘தேசியப் பறவைகள் பதிவுக் குழு'வைப் போன்ற அமைப்பு நம் நாட்டில் இல்லை. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இப்படியான சூழ்நிலையில்தான் நாங்கள் இதுவரை வந்த பறவைப் பட்டியல்களை ஆராயத் தொடங்கினோம். அதற்கே எங்களுக்கு மூன்று மாதக் காலம் பிடித்தது. அதன்மூலம் நாங்கள் தெரிந்துகொண்டது இதுதான்: கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் 1,514 பறவை இனங்கள் இருந்தன அல்லது இருந்ததாக நம்பப்பட்டது என்பதைத்தான்.

அப்படியெனில், அவற்றில் எத்தனை பறவைகள் தற்சமயம் உயிருடன் இருக்கின்றன? 90 சதவீதப் பறவைகள் இந்தியாவில் தென்படுகின்றன, மீதமிருக்கும் 10 சதவீதம் இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது.

அதாவது, 125-க்கும் அதிகமான பறவை இனங்கள் இந்தியாவில் தென்பட்டிருக்கின்றனவா அல்லது தென்படுகின்றனவா என்பது சந்தேகம்தான். பெரும்பாலும் இவை தவறான இனங்காணல்களாக இருக்கலாம். பறவையின் உடல் அல்லது பறவை தென்பட்டதற்கு அடையாளமாக ஒரு ஒளிப்படம் அல்லது அந்தப் பறவையைப் பற்றிய கள விவரக் குறிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதியாக, 1,263 பறவை இனங்கள்தான் இந்தியாவில் தென்படுகின்றன என்பதை முடிவு செய்தோம். அவற்றில் 61 பறவை இனங்கள் இந்தியாவில் மட்டுமே தென்படக் கூடிய ஓரிட வாழ்விகள். இவற்றை உலகின் வேறெந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது.

இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம், இந்திய உயிரியல் அளவியல் அமைப்பு போன்ற நிறுவனங்களுடன், பறவையியலாளர்களும் எங்களுக்கு உதவியதால்தான் இந்த ஆய்வு சாத்தியமானது.

புதிய பட்டியலின் சிறப்புகள்

எங்கள் ஆய்வில் இருந்த இன்னொரு சிக்கல், பறவைகளுக்குப் பெயரிடுதலைப் பற்றியது. பேர்ட்லைஃப் இண்டர்நேஷனல், சர்வதேசப் பறவையியல் மாநாடு, ‘இ-பேர்ட்', ஹோவார்டு அண்டு மூர் ஆகிய நான்கு அமைப்புகள் பறவைகளுக்குப் பெயரிடுதலில் பிரபலமானவை. அதிலும், ஹோவார்டு அண்ட் மூர், பெயரிடுதலில் மிகவும் ஆழமான நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. அந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் பெயரிடுகின்றன. இதனால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க நினைத்தோம்.

எனவே, வெளிநாட்டுப் பெயர்களுக்குப் பதிலாக இந்திய வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களைத்தான் நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்துக்கு, பொன்முதுகு மரங்கொத்தியை வெளிநாட்டினர் ‘ஃபிளேம்பேக் உட்பெக்கர்' என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அது ‘கோல்டன்பேக் உட்பெக்கர்' என்றுதான் அழைக்கப்பட்டது. அந்தப் பெயரைத்தான் எங்கள் பட்டியலில் பயன்படுத்தியுள்ளோம்.

மேலும் இந்தப் பட்டியலில் உள்ளூர் பறவை, வலசைப் பறவை, ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தென்பட்ட பறவைகளையும் தொகுத்துள்ளோம்.

இந்தப் பட்டியலை உலகம் முழுவதும் உள்ள 35 பறவையியலாளர்களுக்கு (அவர்களில் 15 பேர் இந்தியர்கள், 20 பேர் வெளிநாட்டினர்) அனுப்பி மீளாய்வு செய்யக் கோரினோம். அவர்களில் 20 பேரிடமிருந்து ஆதரவான செய்திகள் வந்தன. எனவேதான், இந்தப் பட்டியலை அதிகாரபூர்வமான பட்டியல் என்கிறோம்.

இந்தப் பட்டியல் முற்று முடிவானது அல்ல. இது முதல் பட்டியல் மட்டுமே. இதுபோன்று வரும் காலங்களில் இரண்டாவது, மூன்றாவது எனப் பல மேம்பட்ட பட்டியல்கள் வரலாம். இந்தப் பட்டியலை >http://www.indianbirds.in/wp-content/uploads/2016/07/PraveenETAL_IndiaChecklistl.pdf என்ற இணைப்பில் பார்க்கலாம்” என்கிறார் ஜெயபால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x