Published : 12 Jun 2016 01:27 PM
Last Updated : 12 Jun 2016 01:27 PM

வானவில் பெண்கள்: தள்ளுவண்டிக் கடை என்னை கலெக்டராக்கும்!

படிக்க வசதியில்லை என்பதால் பள்ளி, கல்லுாரிகளுக்குப் போக முடியாமல் தவிக்கிற மாணவர்களுக்கு மத்தியில் நம்பிக்கை தருகிறார் பாண்டீஸ்வரி. மதுரை, வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த பாண்டீஸ்வரி, தன்னை மிரட்டிய வறுமையை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார்.

மாலை நேரங்களில் மதுரை கீழ மாசி வீதிக்குச் சென்றால் இவரை பஜ்ஜியும் கையுமாகப் பிடித்துவிடலாம். தள்ளுவண்டி கடையில் பலகார வியாபாரத்தை நடத்தி, அதன் மூலம் வரும் வருமானத்தில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருக்கிறார். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுக்கு மத்தியிலும் தள்ளுவண்டிக் கடைக்கு விடுப்பு விடவில்லை. பருப்பு வடை, உளுந்து வடை, பஜ்ஜி என்று விதவிதமாகச் சுட்டெடுப்பதும், வாடிக்கையாளர்களுக்கு அவற்றைக் கொடுப்பதுமாக பம்பரமாகச் சுற்றிச் சுழல்கிறார். வடை கருகிவிடாமல் இருக்க எண்ணெய்ச் சட்டியில் ஒரு கண்வைத்தபடியே பேசுகிறார் பாண்டீஸ்வரி.

“அப்பா கருப்பையா ஆட்டோ டிரைவர். அம்மா மாரியம்மாள் இல்லத்தரசி. என்கூட பிறந்தவங்க இரண்டு அண்ணன், ஒரு அக்கா. அக்காவுக்கும், ஒரு அண்ணனுக்கும் கல்யாணமாகிடுச்சி. இன்னொரு அண்ணன் பத்தாவதுவரை படிச்சிட்டு, கிடைச்ச வேலைக்குப் போறார். வீட்டு செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டார். என் அப்பா வாடகை ஆட்டோ ஒட்டி கிடைக்கிற வருமானத்துலதான், எங்க குடும்பம் நடந்தது. அப்பாவுக்கு இதயத்துல கோளாறு வந்த பிறகு அவரோட ஆஸ்பத்திரி செலவுக்கே வருமானம் சரியா இருந்தது. அதனால என்னால் ப்ளஸ் டூவுக்கு மேல படிக்க முடியலை” என்று சொல்கிறார் பாண்டீஸ்வரி.

பேசிக்கொண்டே அடுத்த சுற்று பஜ்ஜியையும் எடுத்துத் தட்டில் வைத்துவிட்டு, வடை தட்டத் தயாரானார். வறுமையின் காரணமாக இவருடைய கல்லூரிப் படிப்பு தடைபட்டது. ஆனால் ஏம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையும் கனவுமாக இருந்தது.

“காசு இல்லைன்னு படிப்பை நிறுத்த எனக்கு மனசில்லை. எங்கம்மா வீட்டில் ருசியா வடை சுடுவாங்க. அவங்க கைப்பக்குவத்தில் வடை சுட்டு வியாபாரம் செய்தால் அதில் கிடைக்கும் பணத்துல படிக்கலாம்னு தோணுச்சு. என் எண்ணத்தை அம்மாகிட்டே சொன்னேன். அம்மாவுக்கும் என்னை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. அதனால என்னோட யோசனையை ஏத்துக்கிட்டாங்க. நானும் அம்மாவும் சேர்ந்து, மதுரை ஜவுளிகடை பஜாரான கீழ மாசி வீதியில் தள்ளுவண்டி கடை போட்டோம். ஆரம்பத்துல அம்மா வடை சுடுவாங்க. நான், வடைகளை பேப்பர்ல சுத்திக் கொடுப்பேன். வேலைபார்த்துக்கிட்டே மதுரை மீனாட்சி கல்லுாரியில் பி.பி.ஏ. சேர்ந்தேன்” என்று புன்னகைக்கிறார்.

படிப்படியாக அம்மாவிடம் இருந்து வடை சுடும் கைப்பக்குவத்தைக் கற்றுக்கொண்டார். அம்மா கடைக்கு வராத நாட்களில் பாண்டீஸ்வரியே வடை சுட்டு, வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார். கல்லூரி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேராக கடையைக் கவனிக்க வந்துவிடுவார். இரவு பத்து மணிவரை வியாபாரம் நடக்கும். பிறகு பாண்டீஸ்வரியும் அவரது அம்மாவும் ஒன்றாக வீட்டுக்குச் செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் முழுநேரமும் வியாபாரம் உண்டு.

“எங்க கடைக்குக் கல்லுாரி மாணவர்களும் வேலைக்குப் போகிறவர்களும் வருவார்கள். நான் சுடிதார் போட்டுக்கிட்டு வடை சுடுவதைப் பார்த்து விசாரிப்பார்கள். நான் எம்.பி.ஏ. படிக்கிறேன்னு தெரிஞ்சதும் ஆச்சரியப்பட்டுப் பாராட்டிட்டுப் போவாங்க. அப்புறம் அவங்க எங்களோட நிரந்தர வாடிக்கையாளராகிடுவாங்க” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்.

இப்படிப் பகுதி நேரமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடை நடத்திவருகிறார் பாண்டீஸ்வரி.

“காலேஜ் முடிச்சதும் நல்ல வேலை தேட வேண்டியதுதான் பாக்கி. என்னோட படிப்புக்கும், குடும்ப செலவுக்கும் நானும் அம்மாவும் சேர்ந்து நடத்துற இந்தத் தள்ளுவண்டி கடைதான் ஆதாரமாக இருக்கு. பண்டிகை நாட்களில் ஜவுளி எடுக்க நிறைய பேர் வரும்போது ஒரு நாளைக்கு செலவு போக ரெண்டாயிரம், மூணாயிரம் ரூபாய்வரை கிடைக்கும். மற்ற நாட்களில் வியாபாரம் டல் அடிக்கும். நல்ல வேலை கிடைச்சதும், அம்மா, அப்பாவை உட்கார வைத்து சாப்பாடு போட வேண்டும். இரண்டு வருஷம் சம்பாதிச்சிட்டு, என்னோட அடுத்த லட்சியமான ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகணும். ஐ.ஏ.எஸ். ஆகறதுதான் என்னோட கனவு. படிக்கவே முடியாதுங்கற நிலையில என்னோட படிப்பைத் தொடர இந்தத் தள்ளுவண்டி கடை கைகொடுத்துச்சு. அதே மாதிரி என்னோட கலெக்டர் கனவும் நிறைவேறும்” நம்பிக்கையுடன் சொல்கிறார் பாண்டீஸ்வரி. அவர் சொல்வதைக் கேட்கிற வாடிக்கையாளர்களின் முகங்களின் அவர் மீதான மதிப்பு அதிகரிக்கிறது.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x