Published : 01 Jul 2016 12:37 PM
Last Updated : 01 Jul 2016 12:37 PM

பொருள்தனைப் போற்று!- 23: நாங்களும் உள்ளோம் ஐயா!

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் முடிவால் அனேகமாக அனைத்து நாடுகளுமே அதிர்ச்சியடைந்திருக்கின்றன. இங்கிலாந்து உட்பட எந்த நாட்டுக்கும் இதனால் பெரிதாக நன்மையும் கிடைக்கப் போவதில்லை. பிறகு ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது? அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாமான்யர்களின் விருப்பத்தின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று யத்தனித்தால், இத்தகைய விபரீத விளைவுகள்தாம் உண்டாகும். சாமானியர்களும் புரிந்துகொள்கிற வகையில், இத்துறை சார்ந்த செய்திகளைக் கொண்டு சேர்த்துவிட்டு, பிறகு அவர்களின் கருத்துகளைக் கேட்பதால் நன்மை உண்டாகலாம். இங்கிலாந்து போன்ற நன்கு வளர்ந்த நாடுகளில்கூட, பொருளாதார அறிவு பரவலாக இல்லை என்பதற்கு, இந்த முடிவு சான்று. தான் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்துவிட்டார்கள். இந்த முடிவுமே, மறு பரிசீலனை செய்யப்பட வாய்ப்புகள் உருவாகலாம்.

இன்னொரு அண்மைச் செய்தியும் இருக்கிறது. அரசுச் செலவுகளை, திட்டச் செலவு, திட்டம் சாராச் செலவு (Plan & non-Plan expenditure) என்று வகைப்படுத்துவது உண்டு. இரண்டு வகைகள் இருந்தும், களத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. மாறாக, குழப்பங்கள், தவறாக வகை பிரித்தல் மட்டுமே விளைந்தன என்று அரசு கருதியது. ஆகவே, திட்டச் செலவு, திட்டம் சாராச் செலவு என்று வகைப்படுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இனி, மூலதனச் செலவு, வருவாய்ச் செலவு (capital and revenue expenditure) மட்டுமே இருக்கும். இது ஒரு முக்கியமான தகவல். பதியவைத்துக்கொள்ளவும்.

அரசின் வரவு செலவு

சரி. அருஞ்சொற்களுக்கு வருவோம். தொகுப்பு நிதியம் (Consolidated Fund) என்கிறார்களே அது என்ன? இதன் மூலம்தான், அரசின் வரவு செலவு மொத்தமும் நடைபெறுகிறது. நமது அரசமைப்புச் சட்டம் - உறுப்பு 266 (1)இன் படி, அரசின் வருமானங்கள் அனைத்தும், இந்த நிதிக்குத்தான் செல்லும். இதில் இருந்துதான் செலவும் செய்யப்படும். அரசுக்கு நாம் செலுத்தும் நேரடி, மறைமுக வரிகள், அரசு பெறும் கடன் தொகைகள் மற்றும் பிற வகைகளில் வரும் எந்த வருவாயும், இந்த நிதியத்துக்கே வந்து சேரும். அரசின் செலவுகளும் அப்படியே. இது ஏறத்தாழ, அரசுக் கருவூலத்தின் நடப்புக் கணக்கு எனலாம்.

இது அல்லாமல், ‘Contingency Fund’ -அசாதாரண நிதியம் என்றும் இருக்கிறது. அரசின் அவசர காலப் பயன்பாடு, செலவுக்கு மட்டும் இது கையாளப்படுகிறது. மற்றொரு சொல். உச்சரிப்பதற்குச் சற்று சிரமமானது: ‘க்விட் ப்ரோ கோ’ (quid pro quo) அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

எந்த ஒன்றையும் நாம் இலவசமாகப் பெற்றுவிட முடியாது. எதற்கும் ஒரு விலை தந்தாக வேண்டும். தருவதும் பெறுவதும் சரிசமமான முற்றிலும் இணையான மதிப்பு கொண்டவையா என்பது வேறு விஷயம்.

‘பதிலுக்கு எதாவது குடுக்காம வாங்கிக்கிறது தப்புங்க’ என்று நம் ஊர்ப் பக்கம் சொல்கிறோம் அல்லவா...? இந்த ‘பதில்’தான் ‘க்விட் ப்ரோ கோ’. ‘கிவ் அன்ட் டேக் பாலிசி’ என்று சாமான்யர்கள் சர்வ சாதாரணமாகக் குறிப்பிடுவது இதைத்தான்.

சில சமயங்களில், நாடுகளுக்கு இடையிலான ‘நல்லுறவு’ என்பதுவேகூட, ‘க்விட் ப்ரோ’ கோட்பாட்டில் அடங்கும். சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள், அந்தந்த நாடுகளில் கேள்வி கேட்கப்படுவதும் இதன் அடிப்படையில்தான். ‘பதிலுக்கு என்ன கிடைத்தது...? இதனால் நமக்கு என்ன லாபம்..? வெளிப்படையாகத் தெரிவியுங்கள்’ என்று குரல்கள் எழுகின்றன அல்லவா..? இந்தக் கோரிக்கையின் பொருள் - ‘க்விட் ப்ரோ’ தான்.

இந்த ‘க்விட் ப்ரோ' ஒன்றும் புதிய சங்கதி அல்ல. நாம் ஏற்கனவே நன்கு அறிந்த ஒன்றுதான்.

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ உலகு?” (குறள் -211. ஒப்புரவு அறிதல்)

(கைம்மாறு வேண்டாத மழையின் கடமை பொருட்டு, உலகம் என்ன மறு உதவி செய்ய இயலும்?) உலகப் பொதுமறை கூறும் ‘கைம்மாறு’தான், பொருளாதாரத்தில் ‘க்விட் ப்ரோ கோ’ கோட்பாடு!

அமைப்புசாராத் தொழில்கள

பொதுவாக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள்.... இங்கு பணிபுரிபவர்களை மட்டுமே நாம் தொழிலாளர்களாகப் பார்க்கிறோம். ஆனால், அமைப்பு ரீதியாக எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், தமக்கென்று குரல் கொடுக்க ஒரு பொதுவான அமைப்பு இன்றி, உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம். சின்னஞ்சிறிய வர்த்தக நிலையங்கள், கடைகள், தனி நபர்களிடம் பணி புரிவோர் இதில் அடங்குவர். கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலைக்கு வரும் பணிப் பெண்கள், கார் ஓட்டுநர்கள் ஆகியோர் உதாரணங்கள். இவர்களின் உரிமைகள் இவர்களோடு முடிந்துவிட வேண்டியதுதான். ஆனால், நிலைமை மாறிவருகிறது.

‘அமைப்பு சாராத் தொழில்கள்/ தொழிலாளர்கள்’ என்கிற சொற்றொடர், ‘இயக்கங்கள்’ அறிமுகப்படுத்தியது அல்ல. 1972-ம் ஆண்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) மூலம்தான் இது. பயன்பாட்டுக்கே வந்தது. இவர்களை அங்கீகரித்து, இவர்களுக்காக முதலில் குரல் கொடுத்ததும், தொடர்ந்து போராடிவருவதும் இந்த சர்வதேச நிறுவனம்தான். சர்வதேச அளவில், ஐந்து அல்லது அதற்குக் குறைவாகப் பணியாளர்களைக் கொண்ட வணிக அமைப்புகள் அனைத்தும், அமைப்பு சாராத் தொழில்கள்தாம். இந்தப் பணியாளர் அளவு நாட்டுக்கு நாடு சற்றே மாறுபடலாம்.

விசை (power) பயன்படுத்துகிற ‘உற்பத்தி’ நிலையங்களில் 10க்குக் குறைவாக, விசையிலா உற்பத்தி நிலையங்களில் 20க்குக் குறைவாகத் தொழிலாளர்கள் இருந்தால், அவையும் ‘அமைப்பு சாராத் தொழில்கள்’ ஆகும்.

எழுத்து வடிவத்தில் பணி ஆணை/ ஒப்பந்தம் (employment order / job contract in the written form) இல்லாமை; வரையறுக்கப்பட்ட பணி நேரம், ஊதியம், பணியின்போது பாதுகாப்பு, விடுப்புக்கான உரிமை போன்ற பல அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு ‘அமைப்பு சாராத் தொழிலாளர்’ என்று தீர்மானிக்கப்படுகிறது.

தொழிலாளர் உரிமைகள்

இந்தியாவில், National Commission for Enterprises in the Unorganised Sector (NCEUS) அமைப்பு சாராத் தொழில்களுக்கான தேசியக் குழு’ என்று ஓர் அமைப்பு, இந்திய அரசின், குறு சிறு மத்திய தொழில் அமைச்சகத்தின் கீழ், 2004-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்தொழிலாளர்களின் உரிமைகள், நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கிவருகிறது. இது ஒரு ஆலோசனைக் குழு (advisory committee) மட்டுமே.

2012 பிப்ரவரியில், தேசியப் புள்ளிவிவரக் குழு (National Statistical Commission) அளித்த அறிகையின்படி, நம் நாட்டின் உழைப்பாளர்களில், 90%க்கு மேல், ஆம்; தொண்ணூறு சதத்துக்கும் மேல், அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 50%க்கும் மேல் இவர்களின் பங்களிப்பால் வருகிறது.

நினைவில் கொள்ள வேண்டும். எஸ்டேட் தொழிலாளர்கள் தவிர்த்து, விவசாயத் தொழிலில் பணிபுரியும், அத்தனை பேருமே, அமைப்பு சாராத் தொழிலாளிகள்தாம். மீனவர்கள், நெசவாளர்கள், குயவர்கள், கைத்தொழில் செய்வோர், மோட்டார் மெக்கானிக்குகள், லாரி ஓட்டுனர்கள்... எல்லாத் துறைகளிலும் இவ்வகைத் தொழிலாளர்கள்தாம்.

ஆனாலும், மிகக் குறுகிய, அமைப்பு சார்ந்த, ‘உழைக்கும் வர்க்கம்’ எழுப்பும் உரிமைக் குரல் மட்டுமே ஏகோபித்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. புள்ளிவிவரக் குழுவின் அறிக்கை, பல அரிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு புதிய வெளிச்சம் தந்திருக்கிறது; புதிய விடியலைக் காண்பித்திருக்கிறது.

அப்படி என்னதான் கூறுகிறது இந்த அறிக்கை...?

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x