Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு? - தமிழக அரசு தீவிர பரிசீலனை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இந்தத் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 50 வயது

முந்தைய திமுக ஆட்சியில், அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டு சலுகை அளிக்கப்பட்டது. அந்தச் சலுகை 2010-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. குரூப்-1 தேர்வை எழுதுவதற்கு ஆந்திரம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வயது வரம்பு 40-க்கு மேல் உள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் 50 வயது வரை குரூப்-1 தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வைப் போல குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஆண்டுதோறும் குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு முன்பாக 2 ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலைதான் இருந்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் பணி நியமன தடை ஆணை இருந்ததால் எந்தத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஆண்டுதோறும் குரூப்-1 தேர்வு நடத்தப்படாததாலும், மற்ற மாநிலங்களில் உச்ச வயது வரம்பு அதிகமாக இருப்பதாலும் தமிழகத்திலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தீவிர பரிசீலனை

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். மாணவர்களின் தொடர் கோரிக்கையை டி.என்.பி.எஸ்.சி.யும் அரசுக்கு அனுப்பியது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. முன்பு வழங்கப்பட்டதைப் போன்று 5 ஆண்டு சலுகை அளிக்கலாமா அல்லது 45 வயது வரை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x