Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

தொலைநிலைப் பல்கலை. தொடங்கினால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் தொலைநிலைக் கல்வி வழியாக சுமார் இரண்டு கோடி மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு வருமானத்தைக் குவிக்கும் விஷயம் என்பதால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுமே தொலைநிலைக் கல்வி விவகாரத்தில் அதிக அக்கறை எடுக்கின்றன.

தமிழக பல்கலைக்கழகங்களுக்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 500-க்கும் மேற்பட்ட தனியார் ஸ்டடி சென்டர்கள் செயல்படுகின்றன. வளம் கொழிக்கும் இந்த ஸ்டடி சென்டர்களுக்கு அனுமதி வழங்கியே பல துணைவேந்தர்கள் செழித்திருக்கிறார்கள்.

தொலைநிலைக் கல்வியின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் வருமானம் கொட்டுவதாகச் சொல்கிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து ’தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:

பல்கலைக்கழகங்களுக்கான ஒட்டுமொத்த செலவினத்தில் 30 சதவீதம் மட்டுமே தமிழக அரசு மானிய தொகுப்பு நிதியாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம், தொலைநிலைக் கல்வி மற்றும் இணைவு கல்வித் திட்டத்தில் படிப்புகளை வழங்குவதன் மூலமாகத்தான் திரட்டப்படுகிறது.

தமிழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பல்கலையிலும் ஒவ்வொருவிதமான பாடத் திட்டங்கள் இருக்கின்றன. தேர்வு முறையிலும் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஒவ்வொரு பல்கலையிலும் தேர்வு முறைகளை வெளியிடுவதில் மாறுபாடு, செமினார் வகுப்புகளை முறையாக நடத்தாதது, பாடப் புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் என பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.

தனியாரால் தரம் குறையும் கல்வி

சில பல்கலைக்கழங்கள், தனியார் ஏஜென்ஸிகள் மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் பாடவகுப்புகளை நடத்துவதால் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் பெருமளவு முறைகேடுகள் நடக்கின்றன.

பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலுக்கு மாறாக, பல பல்கலைக்கழகங்கள் தங்களின் சட்டபூர்வ எல்லையைத் தாண்டி பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஸ்டடி சென்டர்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளன. இதனால் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்வித் தரம் குறைந்து, பெயரும் கெட்டு வருகிறது.

இந்த நிலை மாறவேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைநிலைக் கல்வி இயக்ககங்களையும் ஒருங்கிணைத்து, ‘தமிழ்நாடு தொலைநிலைப் பல்கலைக்கழகம்’ என தனி பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும்.

இதன்மூலம் தொலைநிலைக் கல்விக்கென மாநிலம் தழுவிய ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்படுத்துவதுடன், மேலே சொல்லப்பட்ட அனைத்துவிதமான குறைபாடுகளும் முறைகேடுகளும் களையப்படும்.

‘டாஸ்மாக்’கை மூடலாம்

தொலைநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கினால் எங்கோ தனியாருக்கு போய்க் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் அரசின் கஜானாவுக்கு வந்து சேரும். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நூறு சதவீத மானிய தொகுப்பு நிதியை அரசு வழங்க முடியும்.

உபரி வருமானத்தை அரசின் பிற நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். டாஸ்மாக், மணல் குவாரி வருமானத்தைவிட இதில் கூடுதலாக வருவாய் கிடைக்கும். இதனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அரசு துணிச்சலுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x