Published : 09 Feb 2014 03:33 PM
Last Updated : 09 Feb 2014 03:33 PM

தொழில் துறையில் சிறக்க வழிவகுக்கும் எம்பிஏ படிப்பு

கலை, அறிவியில், பொறியியல் என பட்டப் படிப்புகளை படித்து முடிப்பவர்கள் தொழில் துறையில் நாட்டம் கொண்டு, உயர் பதவியில் சிறந்த இடத்தை பிடிக்க எம்பிஏ படிப்பு வழிவகுத்துக் கொடுக்கிறது. எம்பிஏ பட்டமேற்படிப்பு நிதி நிர்வாகம், விற்பனை, மனிதவள மேம்பாடு ஆகியவற்றை மட்டுமே மையமாகக் கொண்டது என்ற எண்ணம் தவறு. இதில் 20-க்கும்

மேற்பட்ட சிறப்பு பாடப் பிரிவுகள் உள்ளன. எந்த பட்டப் படிப்பு படித்தவர்களும் தங்களது விருப்பத்துக்கேற்ற எம்பிஏ பட்டமேற்படிப்பைத் தேர்வு செய்து வாழ்வில் உயரலாம். எம்பிஏ ரீடெய்ல் மேனேஜ்மென்ட், எம்பிஏ லாஜிஸ்டிக் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

பங்குச் சந்தையில் சாதிக்க விரும்புபவர்களும் பங்குச் சந்தை சார்ந்த பெரிய நிறுவனங்களில் சவாலான பதவிகளில் அமர விரும்புபவர்களும் எம்பிஏ இன் கேபிட்டல் மார்க்கெட் படிக்கலாம். வங்கிகளில் உயர்வான பதவிக்கு வழிவகுக்கும் படிப்பாக எம்பிஏ பேங்கிங் மேனேஜ்மென்ட் படிப்பு உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறையில் கொடிகட்டி பறக்க விருப்பம் உள்ளவர்கள் எம்பிஏ இன் குளோபல் பிசினஸ் ஆபரேஷன் படிப்பை தாராளமாக எடுத்துப் படிக்கலாம். இப்படிப்பை டெல்லியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனம் வழங்குகிறது.

தொழில் சார்ந்த துறைகள் மட்டுமின்றி விவசாயம், வனம் சார்ந்த துறைகளில் பணியாற்ற விருப்பம் கொண்டவர்களுக்கும் எம்பிஏ பட்டமேற்படிப்பு வழிவகுக்கிறது. எம்பிஏ இன் அக்ரிகல்ச்சர் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் விவசாயம் சார்ந்த துறையிலும் எம்பிஏ இன் ஃபாரஸ்டரி மேனேஜ்மென்ட் படித்தவர்கள் வனம் சார்ந்த துறையிலும் பணியாற்ற முடியும். இப்படிப்புகளை போபாலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்டரி கல்வி நிறுவனம் அளிக்கிறது.

இந்தியாவில் கிராம பொருளாதாரத்துக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் அரசும் தனியார் துறைகளும் முக்கியத்துவம் அளிக்கின்றன. கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும் தொழில்துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகிக்க விருப்பம் உள்ளவர்கள் எம்பிஏ ரூரல் டெவலப்மென்ட் பட்டமேற்படிப்பைப் படிக்கலாம்.

உலக அளவில் மருத்துவத் துறை பெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளும் அதுசார்ந்த மருத்துவ உபகரண தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. எம்பிஏ இன் ஹாஸ்பிட்டல் அண்ட் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் படிப்பு மூலம் மருத்துவத் துறையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும்.

தொழிற்சாலைகளில் மூலப்பொருள் உற்பத்தி முதல் விற்பனைக்கு செல்லும் வரையிலான முழு அளவிலான தொழில் நடவடிக்கையைக் கற்றுத் தேர்ந்திட எம்பிஏ இன் ஆபரேஷன் மேனேஜ்மென்ட் படிப்பால் சாதிக்க முடியும். இப்படிப்பை புனேயில் உள்ள சிந்தியாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் வழங்குகிறது. எம்பிஏ பட்டமேற்படிப்பில் உள்ள மற்ற பாடப் பிரிவுகள் குறித்து நாளை தெரிந்துகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x