Last Updated : 20 Jul, 2016 12:34 PM

 

Published : 20 Jul 2016 12:34 PM
Last Updated : 20 Jul 2016 12:34 PM

வாண்டு பாண்டு: ஜூனோ அனுப்பிய நிலாக்கள்!

பாண்டு: ஹாய் வாண்டு, என்னப்பா, சாப்பாட்டுக் கூடையில நிறைய டப்பா இருக்கு?

வாண்டு: ஓ.. . அதுவா, அது ஸ்நாக்ஸ் டப்பா. ஸ்கூல்ல சாப்பிட அம்மா கொடுத்தாங்க.

பாண்டு: ஓ... அப்படியா? ஸ்நாக்ஸ் சாப்பிடுறதுக்குப் பதிலா பழங்களை எடுத்துட்டு வந்து சாப்பிடலாம்ல்ல. அந்தந்த சீசன்ல கிடைக்கிற பழங்களைச் சாப்பிடுறது நல்லதுன்னு எங்க டாக்டர் அங்கிள் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப சொன்னாரு.

வாண்டு: நான்தான் வீட்டுல அப்பப்போ பழங்களைச் சாப்பிடுறேனே. அப்புறம் என்ன?

பாண்டு: தினமும் ஸ்நாக்ஸ் சாப்பிடுறோம். ஆனா, வாரத்துல ஒரு நாளோ, ரெண்டு நாளோ பழங்களைச் சாப்பிடுறோம். இந்த சீசன்ல கிடைக்கிற சில பழங்கள் மத்த நாட்கள்ல கிடைக்கிறது இல்லை. அது மாதிரி பழங்களைச் சாப்பிடலாமே.

வாண்டு: இப்போ என்னதான் சொல்ல வரப்பா?

பாண்டு: நான் வீட்டிலிருந்து இப்போல்லாம் ஸ்நாக்ஸ் கொண்டு வரதில்லை. தினமும் பழம்தான் கொண்டு வரேன். இன்னைக்குப் பேரிக்காய் கொண்டு வந்திருக்கேன்.

வாண்டு: ஓ... பேரிக்காயா? விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை அன்னைக்கு இதை வீட்டுல வாங்குவாங்களே.

பாண்டு: பாத்தியா, வருஷத்துல ஒரு நாளைக்குத்தான் இந்தப் பழத்தைச் சாப்பிடுவ போல. இந்தப் பழம் எல்லா சீசன்லையும் கிடைக்கிறது இல்லை. ஜூன் மாசத்துலேர்ந்து அக்டோபர் வரைக்கும்தான் பெரும்பாலும் அதிகமாகக் கிடைக்கும்.

வாண்டு: ம்ம்... இவ்ளோ சொல்றேனா, இந்தப் பழத்தைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சு வைச்சுருப்பியே...

பாண்டு: இதைச் செய்யலைன்னா எப்படி? இந்தப் பழத்துல மாவுச்சத்து, நார்ச் சத்து, விட்டமின் பி, சி, இ, கே, மக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், புரோட்டின்னு நிறைய இருக்குப்பா. நம்மள மாதிரி குட்டிப் பசங்களுக்குத் தேவையான கால்சியம், இரும்புச் சத்தும் நிறைய இருக்கு

வாண்டு: ஓ... இவ்ளோ சத்து இருக்கா? இதை ஏழைகளின் ஆப்பிள்ன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதோட வேறு சிறப்பு என்னப்பா?

பாண்டு: இது வெப்பம் குறைவா இருக்குற இடங்கள்தான் வளரும். ஐரோப்பா, சீனாவுல நிறைய வளருது. நம்ம ஊர்ல மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள்ல நிறைய வளருதுப்பா. ஊட்டி, கொடைக்கானல் போனா அங்க நிறைய பார்க்கலாம். ஊட்டி பேரிக்காய், கொடைக்கானல் பேரிக்காய், நாட்டுப் பேரிக்காய், வால் பேரிக்காய், முள் பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய்ன்னு நம்ம ஊர்ல இந்தப் பேரிக்காயை விக்கிறாங்க.

வாண்டு: ரோட்டுல சாதாரணமா இதை விக்கிறதால, எங்க வீட்டுல இதைப் பெரிசா வாங்குறதில்லைன்னு நினைக்கிறேன்.

பாண்டு: உண்மைதான். நிறைய பேரு அப்படித்தான் இதை வாங்காம விட்டுறாங்க. ஆனா, இதுல நிறைய சத்து இருக்கு. கிடைக்கிற இந்த சீசன்ல ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்.

வாண்டு: நிச்சயமா, இனி அந்தந்த சீசன்ல கிடைக்குற பழங்களை விடாம சாப்பிடுறேன்.

பாண்டு: இப்போதான் நீ சமத்து. அப்புறம், உங்க வகுப்புல இன்னைக்குக் கட்டுரைப் போட்டின்னு கேள்விப்பட்டேனே. என்ன கட்டுரைப்போட்டி?

வாண்டு: அதுவா? கட்டுரைப் போட்டி இல்லைப்பா. ‘ஜூனோ’ விண்கலன் பத்தி எழுதித் தரணும்னு டீச்சர் சொன்னாங்க?

பாண்டு: ஜூனோ’ விண்கலனைப் பத்தியா? அதைப் பத்தி அன்னைக்கு ஒரு நாள் படிச்சேன். ஆனா, ஞாபகத்துல எதுவும் இல்லை. அதைப் பத்தி புதுசா எதுவும் தகவல் இருக்கா?

வாண்டு: வியாழன் கிரகத்துல ஆய்வு செய்ய அமெரிக்காவோட நாசா விண்வெளி ஆய்வு மையம் 5 வருடங்களுக்கு முன்னால அனுப்புன விண்கலனோட பேருதான் ‘ஜூனோ’. பத்து நாளைக்கு முன்னால வியாழன் கிரகத்தோட சுற்றுப்பாதைக்குள்ளே அது போய்ச் சேர்ந்துச்சு.

பாண்டு: ஐந்து வருடங்களுக்கு முன்னால அனுப்புனது இப்போதான் போய் சேர்ந்துச்சா?

வாண்டு: ஆமா பாண்டு. பூமிக்கும் வியாழனுக்கும் கிட்டத்தட்ட 800 மில்லியன் தூரம். ஒரு மில்லியன்னா 10 லட்சம். அப்போ எவ்ளோ தூரம்னு பாத்துக்கோ. அங்க போனவுடன் அந்த விண்கலன் வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. அது அந்தக் கிரகத்தையும், அதோட 3 நிலாக்களையும் படம் எடுத்து அனுப்பியிருக்கு. அதுவும் வியாழன் கிரகத்துக்கும் அந்த விண்கலனுக்கும் கிட்டத்தட்ட 43 லட்சம் கிலோ மீட்டர் தூரம். அவ்ளோ தூரத்திலேர்ந்து படம் பிடிச்சிருக்கு. அந்தப் படத்துல வியாழன் கிரகத்தைத் சுற்றி வர்ற லோ, யூரோப்பா, கனிமேட் நிலாக்கள் குட்டியூண்டா தெரியுது.

பாண்டு: அம்மாடியோவ்? கேட்கவே வியப்பா இருக்குப்பா. ஜூனோ பத்தி நிறைய படிச்சிருக்க. அதைப் பத்தி நல்லா எழுது.

வாண்டு: நிச்சயமா பாண்டு. சரி, அப்புறம் பார்ப்போம். சரிப்பா.

பாண்டு: சரிப்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x