Published : 25 Nov 2014 15:56 pm

Updated : 25 Nov 2014 15:56 pm

 

Published : 25 Nov 2014 03:56 PM
Last Updated : 25 Nov 2014 03:56 PM

முற்றும் நெருக்கடி எல்லை தாண்டும் காட்டெருதுகள்

உலகத்தின் மிகப்பெரிய மாட்டினமான காட்டெருதுகள், தமிழகக் காடுகளில் உள்ளன. அடர்ந்த காட்டுப் பகுதியைவிட்டு வெளியே வராத இவற்றை, சமீபகாலமாகக் காட்டு எல்லைகளிலும் சில நேரம் ஊருக்குள்ளும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் என்ன?

சமீபகாலமாகக் கொடைக்கானல், ஊட்டி, முதுமலை, வால்பாறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய சுற்றுலாப் பகுதிகளில் காட்டெருதுகளை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் காட்டெருதுகள் ஊருக்குள் வருகின்றனவா? அல்லது, நாம் காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அட்டகாசம் செய்கிறோமா என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.


ஏன் வருகின்றன?

காட்டெருதுகள் என்றில்லை யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தை, புலி இப்படி எந்த ஒரு காட்டுயிரும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் திட்டமிட்டு நுழைவதில்லை. காடுகளுக்குள் அவற்றின் இருப்பிடங்கள், வலசை பாதைகள், உணவு, நீர் ஆதாரங்கள் மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படும்போது, அவை தடுமாடுகின்றன, குழம்பிப் போகின்றன. அப்போது திசை தெரியாமலும், உணவு ஆதாரம் இல்லாமலும் மனிதர்களுடைய வாழ்விடங்களுக்கு வருகின்றன.

இப்படித்தான் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் தற்போது காட்டெருதுகள் கூட்டம் கூட்டமாக உலா வர ஆரம்பித்துள்ளன. இவற்றைப் பலரும் காட்டெருமைகள் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், காட்டெருதுகள் எனக் குறிப்பிடுவதுதான் சரி. நம் காடுகளில் உள்ள காட்டெருமைகளும் (Wild water buffalo), அமெரிக்காவில் உள்ள காட்டெருமைகளும் (Bison) வேறு வேறானவை.

சாதுவானவை

காட்டெருதுகள் அடிப்படையில் சாதுவானவை. ஆயிரம் கிலோவுக்கு மேல் எடை கொண்டவை. உலகத்தில் உள்ள காட்டெருதுகளில் 90 சதவீதம் இந்தியாவில் உள்ளன என்று கோவை ஓசை சுற்றுச்சுழல் அமைப்பைச் சேர்ந்த க.காளிதாசன், தெங்குமரஹடாவைச் சேர்ந்த கானுயிர் ஆர்வலர் ராமசாமி ஆகியோர் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “பொதுவாக விலங்குகள், குழந்தைகள் போலத்தான். மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும். சில இடங்களில் மனிதர்களுடைய விவசாய நிலப் பகுதிகளைச் சேதப்படுத்துகின்றன. சில இடங்களில் மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. இதுதான் காட்டெருதுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினை.

இதைத் தாக்குதல் எனப் பார்க்காமல், விபத்து என்றுதான் கூற வேண்டும். திட்டமிட்டு அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. பசி என்பது எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையானது. உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, அவை வாழிடங்களைவிட்டு வெளியேறுகின்றன. விளைநிலங்களுக் குள்ளும் ஊருக்குள்ளும் அவை நுழையும் வேளையில் மனிதர்கள் அவற்றை விரட்டும்போது ‘மனிதர்களைக் கண்டால் தாக்க வேண்டும்' என்ற உள்ளுணர்வு காட்டெருதுகளிடம் வலு வடைந்துவிடுகிறது.

புலியும் காட்டெருதும்

காட்டெருதுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வல்லமை புலிகளுக்கு மட்டுமே உண்டு. புலிகளுக்குக் காட்டெருதுகள் முக்கிய இரை. புலிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதியில் காட்டெருதுகளின் எண்ணக்கை அதிகரிக்கும். அதனால், காட்டெருதுகளின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைத்துக்கொள்ள புலிகள் உதவுகின்றன.

ஊட்டி, கொடைக்கானலில் ஒரு காலத்தில் இருந்த சோலைப் புல்வெளிகளை அழித்து வாட்டில் எனும் சீகை மரங்கள், யூக்கலிப்டஸ் எனும் தைல மரங்கள், பைன் எனும் ஊசியிலை மரங்களை வளர்த்துள்ளதால், அந்தப் பகுதிகளின் இயல்பு தலைகீழாகிவிட்டது. தற்போது காட்டெருதுகள் தாவர உணவு கிடைக்காமல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாஸ்தலங்களுக்குள் புகுந்து வருகின்றன. அவை ஊருக்குள் நுழைகின்றன என்று குற்றம் சாட்டும் முன், இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார்கள்.

யானையைவிட வலுவானவை

காட்டெருது ஆங்கிலத்தில் Indian Gaur’ என்று அழைக்கப்படுகிறது. ‘Bison’ என இதை அழைப்பது தவறு. காட்டெருதுகளின் பாலினத்தை முதல் 15 மாதங்கள்வரை கண்டறிய முடியாது. அதன்பின், கொம்பை வைத்துதான் பாலினத்தைக் கண்டறிய முடியும். அதேபோல கொம்பில் காணப்படும் வெள்ளை நிறத்தை வைத்துதான் அதன் வயதையும் கண்டறிய முடியும். காட்டெருதுகளின் சராசரி வயது 20-25 ஆண்டுகள்.

ஒரு வகையில் யானையைவிட வலுவான விலங்கு காட்டெருது. யானைக்கு அருகில் நாம் சென்றால், அது பிளிறி எச்சரிக்கும். காட்டு மாடு அப்படியில்லை. தெரியாமல் நாம் அதன் அருகில் சென்றுவிட்டால், தாக்கிவிடும். காட்டெருதுகள், காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை புல்வெளியில் மேயும். இவை 6,000 அடி உயரமுள்ள மலைப் புல்வெளிகளில்தான் அதிகம் காணப்படும்.

புள்ளிமான், கடமான் உள்ளிட்டவை கிடைக்காதபோது புலி போன்ற இரைகொல்லிகள் காட்டெருதுகளைத்தான் அடித்து சாப்பிடும். கணக்கெடுப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் 22 ஆயிரம் காட்டெருதுகள் உள்ளன. இறைச்சி, வீட்டு அலங்கார பொருட்கள் செய்வதற்காகவும் இந்தியக் காடுகளில் கள்ள வேட்டைக் கும்பல் காட்டெருதுகளை வேட்டையாடுகிறது.


மாட்டினம்காட்டெருதுகள்தமிழகக் காடுகள்வன விலன்க்குகாட்டுப் பகுதிகாடுகள் அழிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author