

பி.காம். படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடிய பட்ட மேற்படிப்புகள் உள்ளன. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது அவசியம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட். படித்து ஆசிரியர் பணியிடத்துக்குச் செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பி.காம். படிப்பவர்களுக்கு காலை, மாலை நேரப் படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தி, போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை அடையமுடியும். பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும், ஹிந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட பிற நாட்டு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்லலாம். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது அவசியம்.
அனைத்து நிறுவனங்களும் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி மேற்படிப்பு படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
கம்ப்யூட்டர் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு முயற்சி மேற்கொள்பவர்கள், எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை தயக்கமின்றித் தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் அனுபவம் மிக்கவர்களுக்கு இதுபோன்ற படிப்புகளை வழங்குகின்றன. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும்.
மாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் பட்ட மேற்படிப்பு, மும்பையில் உள்ள பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இன்சூரன்ஸ் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம். சட்டத் துறைக்கு மாற விரும்புபவர்கள் எல்.எல்.பி. சட்டம் பயின்று, நல்ல பணி வாய்ப்பு பெறலாம். பத்திரிக்கைத் துறையில் சாதனை படைக்க விரும்புபவர்கள் எம்.ஏ. இதழியல் படிக்கலாம்.
எல்லா துறைகளிலும் பணி வாய்ப்பு வழங்கும் படிப்பு பி.காம். என்பது மிகவும் சாதகமான அம்சம். பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு படித்தால் வளமான வாழ்க்கையைப் பெறலாம்.