Published : 17 Jun 2017 10:42 AM
Last Updated : 17 Jun 2017 10:42 AM

செலவைக் குறைக்கும் ஸ்மார்ட் செங்கல்

கட்டுமானத்தில் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் விதமாக இன்று பல்வேறு விதமான மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் புரோத்தர்ம் ப்ளாக். இது செங்கல்லுக்கான மாற்றுப் பொருள். நவீன காலக் கட்டுமானத் தொழில்நுட்பக் கட்டிடங்களில் பயன்படுவதால் இது ஸ்மார்ட் செங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

வெய்னர்பெர்ஜர் என்னும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஹாலோ ப்ரிக்ஸ் வகையைச் சேர்ந்த கட்டுமானப் பொருள்தான் இது. தர்பூசணிப் பழத்தின் நுட்பத்தைப் போல இந்தச் செங்கல் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தர்பூசணியின் மேற்புறம் இளம் சூட்டுடன் இருக்கும். ஆனால், அதன் உட்பகுதி குளிர்ச்சியானதாக இருக்கும் இல்லையா? அதுபோலவே இந்தக் கட்டுமானக் கற்களும் வீட்டின் உட்பகுதியைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். களிமண்ணிலிருந்து இந்த வகைக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகைக் கற்களுக்குத் துளைகள் உண்டு. படுக்கை வசத்தில் துளையிட்ட கற்கள், மேல் வசத்தில் துளையிட்ட கற்கள் என இதில் இரு வகை உள்ளன.

இது பாரம்பரிய செங்கற்களைவிட எடை குறைவானது. கையாள்வதும் எளிது. அதனால் கட்டுமான நேரம் குறைவாகும். பாரம்பரிய செங்கற்களைவிட வெப்பம் தாங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இது சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருள். இந்தியப் பசுமைக் கட்டிட கவுன்சிலின் ஒப்புதல் பெற்றது. இந்தக் கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்களில் துளையிடுவது எளிது. இதனால் வீட்டுக்குள் ஏசி, எலக்ட்ரிக்கல்ஸ், உள் அலங்காரம் போன்ற வேலைகளைச் செய்வது எளிதாக இருக்கும். ஒரு ஸ்மார்ட் செங்கல்லின் விலை முறையே ரூ.42, ரூ.52, ரூ.62.

புரோத்தர்ம் ப்ளாக் கட்டுமானக் கற்களைப் பொறுத்தவரை இவை மரபான கட்டுமானக் கற்களிலிருந்து மாறுபட்டவை. இதற்குத் தனியான பொருத்தும் உபகரணங்கள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிது என்பதால் இது குறித்து விளக்கத் தொழில்நுட்பவியலாளர் ஒருவரைக் கட்டுமான நடைபெறும் இடத்துக்கு இந்நிறுவனமே அனுப்பி உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x