

பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் எரிபொருள் பற்றாக்குறை கடுமையான அளவில் இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் பயமுறுத்தி வரும்நிலையில் மாற்று எரிபொருளுக்காக அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் இருக்கும் ஹை டெக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
அமெரிக்கா ஒப்புதல் கடிதம்
இவர்களின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் விளைவாக தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள். இதற்கான ஆராய்ச்சி உலகளவில் நடந்து வந்தாலும் முடிவுக்கு வந்திருக்கும் இவர்களின் ஆராய்ச்சியை அமெரிக்க அரசு ஏற்று ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய கருவியைப் பற்றி கார்த்திகேசனும், சிவச்சந்திரனும் கூறியது: “தற்போதைய நிலையில் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் ஒரு கருவி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். இரு தனித்தனி பாகங்களைக் கொண்ட இக்கருவி 300 கிராம் வரை எடையுள்ளது. இதனை ஒரு இரு சக்கர வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும்.
எரிபொருளின் தேவை பாதியாகக் குறையும்
வாகனம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்த கருவியும் இயங்கத் தொடங்கி அதில் இருக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயு பிரிக்கப்பட்டு எரிபொருள் செல்லும் பாதையில் செலுத்தப்படும். அதனால் எரிபொருளின் தேவை பாதியாகக் குறையும். உதாரணத்துக்கு லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அந்த வாகனம் 90 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
இதை மைலேஜ் டெஸ்ட், லோடு டெஸ்ட் உள்பட பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறோம்” என்கின்றனர்.
இக்கருவி இயங்கத் தனியான பொருட்கள் எதுவும் தேவையில்லை. வண்டியை முடுக்கத் தேவைப்படும் மின்சாரத்திலேயே இதுவும் இயங்கத் தொடங்கிவிடும் என்பதுதான் இக்கருவியின் தனிச்சிறப்பு. இக்கருவி பொருத்தப்படுவதன் மூலம் இன்னொரு பயனும் கிடைக்கிறது. எரிபொருள் எரிக்கப்படுவதால் வெளியாகும் கார்பனின் அளவு 75 சதவிகிதம் வரையிலும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பெருகிவரும் வாகனப் புகையால் மூச்சுத்திணறும் இன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய சமுதாய சீர்திருத்தம் என்றே சொல்லலாம்.
மாணவர்களின் எண்ணத்தை உள்வாங்கி இக்கருவியைத் திறம்படச் செய்து முடித்திருக்கும் ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷனை சேர்ந்த இளம் விஞ்ஞானி முரளி கூறுகையில், “எரிபொருளே இல்லாமல் முழுக்க முழுக்கத் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வாகனங்களை இயக்க ஒரு வருட காலமாகவே ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த மாணவர்கள் எங்களிடம் வந்தது ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது.
விரைவில் நல்ல செய்தி
இப்போது கிடைத்திருக்கும் வெற்றியின் அடிப்படையில் எங்கள் ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரைப் பிரித்தெடுத்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து அதன்மூலம் வாகனத்தை ஓட்ட முடியும் என்ற நல்ல செய்தியை விரைவில் உலகுக்கு அறிவிக்கிறோம்” என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்.